Home ஆவணங்கள் அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

715 Views

அது ஒரு அழகிய காலம்

அது ஒரு அழகிய காலம்!

– ஈழவன்

அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும், காடும், மலைகளும் என இயற்கை உறவாட நாமும் பணிந்து பயணித்தோம்.

இந்த அழகிய காலத்தில் எம்மோடு தோளோடுதோள் நின்று களமாடி கண்ணுறங்கும் மகத்தான உத்தம மாவீரச் செல்வங்களுக்கு முதற்கண் வீரவணக்கம். ஒன்றாய் உறவாடி, ஒன்றாய் பயிற்சி பெற்று, ஒரு தட்டில் உணவருந்தி, ஒரு இலட்சியப் பயணத்தில் தலைவன் வழியில் நாங்களும் ஒருவராக உறவாடிய காலம்.

எங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு உதைபந்தாட்டம், கபடி, கிளித்தட்டு, ஆகிய வற்றை பாசறையில் விரும்பி விளை யாடுவோம். பொறுப்பாளர்கள், புதியவர்கள் என்ற எந்த வித்தியாசங்களும் இல்லாமல் உற்சாகமாக விளையாடுவோம்.

குடும்பம் ஒரு நேர உணவிற்கே போராடும். ஆனால் தாய் நாட்டை விட எங்கள் குடும்பம் பெரிதாகத் தெரியவில்லை. வடக்கு, கிழக்கு என பல தளபதிகளோடு உறவாடினோம். ஒருநாள் பொறுப்பாளர் அண்ணாவை சந்தித்தோம். அப்போது அவரிடம் பல தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். அண்ணா உடுப்பு வழங்கி ஆறு மாதங்களாகிற்று என எமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்.

என்ன என்ன தேவை எனக் கேட்டார். உடனே அங்கிருந்த எல்லோரும் எங்களுக்கு தேவையானதைக் கூறினோம். அதனை தரம் பிரித்து நான்கு அணிகளாகப் பிரித்து. அதில் ஒரு அணி உள்ளாடை, மற்ற அணி சறம், மேலும்மோர் அணி காற்சட்டை, இறுதி அணி சேட் என பிரிக்கப்பட்டோம்.

உடனடியாகவே ஏற்பாடு செய்யப் போகிறார் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் அதோடு விடாது கிழிந்ததை அடையாளம் காட்டுமாறு கேட்டார். எல்லோரும் காட்டினோம். எங்களுக்கு மகிழ்ச்சி புதிய உடுப்புக்கள் கிடைக்கப் போகுது என்று. ஆனால் பொறுப்பாளர் அண்ணா கூறியது எம்மை வியப்பில் ஆழ்த்தியது.

வாகனத்திற்குள் இருக்கும் பை ஒன்றினை எடுத்துத் தருமாறு கூறினார். நாங்கள் உடுப்புக்கள் தான் வருகின்றது என எண்ணினோம். ஆனால் அது தையல் ஊசிப்பை. ஆளுக்கொரு ஊசி வழங்கப்பட்டது. குழுக்களுக்கு ஒரு நூல்பந்து என வழங்கிய போது எல்லோரும் சிரித்தபடி நன்றி என்று பொறுப்பாளர் அண்ணாவிடம் கூறினோம். அப்போது அவர் கூறிய வசனம் தான் எங்களை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.

கந்தலானாலும் கசக்கிக் கட்டு என்பதற்கிணங்க நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியபடி, “நாங்கள் ஒரு நேரம் சப்பிடும் உணவுகூட பல புலம்பெயர் மக்களது வியர்வைத் துளிகளில் கிடைப்பவை. வியர்வை, இரத்தம், கண்ணீர், இன்பம், துன்பம் என இணைந்து அவர்களது உழைப்பின் சிறு துளிகள் சேர்ந்து பல துளிகளாக இங்கு வருகிறது. ஆனால் உங்களுக்கு ஒன்றைகூற விரும்புகிறேன். உங்கள் நிலையே எனது நிலையும் இரண்டு வரி சீருடை இருப்பதால் அதனை ஐந்து வருடம் வரை அணிவேன். ஆனால் எங்கள் இலட்சியப் பயணத்தில் தமிழீழம் கிடைக்கப் பெற்றால், உங்களுக்கு எங்கள் மக்கள் விரும்பிய ஆடைகளை வாங்கித் தருவார்கள்” என்றார்.

இதனைக் கூறியபடி ஒரு போராளியை சுட்டிக்காட்டி இவருக்கு எல்லாம் இருக்கு என கூறினார். உங்களுக்கு வழங்கமுதல் சென்றவாரம் அவரது காற்சட்டை குலைந்திருப் பதைப் பார்த்தேன். அன்றே அவருக்கு ஊசி நூல் வழங்கி விட்டேன் என்றார். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. அதனை வைத்து அந்தப் போராளியை கிண்டல் செய்தோம். நகைச் சுவைகளோடும் விளையாட்டுக்களோடும் எங்களது சிந்தனை தலைவரது சிந்தனையில் ஊறிவிடும்.

இப்படி வாழ்ந்த நாம், சிறிது காலம் வேறு வேறு இடங்களில் பணியாற்றி, மீண்டும் ஒன்றிணைந்தோம். பலவகை சம்பவங்களின் பின் 2006ஆம் ஆண்டில் மீண்டும் வட போர்முனையின் யாழ். நடவடிக்கை தொடங்கப்பட்டது.

மரணம் எக்கணமும் வரலாம் என்று எல்லோரும் எதிர்பார்ப்போம். காரணம் ஒவ்வொரு வினாடியும் நாங்கள் மரணத்தை எதிர்பார்த்தே எங்கள் மக்களது விடிவிற்காக சமராடினோம்.

பல்லாயிரக் கணக்கான தேசப் புதல்வர்கள் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கி, என்றோ ஒரு நாள் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்ற கனவோடு வித்தான இந்தப் புனித மறவருக்கு நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகின்றோமென ஒவ்வொரு தமிழ் மக்களும் உங்கள் உள்ளத்தில் ஓர் கேள்வி கேளுங்கள்.

தாய், தந்தை, சகோதரங்கள் என வாழ்ந்தவர்கள்தான் அவர்களும். காதல், திருமணம் என்று தனக்கான சுயநலவாழ்வை அவர்கள்விரும்பி இருந்திருந்தால், இந்தத் தமிழினம் இப்போது சிங்களவர்களின் கொத்தடிமைகளாகி ஆண்டுகள் பல கடந்திருக்கும். ஏன் இதனை பதிவு செய்வதற்கு கூட நான் பிறந்திருப்பேனோ தெரியாது.

மாவீரர்களைப் பற்றி நாம் புதிதாக கூறித் தான் நீங்கள் அறியவேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் செய்த தியாகம் அளப்பெரியது. அவர்களோடு நின்று களமாடியவர் கள் இன்று புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் மாவீரர்களது பெற்றோர் எத்தனை பேர் இன்றும் உறங்க இடமின்றி உண்ண உணவின்றி தவிக்கும் நிலையில் உள்ளார்கள். அன்று கருவிகள் ஏந்தி அவர்களோடு நின்று சமராடியவர்கள் பலர் இன்று புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் அதே உணர்வுகளோடு அல்ல…..

எல்லோரையும் நான் இவ்வாறு கூறவில்லை உங்கள் உள்ளத்தின் எண்ணப் பகிர்வில் பொருத்தமானவர்கள் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் இந்தப் புலம் பெயர் மக்களது உதவியில் வாழும் பல மக்கள் இன்று தங்களது உறவுகள் செய்வதாக எண்ணி உங்களை ஆசீர்வதிக்கிறார்கள்.

எனது மகன் அல்லது மகள் செய்வதாக எண்ணி நான் மகிழ்சி அடைகிறேன் என்று அவர்கள் சொல்லும் போது அது தானே இந்த உலகில் நாம் அடையக் கூடிய மனநிறைவு. காரணம் அன்று செங்களம் ஆடிய என் பிள்ளை இன்று உங்கள் வடிவில் என ஒரு பெற்றோர் புகழும்போது அதைவிட நாம் எதனை இவ் உலகில் எமது இனத்திற்கு செய்து விடப் போகிறோம்.

இறுதியாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். தங்களது குடும்ப வாழ்வைத் துறந்து, தாயக விடுதலைக்காகப் போராடிய அத்தனை போராளிகளிடமும் பகிர்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும். ஆனால் ஒரு புது உடுப்பு கிடைக்கும் என நாம் காத்திருந்தபோது ஊசி நூல் கிடைத்தது என்ற இந்தப் பகிர்வு, உங்களது பணங்களைக் கவனமாக எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று எங்கள் தலைவர் சொல்லிக் கொடுத்தவர் என்பதனை உங்களுக்கு உணர்த்தும்.

அன்று எம்மை போற்றியவர்கள் இன்று எம்மைத் தூற்றி விடும்போது மரணத்திற்கு ஒப்பான வாழ்க்கையினை நாம் வாழ்கிறோம். இன்றும் எனது ஆசை மாவீர்களுடன் எங்கள் மண்ணுக்காய் மடிந்திருக்க வேண்டும் என்பதே.

தமிழீழம் கிடைத்தால், எங்கள் உறவுகள் உங்களுக்கு விரும்பிய உடைகளை வாங்கித் தருவார்கள் என்றதும், அப்போது நாம் உணர்ந்தோம். என்றோ ஒரு நாள் எங்கள் உறவுகளோடு கூடி மகிழ்ந்து கொண்டாடுவோமென்று. அந்தநாள் வரும் என்ற ஏக்கத்தோடு எத்தனை எத்தனை தோழர் தோழிகளை வித்துடலாய் விதைத்தோம்.

இந்தப் புனிதமான நாளில் எங்கள் கல்லறை வீரர்களின் கனவுகளை நினைவில் சுமந்து எங்களை நாங்கள் கேள்வி கேட்போம். அப்போதுதான் மாண்ட வீரர் கனவு பலிக்கும். முடிந்தால் தங்கமாலைக் கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள் நஞ்சு மாலைக் கழுத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்.

என்றும் ஈழக் கனவோடு. ஈழவன்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version