சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம்-செ.கஜேந்திரன்

kajan சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம்-செ.கஜேந்திரன்

சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக, இனப்படுகொலைகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தலை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

மாவீரர்களின் தியாகங்கள்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் பயணத்தில் உயிர்நீத்த ஆன்மாக்கள் மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை என்பது இன்று தென் இலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்களின் மூலம் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவுள்ளது.

எங்கள் மீது இனப்படுகொலை செய்து அந்த ராஜபக்ச சொந்த மக்களாலேயே துரோகி என்றும் கள்ளன் என்றும் கொலைகாரன் துரோகி என்றும் தூற்றப்பட்ட பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்சவும் விரைவிலேயே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம். அவர் வீட்டுக்குச் செல்வது மட்டுமல்ல அவர் மேற்கொண்ட இனப்படுகொலைக்காக சர்வதேச சட்டங்களின் முன் நிறுத்தப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்திருக்கின்றது. தங்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் இந்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் பிடியில் இருந்து வெளிவந்து ஒற்றையாட்சியை நிராகரித்து ஒரு தீர்வுக்காக ஒன்றுபட்டு இந்தியாவினுடைய கூலிகளாக இருக்கின்ற தமிழ் தலைமைகள் இந்தியாவுக்காக 13வது திருத்தச்சட்டத்தை முன்னெடுக்காது கை விட்டு ஒதுங்க வேண்டும்.

தமிழ் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கரத்தை பலப்படுத்தி சர்வதேச நீதியினைப் பெற்றுக் கொள்வதற்கும் தமிழ் மக்களின் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்

தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மேற்கொண்டு இன்றுடன் 13 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.

கோத்தபாய மகிந்த அரசானது தமிழ் மக்கள் மீது மாபெரும் இனப்படுகொலையினை அரங்கேற்றியிருந்தது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலராகவும் இருந்து இனப்படுகொலை அன்று அரங்கேற்றப்பட்டது.

அது ஒரு மாபெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கிறது அது உட்பட கடந்த74ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கமானது இனப்படுகொலையினை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்றிலிருந்து 18ஆம் தேதி வரை இனப்படுகொலை வாரம் நடைபெறுகின்றது இன்று அந்த இனப்படு கொலைவாரம் ஆரம்பிக்கின்றது 18 ஆம் திகதி இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது.

இனப்படுகொலைகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்துகின்ற காட்சிப்படுத்தல் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். நல்லூரில் தியாகி தீபம் திலீபனின் நிரைவிடத்தில் காட்சி படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்த காட்சி படுத்தலின்நோக்கம் எங்களுடைய இனத்தின் மீது சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இனப்படுகொலை வரலாற்றை எங்களுடைய இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் இந்த இனப்படுகொலைக்கு ஒரு நீதிக்காக நாங்கள் தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதும் அதற்கு தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த இனப்படுகொலையை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தின் முக்கியமான பொருளாகும் என்றார்.

Tamil News