Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும் பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும் | ஆசிரியர் தலையங்கம் |...

ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும் பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 196

ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும்
பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசிய பசிபிக் விடயங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் அவர்கள் கொழும்பில் மனித உரிமைகள் மற்றும் குடிசார் உரிமைகளின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆர்வலர்களைச் சந்தித்து இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் மற்றும் குடிசார் உரிமைகள் குறித்து கள ஆய்வு செய்து செப்டெம்பர் 12ம் திகதி அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் ஆரம்பமாகுமன்றே ஆணையாளரால் வாசிக்கப்பட்டு அன்றே விவாதிக்கபடவும் உள்ள அறிக்கைக்கு மேலும் தரவுகள் சான்றுகள் சேர்க்க வந்துள்ளார். இந்நேரத்தில் மனித உரிமைகள் வன்முறை குறித்த காட்டமான தீர்மானங்களை இலங்கைக்கு அனுசரணை செய்யும் நாடுகள் கொண்டு வராது தீர்மானத்தை மலினப்படுத்தல், இலங்கையின் இறைமைக்குள் தலையீடு அதனால் அதனை ஏற்க மறுத்தல் என்கின்ற ஜாதிக பெரமுனையின் கொள்கைகளை இன்றைய ஜனாதிபதி ரணில் (ராசபக்சா) மீள் புதுப்பித்தல் செய்து வருகின்றார்.
இங்குதான் சிங்களவர்கள் தங்களிடையுள்ள அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிங்கள பௌத்த தேசிய வாதத்தை நிலைநிறுத்துவதை மையப்படுத்தி ஒரே குழுவாக முன்னேறும் ஆற்றல் தெளிவாகிறது. ஆனால் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளோ ஒன்றபட்ட குரலில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனித உரிமைகள் வன்முறைகள் பற்றி எடுத்துரைக்கும் ஆற்றலற்றவர்களாக உள்ளனர். இதற்குக் காரணமாகப் பல குழுக்களாகத் தடுமாறுவதே அமைகிறது. இந்தத் தடுமாற்றத்தால் இம்முறையும் பல அறிக்கைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளதும் அல்லாமல் தனித்தனி சந்திப்புக்கள் சாட்சியளித்தல்களுக்கும் முயற்சிக்கின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் அனைத்துலக சட்ட விசாரணைகளில் இருந்து தப்புவதற்கு இலங்கைத் தமிழர்களின் இந்த பாழ்செய்யும் பல்குழுச் செயற்பாடே காரணமாகிறது.
சிறிலங்காவில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி என்பன முன்னேற்றம் அடைகின்றன எனக் காட்டும் அறிக்கைகள் தயரரிப்பது, இந்தியா, சீனா யப்பான் ரஸ்யா உட்பட்ட ஆசிய நாடுகளை தீர்மானத்தை மலினப்படுத்த உதவுமாறு வேண்டுவது எனப் பல்வகை உத்திகளில் சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதியும் இறங்கியுள்ளாரே தவிர நடைமுறையில் உள்ள தவறுகளை ஏற்று உரிய திருத்தங்களை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நெறிப்படுத்தலில் செய்ய அவர் ஆயத்தம் இல்லை.
இதனை 2023 முதல் 2027 வரை ஐந்தாண்டுகளுக்கான நிலைபேறான அபிவிருத்தி திட்ட ஒத்துழைப்புக்கள் உடன்படிக்கையில் கையொப்பமிட இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஓத்துழைப்பு பங்கொக் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன்கார் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்காவை, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, ஒருங்கிணைப்பாளர் ஆண்டரியாஸ் கர்பாதி ஆகியோருடன் சந்தித்துக் கலந்துரையாடிய பொழுதும் உணர முடிகிறது. இக்கலந்துரையாடல்களில் மனித உரிமைகள் மற்றும் குடிசார் உரிமைகள் உரிய முறையில் பேணப்பட்டாலே பொருளாதார அமைதி பொருளாதார வளர்ச்சி மறுசீராக்கம் அடையும் என்னும் கருத்தை அவர் எடுத்துரைத்துள்ளார். இதற்கு ரணில் தான் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கவுள்ள பயனுள்ள சீர்திருத்தங்களைச் செய்யவுள்ளார் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடனும், புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து இது தொடர்பில் பயணிப்பதற்கான திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் தாயகத்தில் உள்ள தமிழர்களுடன் பேசுவது தொடர்பான எதையும் கூறாதது அவரின் உள்நோக்கு ஏமாற்றுதல் என்பதை உறுதி செய்துள்ளது. பின்னர் டேவிட் மஸ்னெக்யன்கார் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்குள்ள பொருளாதார அபிவிருத்தி நிலைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கள ஆய்வொன்றை யாழ்ப்பாணத்தின் ஆளுநருடனும் அரசியல் தலைவர்கள் சமுகத்தலைவர்களுடனும் பேச்சுக்கள் நடாத்தியதன் மூலம் நிறைவு செய்துள்ளார். பொருளாதார அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மனித உரிமைகள் பேணப்படுவது முன்நிபந்தனையாக உள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் குறித்த தெளிவான விளக்கங்களைப் பெற்று பறந்தள்ளப்பட்டு பாதிப்புறுபவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை எவ்வகையில் உதவலாம் எனத் திட்டமிடுதலும் இவரின் நோக்காக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழ் அரசியல் தலைமைகள் பல குழுவாக உள்ளதால் தெளிவான மனித உரிமைகள் குறித்த காட்சியையோ பொருளாதாரத் தேவைகளையோ மனதிருத்துவது எந்தவொரு அனைத்துலக ஆய்வாளர்களுக்கும் மிகக்கடினமான ஒன்றாகவே தொடர்கிறது. டேவிட் மஸ்னெக்யன்காரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதற்கிடை ரணில் விக்கிரமசிங்காவின் பயனுள்ள 22வது திருத்தம் என்பது ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த சிவில் அதிகாரிகள் மூவரை நியமித்தல் என வெளித்தோற்றமளித்தாலும் இந்த சிவில் அதிகாரிகள் மூவரும் பாராளமன்றத்தின் பெரும்பான்மையால் ஏற்கப்பட வேண்டும் என்னும் விதியால் ஆட்சியில் உள்ளவர்க்கே அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் சட்டமாகிறது. 22.05.1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியுள்ளவர்கள் மக்கள் இறைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, சோல்பரி அரசியல் அமைப்பு 29(2) இன் சிறுபான்மை மதங்களுக்கு இனங்களுக்கு எதிரான சட்டங்களை இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றினால் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்னும் வலுவேறாக்கத்தை இல்லாமல் செய்து இலங்கைத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கியதன் மூலம் தொடக்கி வைத்தார் 1978இல் ஜே. ஆர். ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி ஒரு தனிமனிதரிடத்தில் அதிகாரக் குவிப்பு ஏற்பட வழி செய்தார். தற்பொழுது அவரின் உறவினரான ரணில் விக்கிரமசிங்கா மிக நுட்பமான முறையில் 22வது திருத்தத்தால் ஆட்சியாளர்களுக்கே உச்ச அதிகாரம் என்பதை உறுதி செய்கிறார். இந்நிலையில் இந்த அதிகார ஆட்சியில் இருந்து தமிழர் விடுபட தமிழர்கள் பாழ்செய்யும் பல்குழுவாக இயங்கும் நிலைக்கு முற்றுபுள்ளி வைத்து ஒரு குழுவாக தங்களின் மனித உரிமைகள் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்துக்கு தெரிவிக்கப் பழகவேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

ஆசிரியர்

Exit mobile version