Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் |...

தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 195

தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது

தைவானுக்கு கால் நூற்றாண்டின் பின்னர் நேரடியாக வருகை புரிந்த அமெரிக்காவின் மூன்றாம் நிலைத் தலைவரான 82வயதான மூத்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலசியின் வருகை தைவானின் சனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் அமெரிக்காவின் 1949ம் ஆண்டின் உறுதிப்பாட்டின் மீள் புதுப்பித்தலாக உள்ளது என அமெரிக்கா கூறியுள்ளது. ஆயினும் இரஸ்யாவின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்த உக்கிரேனை முன்னிலைப்படுத்தும் அமெரிக்கா தைவானைச் சீனாவின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்த மீளவும் முன்னிலைப்படுத்துப் போகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆயினும் சீனா ஒன்றுபட்ட சீனாவுக்குள் தைவானும் அடங்கும் என்ற தனது அரசியல் கொள்கையில் தான் உறுதியாக இருப்பதை உலகுக்கு உணர்த்த, அமெரிக்க கடற்படையினரின் முன்னிலையிலேயே கடலில் போர் ஓத்திகைப் பயிற்சியினை போர்த் தாக்குதல் போலவே தைவானை அச்சப்படுத்தக் கூடிய முறையில் வெற்றிகரமாக நடாத்தி “நெருப்பில் கையை வைத்தால் நெருப்புச் சுடவே செய்யும்” என்ற எச்சரிக்கையையும் வெளிப்படையாக அமெரிக்காவுக்கு விடுத்துள்ளது. இந்த சீன அமெரிக்க மோதலின் நீட்சியாகவே சீனாவின் யுவான் வாங் புலனாய்வுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டையில் ஆகஸ்ட் 16ம் திகதி நங்கூரமிடப்போகிறது. சிறிலங்காவையும் அமெரிக்கா சீன எதிர்ப்புக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தைவானைப் போலவே பயன்படுத்த முடிவு எடுத்து விட்டதை எதிர் கொள்ளும் சீன முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் யூலிசங் ஸ்ரீலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுடனான சந்திப்பில் “இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுதல், இலங்கையில் எல்லா மக்களதும் சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பேணுதல், பேச்சுச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளியிடும் போராட்ட உரிமைகளை உறுதிப்படுத்தல்” என்பன அமெரிக்காவின் சிறிலங்கா குறித்த செயற்பாடுகளாக அமையும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வுரையாடல் எவற்றுக்கு ஊடாக எப்படி அமெரிக்கா சிறிலங்காவில் செயற்படப்போகிறது என்ற சட்டகமாகவும் அமைந்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த சட்டகத்தை உடைக்கும் வகையிலேயே ரணிலின் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் செயற்பட்டு வருகிறது. மே 9ம் திகதிக் காலகட்டத்தில் 853 குற்றச்செயல்களில் ஈடுபட்டார்களென 3310 அரகலய போராட்டக்காரர்கள் கைதாக்கப்பட்டு 1182 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது சிறிலங்கா தமிழர்களது மனித உரிமைகளை மட்டுமல்ல சிங்கள மக்களது மனித உரிமைகளையும் வன்முறைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி என்பதை மீள்உறுதி செய்துள்ளது. அதே வேளை 12.08. 2022 உடன் 2000ம் நாட்களாக, 168 பேர் உயிரிழந்த போராட்டமாகத் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது மரணசான்றிதழ் பெறுங்கள் என்றால் யார் கொலை செய்தார்கள் எனக் கூறுங்களேனென நீதிக்காகப் போராடும் தமிழன்னையர் தந்தையர் அறவழிப்போராட்டத்தை ஏறெடுத்துப்பாராத அரசாகவே ரணிலின் அரசும் தொடர்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா தனது செல்வாக்கை இலங்கையில் நிலைப்படுத்த ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதையே தனது முதல் ஆயுதமாகப் பயன்படுத்தும் என்பது வெளிப்படை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து அனைத்துலக நாணய நிதியத்தினது கடன்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி. பி. எஸ் வரிச்சலுகைகளையும் பெறத் தகுதிபெறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை அனுசரித்து நடக்குமாறு வற்புறுத்தியுள்ளரர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும் 58 சிறிலங்காப்படை அதிகாரிகள் மனித உரிமைகள் வன்முறைகளுக்காக உடன் கைதுசெய்யப்பட வேண்டியவர்களாக உள்ளனர் எனப் பகிரங்கமாக மீளவும் அறிவித்துள்ளார். இது செப்டெம்பரில் தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நிச்சயமாக சிறிலங்காவை மேற்கை நோக்கித் திருப்பும் முயற்சியாகவே அமையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேற்குலகை தங்கள் பக்கம் இழுக்கும் சிறிலங்காவின் முயற்சியாக நீதி சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாசா நல்லிணக்கம் மனித உரிமைகள் மறுசீரமைப்பு இவற்றில் சிறிலங்கா முன்னேறியுள்ளதெனக் காட்டும் அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார். ஆயினும் தமிழர்கள் இச்சூழலை தமக்குச் சாதகமாக எதிர்கொள்ள ஒன்றுபட்ட அணியில் ஒரு குரலில் பேச 13வது ஆண்டிலும் இயலாதவர்களாகவே உள்ளனர். பொருத்தமான நேரத்தில் யாழ்ப்பாண சமுக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் தலைவர் மூத்த அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் அவர்கள் விடுத்துள்ள எமது தேசியத்தின் தேவைகளை முன்னிறுத்தக் கூடிய தமிழர் தரப்பினரின் ஒன்றுபட்ட தளமொன்று உடன் கட்டப்பட வேண்டும் என்ற அழைப்பு மிக முக்கியமாகிறது. இவ்வமைப்பு எந்த அரசியல்வாதிகளையும் உள்ளடக்காத மக்கள்மன்றமாக அமைதலின் அவசியத்தையும் அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்
இதற்கிடையே தமிழர்களை மீளவும் பயங்கரவாதிகளாக உலகநாடுகள் முன் சித்திரிக்கும் நோக்கிலும், இனவெறிக்கலவரங்களைத் தூண்டும் போக்கிலும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சிறிலங்கா பாராளமன்றத்தில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனப்பேசியுள்ளார். தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்னதான 1983ம் ஆண்டு ஆடி இனஅழிப்பில் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகள் கடைகள் தொழிற்சாலைகளின் பல மில்லியன் டொலர் இழப்பை விட பல மடங்கு அதிகமான இழப்பை 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படது முதல் 1983க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் வடக்குகிழக்கில் தமிழர்களின் வீடுகளை கடைகளை தொழிலகங்களை அழித்ததின் மூலம் சிறிலங்காப்படையினர் செய்துள்ளனர் என்பதையும், சிறிலங்கா தான் தன் குடிகளான தமிழர் மேல் போர்நடாத்தப் பெற்ற கடன்களாலும், அதற்கான வட்டிகளைக் கட்டப்பெற்ற கடன்களும், இன்றும் படைகளுக்கென ஒதுக்கும் நிதிகளாலுமே இலங்கைப் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றதென்பதை பிரசன்ன ரணதுங்கா போன்றவர்களுக்கு வெளிப்படுத்தி இனியும் அவர்களால் உலகை ஏமாற்ற முடியாதென்பதை உள்நாட்டு அரசியலிலும் உறுதிப்படுத்தத் தமிழர்தரப்பின் தேசிய பொதுத்தளம் அவசியம் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது

ஆசிரியர்

Exit mobile version