டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது.

இவர்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐம்பது பெண்கள் டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் சிக்கித் தவிக்கின்றனர், மீதமுள்ளவர்கள் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் நலிந்த விஜேரத்ன தெரிவித்தார்.

டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.