Tamil News
Home செய்திகள் இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பதைவிட மலையக தமிழர் என அடையாளப்படுத்துவதே சால சிறந்தது- அருட்தந்தை...

இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பதைவிட மலையக தமிழர் என அடையாளப்படுத்துவதே சால சிறந்தது- அருட்தந்தை மா.சத்திவேல்

இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பதைவிட மலையக தமிழர் என அடையாளப்படுத்துவதே இன அடையாளமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

சிவில் சமூகத்தினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியால் தொகுக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசை கோரிக்கை மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகள் மலையக தேசிய அரசியல் நோக்கி ஒன்றிணைந்து இருப்பது வரவேற்கத்தக்கதே. இந்த பயணம் தொடர வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மேலும் ஆழப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இலங்கை வாழ் அனைத்து இனங்களும் சிங்களவர்கள் உட்பட அனைவரும் வந்தேறு குடிகளே.

அவர்கள் அனைவரும் தம்மை இலங்கை தமிழர், சிங்களவர், முஸ்லிம் என அழைக்கும் போது இறுதியில் வந்து நாட்டை எல்லா வகையிலும் பாதுகாத்து உயர்ந்திட உழைப்பாலும், உதிரத்தாலும், உயிர் தியாகத்தினாலும் தம்மை அர்பணித்து வாழ்வு போராட்டம் நடத்தும் மக்கள் சமூகம் இந்திய வம்சாவளி என அடையாளப்படுத்தி இந்த நூற்றாண்டிலும் மண்ணுக்கு தூரமாக்கிக் கொள்ளவேண்டுமா? தூரமாக்கி வைப்பதன் அரசியல் இலாபம் என்ன? இவ்வாறு தம்மை அடையாளப்படுத்துவோர் இந்தியாவில் வர்த்தக மற்றும் நிலபுலன்களுடைய சிறு தொகையினராக இருக்கலாம்.

இந்தியாவோடு அரசியல் செய்வோராக இருக்கலாம். இவர்களுக்காக பெரும்பான்மை மலையக தமிழர்களின் விரும்பினை குழி தோண்டி புதைப்பது அரசியல் அநீதியாகும். இதற்கு காரணம் அவர்கள் குரல் அற்றவர்களாக இருப்பதே.

மலையக மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகள் என குறிப்பிட்டாலும் மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என அடையாளப்படுத்தாது iv ல் தனித்துவ அடையாளம் கொண்ட அங்கமாக, மலைய சமுதாயம். என குறிக்கப்படுவதை கௌரவ இழப்பாகவே சிந்திக்கத் தூண்டுகின்றது.

அடுத்ததாக மலையக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய, ஊவ, சப்பிரகமுவை பிரதேசங்களுக்காக தனி அதிகார அலகும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக தமிழர்களின் தேவை கருதி தனி அலகோடு இணைப்பதற்கு நிலவரம்பற்ற அவர்களை இணைப்பதற்கான சமூக சபையுமே அவசியமாகும்.

வெளிவந்துள்ள சமூக சபைக்கான முன் மொழிவு அரசியல் கட்சிகளின் அரங்கமாகவே உள்ளது. அத்தோடு புதிய பதவிகளை தமதாக்கிக் கொள்ளும் இடமாகவும் உள்ளது. மலையக கட்சி அரசியல்வாதிகளுக்கு தம்மை ஓரங்கமாக இணைத்துக் கொள்வதற்கு வேறு பல தளங்கள் உள்ளன.

உள்ளூராட்சி மன்றங்கள், அதேபோன்று நாடாளுமன்றம் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் மலையக அரசியல் கட்சி உறுப்பினர்களாக வருடம் ஒரு முறையோ இரண்டு முறையோ சுயமாக ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு.

விரும்பினால் மலையக அரசியல் எதிர்காலம் கருதி அத்தகைய சந்தர்ப்பங்களை அவர்களால் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆனால் மலையக சமூக சபை 50 வீதம் சமூக செயற்பாட்டாளர்களையும், புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருத்தல் வேண்டும்.

இலக்கம் 18ல் “சமூக சபை தமக்கு ஆலோசனை வழங்க தகைமை வாய்ந்த விற்பனர்கள் அடங்கிய அதிகார பூர்வமான சான்றோர் குழு ஒன்றை பெயரிட்டு நியமிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஆலோசனை வழங்குபவர்களே தவிர அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. எமக்குத் தெரியும் நாட்டின் யுத்த காலத்தில் “யுத்த வேண்டாம்” என பொருளாதார அரசியல் விற்பனைகளால் அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அதைக் கேட்கவில்லை. அதேபோன்று அண்மையில் இரசாயன உரம் தடை செய்யப்பட்ட போது “தடை செய்ய வேண்டாம்” என குரல் எழுப்பிய போதும் அக்குரல் கேட்கப்படவில்லை. இந்த நிலையில் சமூக சபையில் அதிகாரம் அற்றவர்களாக ஆலோசர்கள் நியமிக்கப்படும் போது பலன் என்ன?

சமூக சேவைக்கு தேர்தல் நடக்காது முதலமைச்சர் துணை முதலமைச்சர் நியமனம் என்பது சபையில் கட்சிகளின் போட்டி நலமாகவும் அமையலாம் பொதுத் தேர்தல் இல்லாவிட்டாலும் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சி கூட்டணி போட்டித் தன்மையை அங்கு உருவாக்கிவிடும் போட்டி தவிர்ப்பதற்கான வழிகள் உண்டா முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர், புத்திஜீவிகள்,  கல்விமான்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். சபை அமர்வுகள் தமிழ் மொழியிலேயே நடத்தப்படல் வேண்டும். மத்திய மற்றும் மாகாண உள்ளூராட்சி அரசு நிர்வாகங்களோடு உறவாடுவதற்கான மொழியாக சகோதர மொழிகளை பயன்படுத்தலாம்.

இலக்கம் 16ல் “தாம் பிரதிநிதித்துவம் செய்யும் இனங்கள் சார்பாக பின்வரும் துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டங்களை கண்காணிக்க, இடை நுழைய, பங்கு பற்ற, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க சமூக சபைகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. வேறு இன சமூக சபைகள் உருவாக்கத்திற்கு வழிவகுக்குமா?அது வேறு இனங்களை கொண்டுதான் இயங்குமா? அவர்களை எவ்வாறு வாங்கப்படுவார்கள்.

விளக்கம் 18ல் “தகைமை வாய்ந்த விற்பன்னர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வமான சான்றோர் குழு ஒன்றை பெயரிட்டு நியமிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இது மீண்டும் கட்சிகளின் போட்டிக்கு வழி வகுக்கலாம். இவர்களை முன்மொழிவோர் யார்?

மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை மூட பெற்றுக்கொள்ள இடைநிறுத்த இயங்கி விடாது நீண்ட நாட்களுக்கு தடுத்து வைத்திருக்க மத்திய அரசாங்கத்திற்கு 15-ம் திருத்தத்தில் இடம் உள்ளது இத்தகைய 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கூறும் போது அதிக சட்ட ஓட்டைகள் நிறைந்த ஒன்றினை திருத்தங்கள் இல்லாது மீண்டும் அமுல் செய்ய வேண்டும் என்பதற்கு பின்னாலே அரசியல் உள்ளதாகவே தோன்றுகின்றது.

மலையக அரசியல் அபிலாசைகள் தொடர்பில் மேலும் பல்வேறு தளங்களில் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும். மலையக மக்களின் அரசியல் இலக்கு அடுத்த நூற்றாண்டை நோக்கி நகர வேண்டுமானால் அதற்கான சரியான அடித்தளத்தினை இடவேண்டும் அதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலுக்கான முன் மொழிவாக இதனை கருதி முன்மொழிந்துள்ள கட்சிகள் தமிழ் கட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உருவாக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். அதன் பின்னரே இறுதி வடிவம் பெறல் வேண்டும். சட்ட நுணுக்கவியலாளர்களின் ஆலோசனைகளும் அவசியம்.-  என்றார்.

Exit mobile version