காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்- உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக நீதி கிடைக்காது-ஞா.சிறிநேசன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையே சந்திக்க விரும்பாத நிலையில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் இருக்கையில், அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வி யெழுப்பியுள்ளார்.

மட்டு .ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் மட்டுவில்லில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரைச் சந்தித்து தங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக்காட்ட முற்பட்ட போது  காவல்துறையினர் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டார்கள்.

இது மிகவும் மன வேதனையான விடயம். இப்படியான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவது மிகவும் அறிவீனமான ஒரு செயலாகத் தான் இருக்கும். அந்த உறவுகளையே சந்திக்க விரும்பாத நிலையில் ஜனாதிபதி பிரதமர் இருக்கையில் அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நாங்கள் நினைப்போமாக இருந்தால் எம்மைப் போன்று அறிவீனமானவர்கள் இருக்க முடியாது.

அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச பொறிமுறை மூலம் தான் நீதி கிடைக்குமே தவிர, உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக நீதி கிடைக்காது என்பது தான் நாங்கள் கடந்த காலங்களில கற்றுக் கொண்ட படிப்பினை” என்றார்.