Home உலகச் செய்திகள் இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை தமிழில்: ஜெயந்திரன்

இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன்

இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை: இஸ்ரேல் அரசு எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவுக்கு இஸ்ரேலின் மிகைப்படுத்தல்களும் பழமைவாய்ந்தவை. இங்கு ஒரே விடயம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பது மட்டுமன்றி அரசியல் முன்னெடுப்புகளை விட இராணுவ நடவடிக்கைகளுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்ற இஸ்ரேலின் இருப்புக்கும் செயலாற்றும் வழிமுறைக்கும் இந்த மிகைப்படுத்தல் துணைபோகின்றது. அது கேலிக்குரியது, விநோதமானது என்பதற்கு அப்பால் வெறும் வாய்ப்பேச்சைக் கடந்து பாலஸ்தீனத்திலும் மத்திய கிழக்கிலும் அந்த நாட்டின் மூலோபாயத்தை அது வடிவமைக்கிறது என்பதனால் அது ஆபத்தானதாகவும் இருக்கிறது.

‘அச்சுறுத்தல்கள்’, ‘பாரிய அச்சுறுத்தல்கள்’ எனக்கூறி, பல பத்து ஆண்டுகளாக ‘இருப்பியல் அச்சுறுத்தல்கள்’ என்று தமக்கிருக்கின்ற அச்சுறுத்தல்களை இஸ்ரேல் மிகைப்படுத்தி, புதிது புதிதாக உருவாக்கி வந்திருக்கிறது. ஆபத்து ஒன்று ஏற்பட முதலே அதனை இல்லாது அழிக்கின்ற போர்களையும் முன்னெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைத் தொடர்ந்து வைத்திருப்பதை நியாயப்படுத்தவும் இஸ்ரேல் இந்த அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இஸ்ரேல் தேசத்தை அழித்தொழிக்க கங்கணம் கட்டிநிற்கும் ‘வெறுக்கத்தக்க பயங்கரவாதிகளாக’ பாலஸ்தீனர்களையும் அரபு மக்களையும் அது சித்தரித்தது. அணு ஆயுதங்களைத் தயாரித்து அவற்றைப் போரில் பயன்படுத்த  ஈரான்     கொண்டிருக்கக்கூடிய ஆற்றலை அது மிகைப்படுத்திக் கூறியது. அந்த நாட்டை விமர்சிப்பவர்கள் மேல் ‘யூதர்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மிக அண்மைக்காலத்தில் அவர்களுக்கு குரல்தரவல்லவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் சுமத்தி வருகிறார்கள்.

இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை குறிப்பாக அதன் 1967ம் ஆண்டு போர் வெற்றி மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் மிகக் கனகச்சிதமாகப் பரப்பியது மட்டுமன்றி, மிகைப்படுத்தலை ஒரு ஏமாற்றுக் கலைவடிவமாகவும் அச்சுறுத்தும் செயற்பாடாகவும் பரப்புரை யாகவும் மாற்றி இருக்கிறது. தனது தேசிய பாதுகாப்புக்காகவும் இருப்புக்காகவும் தமது சட்ட விரோதமான, மோசமான முற்றுகைகளையும், ஆக்கிரமிப்புகளையும், கூட்டாக மக்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதையும் கொலைகளைச் செய்வதையும் ஆபத்தை இல்லாமற் செய்ய போர்புரிவதையும் தவிர தமக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை என்று அது தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பிரதேசத்தில் ஒரு பாரிய குடியிருப்பு விரிவாக்கலை அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் உள்ள முக்கிய ஆறு மனித உரிமைக் குழுக்களை ‘பயங்கரவாத அமைப்புகளாக’ இஸ்ரேல் பட்டியலிட்டிருக்கிறது. பெருமளவில் புனையப்பட்ட ஒரு கதையாகவும் அதே நேரத்தில் எந்தவித ஆதாரமும் அற்றதாக இருக்கும் இந்த அறிவித்தல், பாலஸ்தீனர்களை தம்மைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளி, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம் போன்றவற்றிலிருந்து பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறது.

இந்த இரண்டு முடிவுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்றவர் இஸ்ரேலின் ஜெனரலும் அதே வேளையில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்ற பெனி கான்ட்ஸே  (Benny Gantz) அன்றி வேறு யாருமல்ல. 2014ம் ஆண்டில் காஸாத் துண்டில் (Gaza Strip) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியது மட்டுமன்றி, 500 சிறுவர்கள் உட்பட 2000 பாலஸ்தீனர்களின் சாவுக்குக் காரணமாகிப் போர்க் குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றஞ்சாட்டப்படுகின்றார். தான் 1364 பயங்கரவாதிகளைக் கொன்றதாக வீறாப்புப் பேசி அந்தப் பிணக்குவியலின் மேல் நின்று 2019ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

பாலஸ்தீனர்களைத் தீர்ப்பிட இப்படிப்பட்டவருக்கு என்ன அருகதை இருக்கிறது? உண்மையில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிட ஆக்கிரமிப் பாளர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

உண்மையில் அவர் தனியே இல்லை. இவர்கள் சிந்தை குழம்பியவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்ரேலின் முன்னைய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, (Benjamin Netanyahu) தற்போதை பிரதமர் நவ்தலி பெனற் (Naftali Bennett) ஆகியோரும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. 2015ம் ஆண்டில் அதீத சமயவாதியாகவும் குடியேற்றங்களை நிறுவுபவராகவும் கல்வி அமைச்சராகவும் இருக்கின்ற பெனட், இஸ்ரேலின் ஒரு மிதவாத சகாவான அதிபர் மஹ்மூட் அப்பாஸை (Mahmoud Abbas) ‘ஒரு பயங்கரவாதி’ என அழைத்ததோடு, இஸ்ரேல் அவருடன் பேச்சுவார்த்தைக்குப் போகக்கூடாது என்றும் கர்ச்சித்தார். இன்று, பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் பெனட், அப்பாஸைப் பகிஷ்கரித்து, பாலஸ்தீனர்களுடன் பொருள் நிறைந்த ராஜீய உறவைத் தவிர்த்து வருகிறார். இஸ்ரேல் இழைத்த போர்க்குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததற்காகவும் அவர் பாலஸ்தீன அதிபரைத் தண்டித்து வருகிறார்.

இஸ்ரேல் மிகைப்படுத்திக் கூறுவது மட்டுமன்றி, தான் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதக் குற்றச்சாட்டையும் மறுத்து வருகிறது. அணுசக்தி தொடர்பான விடயங்களிலும் இஸ்ரேல் இதே செயற்பாட்டையே செய்கிறது. இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இரகசியமாக அணுவாயுதங்களைத் தயாரிப்பதாக ஈரானுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்தி, ஈரானுக்கு எதிராக முற்றுமுழுதான தடைகளைப் போடவேண்டும் என்றும் ஈரான் ஆட்சியாளருக்கு எதிராகப் போர் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பரப்புரை செய்துவருகின்றார். 1998, 1999, 2000, 2004, 2005, 2010, 2011, 2013, 2014, 2015 போன்ற ஆண்டுகளில் ஈரான் ஒரு குண்டைத் தயாரிக்கும் என்று கூறியது மட்டுமன்றி, அந்தக் குற்றச்சாட்டை வருடாவருடம் புதுப்பித்தும் வந்திருக்கிறது.

ஈராக் நாட்டுக்கு எதிராகச் செய்தது போல ‘தீய ஈரானுக்கு’ எதிராகத் தாக்குதலைத் தொடுக்க, மேற்குலக சக்திகளை தூண்டுவதில் நெத்தன்யாகு தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் அதே வேளையில், ஈரானுக்கு எதிராக மோசமான தடைகளைக் கொண்டுவரும் பொருட்டு அந்த நாடுகளை அச்சுறுத்துவதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தலை மிகைப்படுத்திக் கூறுவதன் மூலம் இஸ்ரேலின் அணுவாயுத ங்களைப் பற்றி உரையாடுவதைத் தவிர்த்து, எந்தவிதமான நிதியையும் செலவிடாது, அந்தப் பிரதேசத்தில் இஸ்ரேலின் இராணுவ மேலாண்மையை உறுதிப்படுத்தி, ஈரானுக்கும் அதனது நட்புநாடுகளுக்கும் எதிராகச் செயற்பட இஸ்ரேலுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் சொல்லி வந்திருக்கிறார்.

அப்படிப் பார்க்கும் போது நண்பர்களாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி மிகைப்படுத்துதல் இஸ்ரேலுக்கு அனுகூலமானதாகவே அமைந்திருக்கிறது. தனது நட்புநாடுகளுடனான உறவில், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவில் இந்த மூலோபாயம் அதற்கு வெற்றியளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

மிக அதிகமாக இஸ்ரேல் சார்பாக இருந்த இரண்டு அமெரிக்க அதிபர்கள்  றொனால்ட் றேகன் (Ronald Regan), ஜோர்ஜ் டபிள்யூ புஷ் (Geoorge W. Bush) போன்றவர்கள் தொடர்பான இஸ்ரேலின் கூச்சலை இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறி, ஈராக்கின் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட போதும், பல அப்பாவிப் பொதுமக்களின் சாவுக்குக் காரணமாக அமைந்த பெய்ரூத்தில் அமைந்திருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பணிமனையின் மேல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட போதும், சிரியாவின் கோலன் ஹைட்ஸை (Syrian Golan Heights) தமது நாட்டின் ஒரு பகுதியாக இணைத்த போதும், றேகன் நிர்வாகம் இஸ்ரேலைத் தண்டிக்கும் நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டிருந்தது. அப்போது தமது நாட்டை மிக மோசமாக நடத்துவதாகவும் யூத மக்களுக்கு எதிரான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் 1981ல் பிரதம அமைச்சர் மெனாச்செம் பெகின் (Menachem Begin) அமெரிக்கா மீது குற்றஞ்சுமத்தினார்.

தனது தண்டனைச் செயற்பாடுகளை அமெரிக்கா மீளப்பெற்றதும், அமெரிக்க உதவியை மிக அதிகமாகப் பெறுகின்ற ஒரு நாடாக இஸ்ரேல் மாறியதுடன் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்புநாடாகவும் இஸ்ரேல் மாற்றம் அடைந்தது. இச்செயற்பாடுகளினால் வலுவடைந்த இஸ்ரேல், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் தோரணையில் லெபனானை முற்றுகையிட்டது. இந்த முற்றுகையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களும் லெபனானியர்களும் இறந்தது மட்டுமன்றி, தென் லெபனான் 18வருட ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியிருந்தது.

2001ம் ஆண்டில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோளக் கூட்டணியை அமைக்க புஷ் நிர்வாகம் திட்டமிட்ட போது, எப்படி இரண்டாம் உலகப் போர் தொடங்கவிருந்த நேரத்தில் ஐரோப்பிய சனநாயக நாடுகள் ஹிட்லருடைய கொள்கைகளுக்கு இணங்கிப் போனார்களோ, அதே போல இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளுடன் அமெரிக்கா இணங்கிப் போவதாக போர்த் தளபதியும் பிரதம அமைச்சருமான ஏரியல் ஷரோன் (Ariel Sharon) இருபது வருடங்களுக்குப் பின்னர் எச்சரிக்கை செய்தார்.

தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில், வோஷிங்டன் முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோளப்போரில், அதன் மிக நெருங்கிய சகாவாக இஸ்ரேல் மாற்றமடைந்ததுடன் தனது செல்வாக்கான நிலையைப் பயன்படுத்தி, பாலஸ்தீனாவின் இரண்டாவது கிளர்ச்சியை வன்முறையின் உதவியுடன் அடக்கியது.

“இஸ்ரேலை ஒட்டுமொத்தப் படுகொலைக்கு உள்ளாக்கக்கூடிய மிக ஆபத்தான ஒரு ராஜீய உறவில் ஈரான், பாலஸ்தீனா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ஈடுபடுவதாகக்” கூறி, 2010ம் ஆண்டில் அதிபர் பரக் ஒபாமாவை (Barrack Obama) இஸ்ரேல் அவமானப்படுத்தியது. இஸ்ரேலின் இந்த மிகைப்படுத்தும் செயற்பாட்டால் சலனமடைந்த அதிபர் ஒபாமா இஸ்ரேலுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அதிகரித்து, இஸ்ரேலிய பாதுகாப்புக்கு உதவியதுடன் 38 பில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த இராணுவ உதவியை வழங்குவதாகவும் வாக்களித்தார்.

தனது ஐரோப்பிய நட்பு நாடுகளையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. 2015ம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய அவிக்டோர் லீபர்மான் (Avigdor Lieberman) பாலஸ்தீன அரசுக்கு ஆதரவளித்ததற்காக 1938ம் ஆண்டில், நாஸிப்படைகளிடம் செக்கோஸ்லாவாக்கியா வீழ வழிவகுத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு, ஐரோப்பிய நாடுகள் தம்மைக் காட்டிக்கொடுப்பதாகவும் யூதர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் அந்த நாடுகள் மேல் குற்றஞ்சுமத்தினார்.

இவ்வாறாகப் பார்க்கும் போது, இஸ்ரேலிய மிகைப்படுத்தல்கள் அந்த நாட்டுக்கு வெற்றியளிப்பதாகவே அமைந்திருக்கின்றன. இந்த மிகைப்படுத்தல்கள் அதன் மேற்குலக ஆதரவாளர்களை இன்னும் வலுப்படுத்தியதுடன் மேற்குலக நாடுகளின் தலைவர்களை அச்சுறுத்தி, இஸ்ரேலுக்கு எதிராகப் பேசுவதைத் தவிர்த்து, இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேச அந்த நாடுகளுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. இதனால் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு இணங்கி, இஸ்ரேல் முன்னெடுத்த போர்கள் இழைத்த குற்றங்கள் போர்க்குற்றங்கள் என்பவற்றுக்குப் இந்த நாடுகளும் பங்குதாரர்களாக மாறியிருக்கின்றன.

இஸ்ரேலுக்கு இருக்கும் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடுவது இந்த ஆக்கத்தின் நோக்கம் அல்ல. தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக அதன் மிகைப்படுத்தல்கள் அதன் எல்லைகளை விரிவாக்கவும் ஏனைய நாடுகளை அடக்கியாளவுமே   அதற்கு  உதவியிருக்கின்றன.

உண்மையைச் சொல்வதாயின் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே வியாபித்திருக்கின்ற மிகைப்படுத்தல்களின் ஒரு தொடர்ச்சியாகவே இஸ்ரேலின் மிகைப்படுத்தலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருசில ஈரானிய, பாலஸ்தீன நாடுகளிலுள்ள சனரஞ்சகவாதிகள் போன்றவர்களின் அச்சுறுத்தல்கள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த போதிலும், ‘பாதிக்கப்படுபவர்கள்’ என்றும் எப்போதும் தம்மைக் காட்ட முயலும் இஸ்ரேலின் மிகைப்படுத்தலின் பின்னால் அவர்களது போர்க்குணமே மறைந்திருக்கிறது.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version