இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் – இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும்ஜன்னா ஜிஹாத் பாலஸ்தீனாவின்  மேற்குக்கரைப் பிரதேசத்தில் நபி சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து வயது நிரம்பிய ஒரு ஊடகவியலாளர். ஏழு வயதாக இருக்கும் போதே தனது தாயின் அலைபேசியில் காணொளிகளைப் பதிவுசெய்யத் தொடங்கியவர். பன்னிரண்டு வயதில் ஓர் ஊடகவியலாளராகப் பதிவுசெய்து, அதற்குரிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட போது உலகிலேயே மிகவும் வயதுகுறைந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்டவர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பாலஸ்தீனத்துக்குள் வாழும் சிறுவர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்புறுத்தல்களை காணொளி வடிவில் பன்னாட்டுச் சமூகத்துக்கு எடுத்து வருவதில் ஜன்னாவின் பங்கு அளப்பரியது. பாலஸ்தீனத்துக்குள் வாழும் சிறுவர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்புறுத்தல்களை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும் என்ற இந்த ஜன்னாவின் அண்மைய ஆக்கத்தின் மொழியாக்கத்தை இங்கே தருகிறோம்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும்இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும்பாலஸ்தீனிய சிறுவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகில் பலருக்குத் தெரியாது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் காரணமாக ஒவ்வொரு கணமும் எமது வீடுகளில் நாம் சந்திக்கின்ற பாதுகாப்பற்ற உணர்வையும், ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக்கரைப் பிரதேசத்திலுள்ள நபி சாலா (Nabi Saleh) என்ற கிராமத்தில் நான் வளர்ந்தேன். எனக்கு ஏழு வயதான போது, எனது அம்மாவின் அலைபேசியில் எமது வாழ்க்கை தொடர்பான காணொளிகளைச் செய்து சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.

எமது நாளாந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எனது குறும்படங்களில் நான் காண்பிக்க முயற்சிக்கிறேன். இரவில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் சோதனைகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் சத்தங்கள், எங்கள் யன்னல்களுக்கு அருகாக மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள், அல்லது இஸ்ரேலியப் படையினர் எங்கள் வீடுகளுக்குள் நுழைகின்ற காட்சிகள் போன்றவற்றை நான் படமாக்குகிறேன். ஒரு முறை நான் திடீரென தூக்கத்தை விட்டு எழுந்த போது, ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரன் எனது அறைக்குள் வந்திருப்பதையும் தனது துப்பாக்கியால் எனது விளையாட்டுப் பொருட்களை உடைத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன். அதுமட்டுமன்றி தனது துப்பாக்கியை அவன் எனது தலையின் மேல் வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.

இந்த வாரம் உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கெடுக்கின்ற அதே வேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வுகள் ஜெனிவாவில் நடைபெறுகின்றன. பாலஸ்தீனிய சிறுவர்கள் அன்றாடம் சந்திக்கின்ற துன்புறுத்தல்கள் தொடர்பான மௌனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சமூகத்துக்கு இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் எமது உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, எந்தவித தண்டனையுமின்றிப் பன்னாட்டுச் சட்டத்தையும் மீறிக்கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனச் சிறுவர்களும்3 இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் - இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் - மொழியாக்கம்: ஜெயந்திரன்உயிர் வாழ்வதற்கான எமது உரிமை உட்பட, எமது அனைத்து அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் மீறப்படுகின்றன. எங்களுக்கு எதிராகவும் எமது குடும்பங்கள், பாடசாலைகள், வீடுகள் என்பவற்றுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படும் அளவுக்கு மீறிய சக்தி எம்மில் தோற்றுவிக்கும் கவலை, மனஉளைச்சல், தனிமை போன்ற உணர்வுகளிலிருந்து எம்மை விடுவிப்பதற்காக ஒவ்வொரு கணமும் நாம் போராட வேண்டியிருக்கிறது. இஸ்ரேல் வீசுகின்ற குண்டுகளினால் இலக்கு வைக்கப்படலாம் என்ற பயத்துடன், காஸாவில் உள்ள எனது நண்பர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனது ஒன்றுவிட்ட சகோதரனான மொஹமட் முனீர் அல்-தமீமி (Mohammad Munir al-Tamimi) இவ்வருடத்தின் பண்டிகைக் காலத்தின் கடைசி நாளில் கொல்லப்பட்டார்.

எமது கிராமத்தினுள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் திடீரென்று வீதியில் தாம் கண்டவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள். தனது சகோதரனைத் தேடி, தனது வீட்டுக்கு வெளியே மொஹமட் சென்ற போது ஒரு சிப்பாய் அவனது வயிற்றில் நேரடியாகச் சுட்டான். அப்போது அவனுக்கு வயது 17 மட்டுமே.

கொல்லப்பட்ட எமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இழப்பையிட்டு நாம் வருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதே நேரம் நாம் உறுதியாகத் தான் இருக்கிறோம். எமது உயிரைப் பறிக்கத் தவறும் ரவை ஒவ்வொன்றும் எங்களுக்கு மேலும் அதிக நம்பிக்கையைத் தருவது மட்டுமன்றி, இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து இன்னும் அதிக உறுதியோடு போராட எம்மைத் தூண்டுகின்றது.

சிறுவர்களைக் கைதுசெய்து, அவர்களைத் தடுத்து வைத்து, இராணுவ நீதிமன்றில் அவர்களை விசாரிக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டுமே.

எனது ஒன்றுவிட்ட சகோதரி அஹெட் தமீமி (Ahed Tamimi)  16 வயதாக இருக்கும் போதே ஒரு இஸ்ரேலிய சிறையில் எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தாள். வேறு பல பெண்களுடனும், சிறுபிள்ளைகளுடனும் அவள் அங்கே இருந்தாள். அங்கே இருந்த ஒரு சிலர் நிர்வாகத் தடுப்புக் காவலுக்குள் வைக்கப்பட்டிருந்தனர். நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்படும் ஒருவர் எந்த ஒரு முறையான குற்றச்சாட்டோ வழக்கோ இன்றி வருடக்கணக்காகத் தடுத்து வைக்கப்பட  முடியும்.

இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்படும் பாலஸ்தீனிய சிறுவர்கள் மிக அதிகமான உளத்தாக்கங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் உளநெருக்கீடுகளின் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் கூட, தமது சிறுபராயத்தை அவர்களால் மகிழ்வாகக் கழிக்க முடியாது.

எனது பன்னிரண்டு வயதில் ஒரு தடவை நான் ஜோர்தானுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பாலஸ்தீனத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களால் எல்லையில் நான் தடுத்து நிறுத்தப்பட்டு, மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நேரம் எனது பெற்றோரோ, அல்லது சட்டத்தரணியோ என்னோடு இருக்கவில்லை. அப்படியென்றால் பன்னாட்டுச் சட்டத்தின்படி அப்படிப்பட்ட விசாரணையெல்லாம் சட்டவிரோதமானதாகும். ஆனால் அவர்கள் அதைப் பற்றி எவ்விதத்திலும் கவலைப்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஒரு ஊடகவியலாளராக என்னைப் பதிவுசெய்ய நான் முடிவு செய்தேன். ஊடகவியலாளர் என்ற அடையாள அட்டையைக் கொண்டிருந்த உலகத்திலேயே மிகவும் வயது குறைந்தவளாக அப்போது நான் இருந்தேன். ஒரு ஊடகவியலாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை எனக்கு ஓரளவு பாதுகாப்பைத் தந்தது. ஆனால் ஊடகவியலாளர்கள் கூட கைது செய்யப்படுவதும், காயப்படுவதும் கொல்லப்படுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நடைபெறத்தான் செய்கிறது.

ஆக்ஷன் எயிட்  (Action Aid) அல் ஹாக் (Al-Haq) ஆகிய இரண்டு அரசசார்பற்ற அமைப்புகளினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ஒரு சாட்சி என்ற அடிப்படையில் இன்று நான் உரையாற்றுகிறேன். பாலஸ்தீனச் சிறுவர்கள் சந்திக்கின்ற மனித உரிமை மீறல்களைப் பற்றியும், பன்னாட்டுச் சட்ட மீறல்களைப் பற்றியும் நான் உரையாற்ற இருக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் அமைந்திருக்கின்ற ஷேக் ஜாரா (Sheikh Jarrah) என்ற பகுதியில் ஜூன் மாதம் நடைபெற்ற ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த அல்ஜசீராவின் அரேபிய மொழி ஊடகவியலாளரான கிவாரா புரெய்ரி (Givara Budeiri)  இஸ்ரேலியப் படையினரால் மூர்க்கத்தனமான முறையில் கைதுசெய்யப்பட்டார். ஊடகச் சுதந்திரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளுகின்ற தாக்குதல்கள் தொடர்பாக அவர் இன்று உரையாற்றவிருக்கிறார். ஷேக் ஜாராப் பகுதியிலிருந்து பாலஸ்தீனக் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்படுவது தொடர்பாகவும், நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் என்பன அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் வேறு பலரும் சாட்சியமளிக்க இருக்கிறார்கள்.

இதே நேரம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்படும் பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாயச் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக தனது ஆணையம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது. உண்மையில் இந்த விசாரணை எப்போதோ நடைபெற்றிருக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் சந்திக்கும் துன்பங்களைத் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தமது வீடுகளிலும் பாடசாலைகளிலும் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லாப் பிள்ளைகளையும் போல பாலஸ்தீனப் பிள்ளைகளுக்கும் உரிமை இருக்கிறது. இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் துன்புறுத்தல்கள், வன்செயல்கள், காரணமின்றிக் கைதுசெய்யப்படல், மற்றும் தாக்குதல்கள் என்பவற்றுக்கு உள்ளாகாதவாறு பாதுகாக்கப்படுவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

தற்போது பலவிதமான துன்பங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் போதிலும், எதிர்காலம் தொடர்பாக நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். எங்களது தலைமுறை தான் மாற்றத்தை உருவாக்கப் போகும் தலைமுறை. அத்துடன் எமது தலைமுறையே பாலஸ்தீனத்தை விடுவிக்கும் எனவும் நான்  நம்புகின்றேன். உலகத்தை மேலும் சிறந்த இடமாக நிச்சயமாக நாங்கள் மாற்றுவோம். ஆக்கிரமிப்பு அற்ற, காலனீயம் அற்ற, எல்லோரும் சமமாக மதிக்கப்படுகின்ற, சுதந்திரமாகவும், மாண்புடனும் பாலஸ்தீனர்கள் வாழக்கூடிய உலகை நாங்கள் உருவாக்கியே தீருவோம். ஆனால் இதைத் தட்டந்தனியனாக நாங்கள் செய்ய முடியாது. தனது மௌனத்தைக் கலைத்துவிட்டு, எமது பக்கம் நின்று ஆக்கிரமிப்புக்கு எதிராக பன்னாட்டுச் சமூகம் போராட முன்வரவேண்டும்.

நன்றி: அல்ஜசீரா