மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்புமுனையில் தற்போதுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களுடன் இந்த வாரம் பேசுகின்றோம்.

கேள்வி: பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இந்த வெற்றியை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசியலில் நீண்டகால அனுபவத்தைக்கொண்ட ஒருவரின் வருகை என்பது முதன்மைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நீண்டகாலமாகவே அரசியல் கட்டமைப்பு ஆரோக்கியமான ஒரு வடிவத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியாமல் காணப்பட்ட இழுபறி நிலையை இது தீர்த்துவைத்திருப்பதாகக் கருத முடியும். இருந்த போதிலும் காலிமுகத் திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புணர்வு என்பது எந்தக் கட்டத்துக்குச் செல்லும் என்பது சொல்லமுடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

அதேவேளையில் இலங்கையின் பொருளாதாரத்தில் இருப்பைப்பற்றிய ஒரு மாற்றத்தைச் செய்வதற்கான பின்புலங்களையும் அது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. குறிப்பாக மேற்கு நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பயணம் செய்வதற்கான ஆரோக்கியமான இருப்பு ஒன்றை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

ஆனால், கட்சி என்ற அடிப்படையிலும் தேசியப்பட்டியலில் வந்தவர் என்ற அடிப்படையிலும் ஜனநாயகம் தொடர்பான பலவீனங்கள் குறித்தும் பேசப்படுகின்றது. ரணிலுடைய வருகை என்பது இலங்கையில் காணப்படுகின்ற நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்கின்ற அதேநேரத்தில், தனிப்பட்ட ரீதியான கட்சி நலன்களைப் பாதுகாக்கின்ற அணுகுமுறைகளையும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கான சில உபாயங்களை இவர் முன்னெடுப்பார் என எதிர்பார்க்க முடியும்.

கேள்வி: சஜித் பிரேமதாச போட்டியிலிருந்து விலகிக்கொண்டு டலஸ் அழகப்பெருமாவுக்கு இடமளித்தமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? ரணிலின் வெற்றிக்கு இதுவும் காரணமா?

பதில்: அவ்வாறான ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரையில் அவர் தேர்தலிலிருந்து பின்வாங்கியது அவரது எதிர்காலம் கருதியும் இந்தத் தேர்தலில் தோல்வியடையலாம் என்ற காரணமாகவும் இவ்வாறான ஒரு முடிவுக்குச் சென்றிருப்பதற்கான வாய்ப்புள்ளது.

அதேவேளையில் சஜித் பிரேமதாச இன்னொரு இலக்கையும் வைத்திருந்தார். உண்மையில் அந்த இலக்குதான் தோல்வியடைந்திருக்கின்றது. டலஸ் அழகப்பெரும வெற்றிபெற்று ஜனாதிபதியானால் தன்னால் பிரதமராக முடியும் என்ற வகையில் அவரது இலக்கு காணப்பட்டது. இந்த இலக்கிலும் அவர் தோல்வியடைந்திருக்கின்றார் என நான் கருதுகின்றேன்.

கேள்வி: மேற்கு நாடுகள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் ஒன்று இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ளதாகக் கருத முடியுமா?

பதில்: நிச்சயமாக – மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச நாயண நிதியத்தின் செயலாளர், இலங்கையுடனான பேச்சுவார்த்தைகள் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறியிருந்தார். அதேபோலத்தான் எரிவாயு, எரிபொருள் போன்றன ஓரளவுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதைப் பார்க்கும் போது ஆட்சிமாற்றத்துக்கான ஒரு அடிப்படையைத் தந்திருக்கின்றது.

இந்த ஆட்சிமாற்றத்தை அவர்கள் எவ்வாறு கட்டமைத்திருக்கின்றார்கள் என்பது உண்மையில் ஆச்சரியமான ஒரு விடயம்தான். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் தங்களுடைய ஆதரவைப் பெற்ற ஒருவருடைய வெற்றியை அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். மேற்கு நாடுகளின் நீண்டகால திட்டமிடலோடு கூடிய ஒரு வாய்ப்பு இந்த ஆட்சிமாற்றத்தின் மூலமாக ஏற்பட்டிருக்கின்றது.

கேள்வி: டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக வருவதையே இந்தியா விரும்பியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்ததாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கலாம்?

பதில்: இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுகளை நிறுவிக்கொள்வதற்காக முன்னெடுத்த எத்தனமாகவே நான் பார்க்கின்றேன். இவ்வாறான நகர்வுகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை என்ற வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதிலும் மறுப்பும் காணப்படுகின்றது. இவ்வாறுதான் இலங்கைக்கான இந்தியத் தூதரகமும் இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.

ஆனால், இவை அனைத்துக்கும் அப்பால் ஒரு தெரிவை மேற்கொண்ட பின்னர் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவருடன் பயணம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் மரபைக்கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஒரு நோக்கு நிலையில் இருந்துகொண்டு இதனை அவதானிப்பது அவசியமானது என நான் கருதுகின்றேன். ஆனால், உலக நாடுகள் மற்றைய நாடுகளில் தமது செல்வாக்கைச் செலுத்தும் வகையில் இவ்வாறு செயற்படுவது வழமையான ஒன்றாகவே உள்ளது. இது உலகம் முழுவதிலுமுள்ள ஒரு நியமம்தான். ஆனால், இங்கு கூட்டமைப்பு தான் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.

கேள்வி: தமிழ்க் கட்சிகளின் சார்பில் விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ரணில் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இதனை அடிப்படையாகக்கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்: விக்னேஸ்வரன் ஒரு தனி நபராக அதனை முன்வைத்திருக்கின்றார். அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவோ அல்லது உரிய முறையிலான உடன்படிக்கையாகவோ இல்லை. இதேபோன்ற உறுதிமொழியை டலஸ் அழகப்பெருமவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்விதம் உத்தரவாதங்கள் வழங்கப்படுவது ஒரு சாதாரண விடயம். கடந்தகாலங்களில் இவ்வாறான பல ஒப்பந்தங்கள் மீறப்பட்டிருக்கின்றன.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் தனி ஒருவராக இந்த உறுதிமொழியை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என்பது முரண்பாடான ஒரு விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பத்து உறுப்பினர்கள் உள்ளார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர்.

தனக்குள்ள இரண்டுவருட காலத்தில் ஒரு சுமூகமான முறையில் ஆட்சியைக் கொண்டு நடத்தவதற்கான முயற்சிகளையே ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என எதிர்பார்க்கமுடியும். அந்த வகையில் இனநெருக்கடி தொடர்பான விவகாரங்களையும் அவர் கையாள்வதற்கு முற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தீர்வு கிடைக்கும் என நான் சொல்லவில்லை. தீர்வை நோக்கிய ஒரு உரையாடலை அவர் முன்னெடுக்கலாம். ஆனால், இவ்வாறான ஒரு முன்னெடுப்பு ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதாக அமையும் என எதிர்பார்ப்பது கடினம் என்பது எனது கருத்து.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சஜித் – டலஸ்   ஆகியோர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: குறிப்பிட்ட சில விடயங்களை தாம் ஏற்றுக்கொண்டதாக டலஸ் அழகப்nரும உறுதியளித்த ஆவணம் ஒன்று பரிமாறப்பட்டதாகத்தான் நான் அறிந்தேன். சஜித் பிரேமதாசவும் இதனை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இதனை ஒரு உடன்பாடாகச் செய்வதற்கான சூழல் இதுவரையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனைவிட அவர்கள் தோல்வியடைந்தமையும் இதில் பாதகமான விளைவுகளைத்தான் தரப்போகின்றது.