ஐ.டி.துறையில் பெண்களுக்கு நெருக்கடியா?-கலைச்செல்வி சரவணன்

Covid--19 impact: Women bear the brunt of Covid outbreak at the workplace,  more likely to be furloughed and lose jobs as compared to men - The  Economic Times

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் அரசியல்,  பொருளாதார, இராணுவ மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. ஆனால், சத்தமில்லாமல் இதன் வளர்ச்சியில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விட்டதா என்றால் தலையைக் குனிந்து கொள்ள வேண்டியிருக்கிறது .

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால், பெரும்பாலான தாய்மார்கள், தங்களுக்கு பெண் குழந்தை பிறப்பதையே விரும்பவில்லை. இதற்குக் காரணம் வெறுப்பு அல்ல, தான் பட்ட துன்பத்தை தன் குழந்தை பெற்று விடுமோ என்ற அச்சம்.

ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், வன்கொடுமைகள், சமூக புறக்கணிப்புகள், அலுவலகங்களில் ஏற்படும் அவமானங்கள், பாலியல் சுரண்டல்கள், ஏற்றத்தாழ்வுகள் என ஒவ்வொன்றும் பெண்களை ஓடினேன், ஓடினேன், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினேன் என்று விரக்தியடைய வைக்கிறது.

ஆனால்,ஒரு பக்கம் பெண்கள் மேம்பாடு, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்புக்கான முயற்சிகள் என செயல்பாடுகள் இருந்தாலும் ,இன்னும் அவை முழுமையாக வீரியப்படுத்தப்பட வேண்டும்  என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன .

“பட்டங்கள் ஆள்வதும் ,சட்ட்ங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த கனவு நனவாக எவ்வளவு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது பெண்கள் ?

உலகம் முழுவதும் ,ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் நாள் “மகளிர் தினம்” கொண்டாடப்படுகிறது. சமீபகாலமாக விருதுகள், போட்டிகள், அன்றைய புகழ்ச்சிகள் என களை கட்டுகிறது. ஆனால், மறுநாளில் இருந்தே போராட்டங்கள் தொடர்கதையாகி விடுகிறது.

ஒவ்வொரு நொடியும் வாழ்க்கைப் போராட்டத்துக்குள்  தவிக்கும் பல பெண்கள், இந்நாளையும் சத்தமில்லாமல் கடந்து செல்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

‘மகளிா் தினம் என்பது சா்வதேச உழைக்கும் பெண்களின் ஒற்றுமைக்கான தினம்’ என்று ரஷிய பெண் புரட்சியாளா் அலெக்சான்ட்ரா கொலந்தாய் கூறினாா். 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடாலும், 1977ஆம் ஆண்டு முதல்தான் உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள் என நாம் மார்தட்டிக் கொண்டாலும்,பாலின சரிவிகித அளவில் முன்னேற்றம் இருக்கிறதா ?முன்னேற அனுமதிக்கப்படுகிறார்களா என்பதே கேள்வி.

இன்றைய காலக்கட்ட த்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மூலம் உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.இத் துறையில் இருபாலரும் பணி செய்கின்றனர். அளவில்லாமல் ஊதியம், ஆடம்பரமான வாழ்க்கை என தள்ளி நின்று பார்ப்போர் கூறலாம். ஆனால், இங்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் என்ன? ஆண்களுக்கு நிகராக முன்னேற அனுமதிக்கப்படுகிறார்களா? என இத்துறையைக் சேர்ந்த பெண்களிடம் கேட்ட தகவல்களின் தொகுப்பே இக்கட்டுரை. பெண் சுதந்திரமும் ,முன்னேற்றமும் ஆண்களின் அனுமதியுடன்தான் இந்த 21வது நூற்றாண்டிலும் பெற வேண்டியதிருக்கிறது என்பது மகளிர் தினத்தையே கேள்விக்குறியாகியுள்ளது.

பெண்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடிய விஷயங்கள் என்னென்ன?

பெரும்பாலும், இத்துறையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட பணி நேரத்திற்குத்தான்  வருவேன்  என்று கூற முடியாது. என்னால் இரவு நேரங்களில் வரமுடியாது, பேச முடியாது என்றெல்லாம் பெண்கள் மறுக்க முடியாது. வாடிக்கையாளர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சகிப்புத் தன்மையுடன் பேசி,நிறுவனத்துக்கு லாபத்தைக் காட்ட வேண்டும்.

மேலும்,தனக்கு கொடுக்கப்பட்ட திட்டத்தை முடிக்க அதிகமாக பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும்.வாடிக்கையாளர் சந்திப்பு ,அடுத்தகட்ட பணிகள் குறித்து பேச எந்நேரமும், எங்கு பயணிக்கவும் தயாராக இருக்க வேண்டும். இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

உடல்நலப் பிரச்சனைகள் :

தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு கூடுதலாகவே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. கணினியிலேயே உட்கார்ந்து வேலை செய்வது உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.மேலும் ,கருத்தரித்திருக்கும்போது அவர்களுக்கு எந்த திட்டத்திலும் பணியாற்ற வாய்ப்பு தரப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கான பணி மூப்பு ,உயர்வு ஆகியவை பாதிக்கப்படுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சுமார் நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள், ஒதுக்கப்படுகிறார்கள். அதற்குப் பயந்து அவர்களே வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு  நெருக்கடி கொடுக்கப்படுகிறதா?

ஆம் என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த பெண்கள் .இரவு,பகல் பாராமல் உழைக்க தயாராக இருந்தாலும்,”உன்னால் முடியாது “என்று துவக்கத்திலிருந்தே ஆண்களால் ஒதுக்கப்படுகிறார்கள். இங்கும் ஆணாதிக்கமே இருக்கிறது.உயர்பதவிகளில் ஐந்தில் ஒரு பங்கே பெண்கள்  இருக்கிறார்கள்.

குடும்பப் பிரச்சனைகள் இருக்கும்,மனதளவில் வீரியமாக செயல்பட முடியாது, உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும், இவர்களால் அடிக்கடி பயணம் செய்ய முடியாது போன்ற பல காரணங்களை சம்பந்தப்பட்ட பெண்ணைக் கேட்காமலேயே அவர்களாகவே முடிவுக்கு வந்து விடுகிறார்கள். எனவே, பல நல்ல வாய்ப்புகளை பறிகொடுத்துவிட்டு, செய்வதறியாமல் நிற்கிறார்கள் பெண்கள். அதே போன்று திறமையாக வேலை பார்ப்பவர்களை மேலதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.தங்களைத் தாண்டிச் செல்வதை அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை.

தீர்வு என்ன ?

பெண்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற  பிரச்சனைகளைக் களைந்து சம வேலை வாய்ப்பு, சம ஊதியம் என்பது நடைமுறைப்படுத்த வேண்டும். வாய்ப்புகள் பறிக்கப்படுவதே அவர்களுக்கான அநீதியாகும். ஆண்களை விட அதிகம் உழைப்பவர்கள் பெண்கள். எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்க்கும் சக்தி பெண்களுக்கு உண்டு. வரும் காலங்களில்,பெண்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை மாற வேண்டும். எனவே,சமுதாய மாற்றமே இதற்கான தீர்வாகும்.