கெரில்லா தாக்குதலில் இழப்புக்களை சந்திக்கிறதா ரஸ்யா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கையானது தற்போது ஒரு கெரில்லா தாக்குதலை எதிர்கொள்ளும் நிலைக்கு மாற்றமடைந்து வருகின்றது. ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் சுதந்திரதினம் கொண்டாடப்படுவதால் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை உக்ரைன் மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும், அவர்கள் நேரிடையான ஒரு ஊடறுப்புத் தாக்குதலை விடுத்து கெரில்லா பாணியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரைமியாவில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படையினரின் வான் தாக்குதல் பிரிவான 43 ஆவது கடற்படையின் வான் தாக்குதல் படையணியின் சகி வான்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த றெஜிமென்ட் தனது வான்படை தாக்குதல் விமானங்களில் அரைவாசியை இழந்துள்ளதாக உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் தகவல்களின் அடிப்படையில் 3 எஸ்.யூ-30 எஸ்.எம் பல்நோக்கு தாக்குதல் விமானங்கள், 4 எஸ்.யூ-24 எம் மற்றும் எம்.ஆர் தரைத் தாக்குதல் விமானங்கள் அழிவடைந்ததுடன், இரண்டு எஸ்.யூ-27 தாக்குதல் விமானங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தகவலை ரஸ்ய தரப்பு இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. தாக்குதல் இடம்பெற்ற பின்னர் தளத்தில் இருந்து 4 உலங்குவானுர்திகளும், நான்கு இயந்திரங்களைக் கொண்ட துருப்புக்காவி விமானமும் புறப்பட்டுச் சென்றுள்ளன.

வான்படைத்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் தீ ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு வான்கலங்கள் எவையும் சேதமடையவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் 9 ஆம் நாளும், அதன் பின்னர் 10 ஆம் நாளும் Planet Labs PBC என்ற நிறுவனம் வெளியிட்ட செய்மதிப் படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் விமானங்கள் அழிவடைந்ததற்கான தடையங்கள் உள்ளன. கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 2 சதுர கி.மீ பரப்பளவுள்ள புற்தரைகள் மற்றும் காடுகளும் எரிந்துள்ளன.

செய்மதிப் புகைப்படங்களை ஆராயும்போது அவை ஆயுதக்களஞ்சியமோ அல்லது எரிபொருள் குதங்களோ வெடித்தது போல் அல்லாது நேரிடையான ஏவுகணைத் தாக்குதல்கள் போலவே காட்சியளிக்கின்றன. 10 மீற்றர் சம விட்டமுடைய பெரிய குழிகளின் தோற்றம் என்பது ஆளில்லாத தாக்குதல் விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகளை விட சக்திவாய்ந்த குண்டுகளே பாவிக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை உருவாக்கியுள்ளன.

உக்ரைனின் இறுதி படைநிலையில் இருந்து 225 கி.மீ தொலைவில் உள்ள இந்த தளத்தை சாதாரண பல்குழல் உந்துகணை செலுத்திகளால் தாக்க முடியாது.

எனவே 300 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ATACMS (Army Tactical Missile System) எனப்படும் இராணுவத்தின் ஏவுகணை பயன்படுத்தப்டடிருக்கலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த ஏவுகணைகளை M142 or the M270 MLRS போன்ற பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தளத்தில் வைத்து ஏவமுடியும். ஆனால் உக்ரைனுக்கு அவ்வாறான ஏவுகணைகளை மேற்குலகம் வழங்கவில்லை.

ஆனால் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட நீண்டதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் உள்த்துறை அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் வெக்ரர் அன்றுசிவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிடம் ரோச்சா (Tochka) வகையை சேர்ந்த குறுந்தூர ஏவுகணைகளே உள்ளன. அதன் தூரம் 200 கி.மீ ஆகும். அதனால் கிரைமியாவின் உள்பகுதியை அதனால் தாக்க முடியாது. எனினும் சோவியத்தின் வீழ்ச்சியின் போது மேலதிக தூரவீச்சுக் கொண்ட ஸ்கட் ஏவுகணைகளை உக்ரைன் கொண்டிருந்ததுடன், அதன் தொழில்நுட்பத்தையும் அறிந்திருந்தது. அதேசயம் குரூஸ் வகை நீண்டதூர ஏவுகணை தொழிநுட்பத்தையும் அது கொண்டிருந்தது.

அதேசயம், நேட்டோவின் உதவியுடன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல் உத்தியை உக்ரைன் பெற்றிருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. நீண்டதூர ஏவுகணையின் அவசியம் தொடர்பில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியபோது உக்ரைன் படையினரின் பிரதம கட்டளை அதிகாரியின் சிறப்பு ஆலோசகரான அமெரிக்க படை அதிகாரி டான் ரைஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

அதன் மூலம் ரஸ்யாவின் பின்தளங்கள்> கட்டளை மையங்கள்> வழங்கல் நிலைகள்> களஞ்சியங்களை தாக்கி அழிப்பதுடன்> ரஸ்ய படைகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் கே.எச்-55 மற்றும் கே.எச்-58 வகையான ஏவுகணைகளை தரையில் இருந்து தரைக்கு ஏவும் வகையில் உக்ரைன் மாற்றி அமைத்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. ரஸ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தை உக்ரைன் முன்னர் பெற்றிருந்தது. அவ்வாறு நிகழ்ந்தால் அது ரஸ்யாவுக்கு பாதகமானது. ஏனெனில்  உக்ரைன் அணுவாயுதங்களையும் உருவாக்கலாம்.

ஆனால் உக்ரைன் படையினரின் சாதாரண பல்குழல் உந்துகணை செலுத்திகளின் ஏவுகணைகள் மற்றும் ரோச்சா ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ரஸ்யாவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளான Tor-M2, Buk-M3, S-350 Vityaz, 9K317M Buk-M3 and 50R6 S-350 என்பவை ஏன் ஏவுகணைகள் மூலம் தளத்தை தாக்கியிருந்தால் அதனை தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு 28 கி.மீ தொலைவில் இருந்த ரஸ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் கூட ஏன் அதனை தடுக்கவில்லை என்ற கேள்விகள் எழாமல் இல்லை. மேலும் ஏவுகணைகள் வந்து வீழ்ந்ததை தாம் காணவில்லை என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிரைமியா பகுதி 23 வருடங்களாக உக்ரைன் வசம் இருந்தபோதும், 2014 ஆம் ஆண்டு ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை இணைக்கும் பாலம் படைத்துறை முக்கியத்துவமானது. அதனை தாக்க உக்ரைன் பல தடவைக் முயன்றபோதும் அவ்வாறு தாக்கினால் உக்ரைன் மீது போர்பிரகடனம் செய்யப்படும் என ரஸ்யா எச்சரித்திருந்தது.

எனவே தான் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உத்தியோகபூர்வமாக உரிமை கோரவில்லை. ஆனால் தமது சிறப்பு படையினர் ஊடுருவி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைனின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் வொசிங்டன் போஸ்ட் என்ற ஊடகத்திற்கு தெரிவத்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதானது விபத்து என்ற கூற்றை நிராகரிப்பதாக உள்ளதாக வெசிங்டனை தளமாகக் கொண்ட போர் கற்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. மூன்றாவது குண்டு பின்னர் வெடித்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னர் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கிரைமியா பகுதியை மீட்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவா கப்பல் மூழ்கியபோதும் வெடிவிபத்து என்றே ரஸ்யா தெரிவித்திருந்தது. ரஸ்யா தனது பழைய ஆயுதங்களையும் போர் முனைகளில் பயன்படுத்தி வருவதுண்டு. அவை மேற்குலகத்தின் ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பு குறைந்தது. எனவே விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்புக்களும் உண்டு.

எது எவ்வாறாகினும் இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டால் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் ஒரு நாளில் ரஸ்யா அதிக படைக்கலங்களை இழந்தது இந்த தாக்குதலில் தான்.