Home ஆய்வுகள் சமர்க்களத்தை வெல்வதைவிட போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சமர்க்களத்தை வெல்வதைவிட போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

554 Views

போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா?

உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை (24) ஆரம்பமாகிய ரஷ்யாவின் படை நடவடிக்கை, வெள்ளிக்கிழமை (4) ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றது. தெற்கு உக்ரைனில் வாழும் மக்களின் மீதான கடந்த எட்டுவருட இனஅழிப்பை நிறுத்துவது, உக்ரைனின் ஆயுதங்களை களைவது, நேட்டோ படையினரின் பிரசன்னத்தை உக்ரைனில் தடுப்பதே தனது நோக்கம் என்கிறது ரஷ்யா.

படைவலுவிலும், ஆயுத வலுவிலும் மேலோங்கி நிற்கும் ரஷ்யா, தனது கணிசமான படை வளத்தைப் பயன்படுத்தினால், இந்த போரை 96 மணிநேரத்திற்குள் முடித்துவிடும் என அமெரிக்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது. எனவே தான் இரண்டாவது நாள் உக்ரைனின் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கியை பாதுகாப்பாக வெளியேற்றவும் அமெரிக்கா திட்டமிட்டது.

ஆனால் போரின் போக்கு மாற்றடைந்து விட்டது. உக்ரைன் படையினர் ரஷ்ய இராணுவத்துடன் ஒரு மரபுவழிப் போரை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டனர். தமது தாக்குதல் உத்திகளை விடுத்து, தற்காப்பு நிலைக்கு மாறிவிட்டனர். முன்னகர்ந்துவரும் ரஸ்யப் படையினரின் பலவீனமான பகுதியைத் தாக்குவது, அதிக சேதங்களை ஏற்படுத்துவது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

கடந்த 8 வருடங்களாக மேற்குலகப் படையினர் உக்ரைன் படையினருக்குக் கடுமையான பயிற்சிகளை வழங்கி, அவர்களை முழு அளவிலான தற்காப்புத் தாக்குதல்  படையினராக மாற்றி அமைத்திருந்தனர். குறிப்பாக கனடாவின் 200 இற்கு மேற்பட்ட படைத்துறை பயிற்சியாளர்கள் அங்கு நிரந்தரமாகவே தங்கியிருந்தனர். போர் ஆரம்பமாவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

ரஷ்யாவின் கவசப்படையணியே போரில் அதிக பங்கு வகிக்கும் என்பதால், தாங்கிகளையும், துருப்புக்காவி வாகனங்களையும் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்கியிருந்தன.

தற்போதும் 14 இற்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கத் தயாரிப்பான ஸ்ரிங்கர் வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், பல ஆயிரம் கவச எதிர்ப்பு உந்துகணை செலுத்திகளையும் வழங்க முற்பட்டு நிற்கின்றன. அதாவது உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவிற்கு அதிக இழப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது மேற்குலகத்தின் திட்டம்.

இந்த போரை பொறுத்தவரையில் ஆரம்ப நாட்களிலேயே ரஷ்யா உக்ரைனின் வான் படை, கடற்படை மற்றும் ஏவுகணை படை களின் பலத்தை அழித்துவிட்டதாகவே நம்பப் படுகின்றது.

உதாரணமாக கடந்த 27 ஆம் நாள் உக்ரைனின் தலைநகர் கிவ்இற்கு வடக்காக உள்ள கொஸ்ரமெல் வான்படை தளத்தின் மீது ரஷ்யாவின் வான்படையினர் நடத்திய இந்த தாக்குதல்களில் உக்ரைனின் ஒரு எஸ்.யூ-24, மூன்று எஸ்.யூ-27, 6 மிக்-29, ஒரு அன்ரனோவ் -26 விமானங்களும், ரஷ்யாவின் ஐ.எல்-76 துருப்புக்காவி விமானமும், இரண்டு கே.ஏ-52 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும், ஒரு எம்.-24 ரக உலங்கு வானூர்தியும் அழிவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஆறு இயந்திரங்களைக் கொண்ட உலகின் தனித்துவமான அன்ரனோவ்-225 என்ற விமானம் அழிவடைந்துள்ளது.

ரஷ்யாவின் சிறப்பு படையணிகள் உக்ரைனின் தலைநகருக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இதுவரை ரஷ்யா முழு அளவிலான படை நடவடிக்கையை தலைநகர் மீது மேற்கொள்ளவில்லை என்பது உலகின் பல படைத்துறை ஆய்வாளர்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஐந்தாம் தலைமுறை தாக்குதல் விமானமான எஸ்.யூ-57 முதற்கொண்டு 1500 இற்கு மேற்பட்ட தாக்குதல் விமானங்கள் உட்பட 3860 இற்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளைக் கொண்ட ரஷ்யாவின் வான்படை, தனது 70 விமானங்களையே இந்த தாக்குதலில் பயன்படுத்துவதும் ஆச்சரியங்களை தோற்றுவித்துள்ளது. அதிலும் குறிப்பாக எஸ்.யூ-35 ரக தாக்குதல் விமானங்களில் சிலவற்றை போர் ஆரம்பமாகிய 4 நாட்களின் பின்னரே களமிறக்கியுள்ளது.

அமெரிக்கா மேற்கொள்ளும் சமர்களில் அது தனது அதிநவீன தாக்குதல் விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி, எதிரி நாட்டின் வான்பரப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் விரைவாக கொண்டு வந்துவிடும். ஆனால் ரஷ்யாவின் உத்தி என்பது யாரும் கணிக்க முடியாத நிலையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது அதிக வளங்களை ரஷ்யா பயன்படுத்தாதபோதும், 98 தாக்குதல் விமானங்கள் உட்பட 210 விமானங்களையும், 45000 படையினரையும் கொண்ட உலகின் 27 ஆவது பெரிய வான்டையான உக்ரைன் வான்படையினரால் ரஸ்யப் படையினருக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதற்கு சிறந்த உதாரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (01) தலைநகர் கிவ்விற்கு வடக்காக பெலாரூஸில் இருந்து கிவ் நோக்கிய நெடுஞ்சாலையில் 65 கி.மீ நீளத்திற்கு பல நூறு ரஸ்ய இராணுவ வாகனங்களும், கனரக ஆயுதங்களும் அணிவகுத்து நிற்கின்றன. கிவ்வில் இருந்து 30கி.மீ தொலைவில் அவை நிற்பதால், எந்த நேரமும் தலைநகர் முற்றுகைக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்த பத்தி எழுதப்படும் வரையான நான்கு நாட்களாக அங்கு எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தொடரணி எந்தவித தாக்குதல் அச்சமுமின்றி அப்படியே நிற்கின்றது.

மேலும் உக்ரைன் வான்படையோ அல்லது ஏவுகணைப் படையோ இயங்கு நிலையில் இருந்தால் இவ்வாறு நிற்கும் திறந்த இலக்குகள் (Open targets) மீது தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன், உலகின் 27 ஆவது பெரிய வான்படை தனக்கு தாக்குதல் விமானங்களை தருமாறு அண்டைய நாடுகளை கேட்டு நிற்கின்றது.

பல்கோரியா 16 மிக்-29 ரகம் மற்றும் 14 எஸ்யூ-25 ரக தாக்குதல் விமானங்களையும், போலந்து 28 மிக் -29 விமானங்களையும், ஸ்லோவாக்கியா 12 மிக்-29 விமானங்களையும் வழங்கவுள்ளதாக முன்னர் தெரிவித்தபோதும் தற்போது அவை மறுப்பு தெரிவித்துள்ளன.

ஸ்லோவாக்கியாவின் வான்படையினரின் முக்கிய பலமே இந்த விமானங்கள் தான் அதனை வழங்கியதும், பராமரிப்பதும் ரஷ்யா தான். எனவே அதனையும் வழங்கிவிட்டு நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் என்பது அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் கருத்து. உங்களிடம் உள்ள விமானங்கை வழங்குங்கள் அதற்கு இணையாக நாம் எப்-16 ரக விமானங்களை வழங்குகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவை எவ்வாறு நம்பவது என்பதே தற்போதைய கேள்வியாக இந்த நாடுகின் முன் உள்ளது. ஏனெனில் பின்னர் ஒரு பிரச்சினை என்று வரும்போது அதற்கான உதிரிப்பாகங்களை அமெரிக்கா நிறுத்தி விடும். அதுதவிர அமெரிக்காவின் பராமரிப்பு செலவு மிகவும் அதிகமானது.

இருந்தபோதும், ரஷ்யா ஏன் இந்த போரை ஆமை வேகத்தில் நடத்துகின்றது என்ற கேள்விக்கான பதில்கள் தற்போது மேற்குலகத்திற்கு புரிய ஆரம்பித்துள்ளது.

அதாவது போரை தொடர்ந்து ரஷ்யா மீது மேற்குலகம் கொண்டுவந்த பொருளாதாரத் தடையின் எதிர்வினையை மேற்குலகம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. எண்ணெய் விலை ஒரு பரலுக்கு 120 டொலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (4) சபொரசியா பகுதியில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரும் அணுமின் உலையை ரஷ்யா கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குலகத்தின் பங்கு சந்தைகள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. மேலும் உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களை பராமரிப்பதிலும் தமக்குள் சண்டையை ஆரம்பித்துள்ளன ஐரோப்பிய நாடுகள்.

அதாவது இந்த போரை ரஷ்யா விரைவாக முடித்திருந்தால், பொருளாதார நெருக்கடியால் ரஷ்யா மட்டும் தான் திணறியிருக்கும் ஆனால் போரின் நீட்சி என்பது அதனை ஏவியவர்கள் மீதான பின்விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஒரு சமரை வெல்வதை விட, ஒரு போரை வெல்வதே முக்கியமானது. உக்ரைன் ரஷ்யாவின் சமர்க்களம், ஆனால் மேற்குலகம் ரஷ்யாவின் போர்க்களம். சமர்க்களத்தை தாமதமாக்குவதன் மூலம் போர்களத்தை வெல்ல நினைக்கின்றது ரஷ்யா.

போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா?

2 COMMENTS

  1. […] போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை (24) ஆரம்பமாகிய ரஷ்யாவின் படை நடவடிக்கை, வெள்ளிக்கிழமை (4) ஒன்பதாவது நாளாகத்முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-172-march-05/ https://www.ilakku.org/  […]

Leave a Reply

Exit mobile version