நேட்டோவுடன் மோத தயாராகின்றதா ரஸ்யா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ரஸ்ய அதிபரின் நடவடிக்கைகளை எம்மால் எதிர்வுகூற முடியவில்லை அவர் நாளை என்ன செய்யப்போகிறார் என்பதை என்னால் கணிப்பிட முடியவில்லை என பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட த குயஸ்ற் பிரான்ஸ் என்ற ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கி.

அவர் கூறியதைபோலவே இந்த வாரம் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சப்ரோசியா, கேர்சன், லுஹான்ஸ் மற்றும் டொனஸ்ற் பகுதிகளில் ரஸ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை (23) நடத்தியுள்ளது ரஸ்யா. இந்த பகுதிகளில் ஏன் அவசரமாக ரஸ்யா வாக்கெடுப்பை நடத்துகின்றது? அதுவும் கார்கிவ் பகுதியில் உக்ரைன் படையினர் ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் ரஸ்யா இந்த வாக்கெடுப்பை நடத்த காரணம் என்ன?

முதன்மையான காரணம் வாக்கெடுப்பு நடத்தி இந்த பகுதிகள் ரஸ்யாவுடன் இணைந்த பின்னர் இந்த பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டால் அது ரஸ்யா மீதான தாக்குதலாகவே கொள்ளப்படுவதுடன், உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தையும் ரஸ்யா மேற்கொள்ளலாம் என்பதாகும்.

அதேசமயம், ரஸ்யா தனது பின்னிருக்கை படையினரில் 300,000 படையினரை போருக்கு அழைத்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது ரஸ்யாவின் பின்னிருக்கை படையினரான 25 மில்லியன் படையினரில் ஏறத்தாள 1 விகிதமாகும். கடந்த புதன்கிழமை (21) ரஸ்ய அதிபர் மேற்கொண்ட இந்த அறிவித்தலை தொடர்ந்து 24 மணிநேரத்தில் 10,000 பேர் தம்மை பதிவுசெய்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யா திடீரென பெருந்தொகையான படையினரை ஏன் அழைத்துள்ளது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அதாவது உக்ரைன் போரில் ரஸ்யா அதிக படையினரை இழந்துள்ளதாகவும் அதனை ஈடுசெய்வதற்காகவே இவ்வாறு மேற்கொள்வதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துவருகையில் ரஸ்யா அதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.

அதாவது தற்போதைய போரானது உக்ரைன் – ரஸ்யா போர் அல்லாது ரஸ்யாவுக்கும் மேற்குலகத்திற்குமான போராக மாற்றம் பெற்றுள்ளதாகவும், 150 நேட்டோ படை அதிகாரிகள் உக்ரைனில் தங்கியிருந்து உக்ரைன் படையினரை வழிநடத்துவதுடன், பெருமளவான நவீன ஆயுதங்களை வழங்கி ரஸ்ய படையினரையும், ரஸ்ய மக்களையும் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்குலக நாடுகளை சேர்ந்த 70 படைத்துறை செய்மதிகளும், 200 தனியார் செய்மதிகளும் உக்ரைனுக்கு உதவியாக ரஸ்ய படையினரின் படை நடமாட்டங்கள் மற்றும் வான் எதிர்ப்பு ஆயுதங்களின் நிலையிடங்கள், வான்படை தளங்கள் என்பவற்றை மணிக்கு ஒரு தடவை தகவல்களாக வழங்கிவருவதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சோய்கு தெரிவித்துள்ளார்.

அதாவது உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகிய போது 150,000 படையினரை பயன்படுத்திய ரஸ்யா தற்போது அதன் எண்ணிக்கையை 450,000 ஆக அதிகரிக்கப்போகின்றது. இதன்மூலம் உக்ரைனில் புதிய களமுனையை ரஸ்யா திறக்கப்போகின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும் ரஸ்யாவின் நடவடிக்கையை பார்க்கும் போது அவர்கள் நேட்டோ படையினருக்கு எதிராகவே இந்த 300,000 படையினரையும் பயன்படுத்தபோவதாக தெரிகின்றது. உக்ரைன் படை நடவடிக்கையை தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பு ரஸ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் ஏறத்தாள இரண்டு இலட்சம் படையினரையும் ஆயுதங்களையும் குவித்துள்ளது.

எனவே ரஸ்யாவின் இந்த படை குவிப்பு என்பது நேட்டோவுக்கு எதிரான ஒரு மோதலுக்கு ரஸ்யா தயாராவதாகவே கணிப்பிட முடியும். அவ்வாறு ஒரு போர் இடம்பெற்றால் தனது நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அணுவாயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் ரஸ்ய அதிபர் பூட்டீன். தான் வீண் வார்த்தைகளை பேசவில்லை சொல்வதை செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

அதேசமயம், சவுதி அரNபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மானின் தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று ரஸ்ய படையினரிடம் சரணடைந்த பல ஆயிரம் உக்ரைன் படையினரில் 215 படையினரை கடந்த புதன்கிழமை (21) ரஸ்யா விடுவித்துள்ளது. விடுவித்தவர்களில் மரியப்போல் பகுதியில் கைது செய்யப்பட்ட அசோவ் பற்றலியனின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகளை சேர்ந்த 10 வெளிநாட்டு படையினரும் அடக்கம்.

அதேசயம், உக்ரைனினால் கைது செய்யப்பட்ட உக்ரைனின் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 55 ரஸ்ய படையினரை விடுவித்துள்ளது உக்ரைன். பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அசோவ் படை பிரிவு தளபதிகள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினரை ரஸ்யா ஏன் விடுவித்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

அதாவது அவர்களை விடுதலை செய்வதன் மூலம் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் போரில் உக்ரைன் படையினர் சரணடைவதற்கான நம்பிக்கைகளை அதிகரிக்க முடியும் என ரஸ்யா திட்டமிட்டிருக்கலாம்.

அதேசமயம், புதிதாக இணைக்கப்படும் 300,000 படையினர் தற்போது உள்ள 1000 கி.மீ எல்லைகளை பாதுகாக்க ரஸ்யப் படையினர் முன்னோக்கி நகர்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புதிதாக ரஸ்யாவுடன் இணைக்கப்படும் நான்கு மாநிலங்களில் உள்ள படையினரும் ரஸ்ய இராணுவத்திற்குள் உள்வாங்கப்படுவதர்கள் என்பதால் ரஸ்யா தனது படையினரில் படை பலத்தை அதிகரிக்கப்போகின்றது.

மறுவளமாக ஆயுத உற்பத்தியையும் அது அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக ஒரு தொகுதி எஸ்.யூ-57 ரக ஐந்தாம் தலைமுறை விமானங்களை தனது வான்படையில் இணைத்துள்ள ரஸ்யா ஆயுத தொழிற்சாலைகளையும் தெடர்ந்து 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என பணித்துள்ளது.

படைத்துறை அவதானிகளின் கருத்துக்களின் அடிப்படையில் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகரித்து வருவது தெளிவாகியுள்ளது. பூட்டீனின் உரையை தொடர்ந்து ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான பின்விளைவுகளை அது சந்திக்கும் என அமெரிக்க தனிப்பட்டமுறையில் ரஸ்யாவை எச்சரித்ததாக தெரிவித்துள்ளது அமெரிக்க ஊடகம்.

ரஸ்யா அணுவாயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தினால் ரஸ்யாவின் கருங்கடல் பகுதி கடற்படை கப்பல் தொகுதியை அமெரிக்க அழிக்கும் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் ஓய்வுபெற்ற லெப்.ஜெனரல் தர அதிகாரி. அமெரிக்கா அவ்வாறு செய்தால் அமெரிக்காவின் கடற்படை கப்பல்கள் மறு நிமிடமே அழிக்கப்படும் என தெரிவித்துள்ளது ரஸ்ய தரப்பு. அதற்கு ஏற்ப அண்மையில் கடற்பகுதியில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்திருந்தது ரஸ்யா. அதாவது போர் அடுத்த பரிணாமத்திற்குள் செல்லப்போகின்றது.

இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் இந்த பத்தியின் முதல் பந்தியில் நான்பதிவு செய்த செலன்ஸ்கியின் கருத்து. அதாவது பூட்டினின் அடுத் நகர்வை கணிப்பிடுவது கடினமானது என்பதை மேலே தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ரஸ்யா மேற்கொள்ளும் எதிரும் புதிருமான நகர்வகள் தான் எதிரிகளின் கணிப்புக்களையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அடிக்கடி பொய்யாக்குவதுடன், நேட்டோவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு பொறிக்குள் சிக்கிவிட்டனவோ எனவும் பலரை எண்ணத் தூண்டியுள்ளது.

அதனை தான் சீன ஊடகமும் தெரிவித்துள்ளது. அதாவது இந்த போரின் முடிவு எதுவானாலும் இழப்பு என்பது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மட்டுமே என அது தெரிவித்துள்ளது.