Home ஆய்வுகள் அனைத்துலக பெண்கள் நாள் 2022: சார்புத்தன்மைகளைத் தகர்ப்போம் | சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக பெண்கள் நாள் 2022: சார்புத்தன்மைகளைத் தகர்ப்போம் | சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக பெண்கள் நாள்

அனைத்துலக பெண்கள் நாள் 2022

பால்நிலைப் புறக்கணிப்பு ஓதுக்கல் அற்ற உலகை எண்ணிடுவோம் 

இவ்வாண்டு முதல் மார்ச் 10 அனைத்துலகப் பெண் நீதியரசர் நாள்

தாயகப் புலப் பெண்கள் சிலர் கருத்தின் வழியமைந்த சிறுவிளக்கம் –

கோவிட் 19க்குப் பின்னர் உலகளாவிய நிலையில் பெண்கள் தங்கள் வாழ்வையும், தாங்கள் பெண் தலைமையாளர்களாக உள்ள குடும்பங்களின் வாழ்வையும் நாளாந்தம் முன்னெடுப்பதற்கு தொழிலிழப்பு, சத்தி வளங்களின் கட்டண உயர்வு, பணவீக்கங்கள், உணவு வங்கிகளில் தங்கி வாழும் நிலை, வலை வழிக்கல்விக்கு கணினியோ தகுந்த அலைபேசியோ பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க இயலாநிலை, இவற்றை யெல்லாம் ஒவ்வொரு நாளும் பெருவளர்ச்சி பெற வைக்கும் புதிய உலக அரசியல் முறைமைகள், சக்திவள தன்னியக்க இயந்திரமனித உலகின் நான்காவது பொருளாதாரப் புரட்சிகள், இயற்கையையும், சூழலையும், மனிதத்தையும் மாசுபடுத்தும் நாளாந்த வல்லாண்மை நாடுகளின் நடவடிக்கைகள் என்பன என்றுமில்லாத அளவுக்கு அதிகரிக்கும் சூழலில் 2022ம் ஆண்டு அனைத்துலகப் பெண்கள் நாளைக் கொண்டாடுகின்றனர்.

சார்புத் தன்மைகளைத் தகர்ப்போம். புறக்கணிப்பு ஒதுக்கல் அற்ற பால்நிலை உலகை எண்ணி வாழ்ந்திடுவோம் என்னும் இருநிலை கோட்பாடுகளை மையப்படுத்தி, இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் நாள் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் பெண் என்ற மனிதத்தின் தன்னிகரில்லா தனியாற்றலின் நாளாந்த வாழ்வில் உலகத்தையும், உறவுகளையும், உடலையும் பெண்ணுக்கு பகைமையாகவும் எதிரியாகவும் வழமையாக்கி விட்ட பழமைகளின் சார்புத்தன்மைகள் வழி வரும் தடைகளைத் தகர்ப்போம் என்னும் இயங்கியல் தன்மைக்கான அழைப்பு பலமாக விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிலையில் பால் நிலைப் புறக்கணிப்பு ஒதுக்கல் என்பன உளமனப் பாங்கு ஆதலால், மனதில் பால்நிலைச் சமத்துவ உலகை எந்த அளவுக்கு இளையவர் இடையில் உருவாக்கு கின்றோமோ அந்த அளவுக்கே புறநிலைப் பாதுகாப்புக்கள் பால் நிலைச் சமத்துவத்தில் நிலைபெற முடியும் என்கிற ஆழமான உறுதிப்பாட்டை உளப்படுத்தும் வகையில் அமைகிறது.

இந்த இருதள அழைப்பும் விடுக்கப்படும் உலகச் சூழலின் பொதுத்தன்மை, முன்னரே சிறிது விளக்கப்பட்டாலும், இவ்வாரத்தன்மை இவ்வழைப்பின் தேவையில் தெளிவு பெறல் முக்கியம். ரசிய – உக்ரேன் முரண்பாடு பெண்ணை மட்டுமல்ல மண்ணையும், மக்களையும், மனிதர்களையும் மட்டுமல்ல, உயிரினமொன்று உலகின் சில பாகங்களில் இல்லாது போகச் செய்திடுமோ என்னும் அணுவாயுத யுத்த காலத்துக்கான தலைவாயிலாகத் தோன்றியுள்ள நிலையில், தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் காத்திடும் பொறுப்புச் சிக்கல்கள் மிகுந்த நேரத்தில், மில்லியன் கணக்கான பெண்கள் சிலநாட்களுக்குள்ளாகவே வாழ்விழந்த வளமிழந்த ஏதிலிகளாக ஐரோப்பாவில் குவிகின்ற நேரத்தில், அனைத்துலகப் பெண்கள் நாள் அமைகிறது.

இந்நேரம் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதனையும் விட மோசமாக இங்கு நடைபெறும் மனித உரிமை வன்முறைகள், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்கும் மேலாக இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் முப்பெரு அனைத்துலகக் குற்றச் செயல்களையும் திட்டமிட்ட வகையில் தனது பாதுகாப்புப் படைகளின் அரச கடமையாகச் சிறிலங்கா ஈழத்தமிழர்களுக்குச் செய்ய, அன்று மீயுயர் கட்டளைத் தலைமையாக இருந்த கோட்டாபய ராசபக்ச, இன்று அதற்காக உலகின் மதிப்புக்குரிய ஜனாதிபதியாக உலகால் எற்கப்படுகின்ற சூழலில், இன்றும் 89000 பெண் தலைமைக் குடும்பங்களும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் கிட்டிய உறுப்பினர்கள் ஆயிரமாயிரம் பெண்களும் தண்டனை நீதிக்காகவும் பரிகார நீதிக்காகவும், நிலைமாற்று நீதிக்காகவும் ஈழத்தில் நாள்தோறும் ஏங்கி ஏங்கி உக்கிச் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில், ஈழத் தமிழ்ப் பெண்கள் தங்களின் 2022ம் ஆண்டு அனைத்துலகப் பெண்கள் நாளை தங்கள் பெண் தலைமைத்துவங்கள் மாலதி, அங்கயற்கண்ணி முதல் ஆயிரமாயிரம் பேர் தங்கள் இன்னுயிரைத் தங்களின் சார்புத் தன்மைகளைத் தகர்ப்போம் என்னும் உள்ளத்து உறுதியுடன், முப்பதாண்டுகளுக்கு மேலாக உலகின் பெண்ணிய வீரவரலாற்றைப் படைத்தமையை எண்ணித் தலை நிமிர்ந்து கொண்டாடுகின்றனர்.

இத்தருணத்தில், ஐக்கிய நாடுகளின் கொள்கைத் திட்டமிடலாளர்களைப் பார்த்து ஒரு முக்கிய கேள்வியை முன்வைக்கின்றார்கள். இன்று நீங்கள் சார்புத் தன்மைகளைத் தகர்ப்போம் என்று சொல்வதை முப்பதாண்டுகளுக்கு முன்னரே எங்கள் தேசியத் தலைவனின் சொல்லாணையாக ஏற்று செயற்பட்டதற்குப் பரிசா இன்றைய எங்கள் பெண்களின் அவல நிலை என்பதே அக்கேள்வி. இந்தக் கேள்விக்குக் கூட இதுவரை நடைமுறையில் நிலை மாற்று நீதியை வெளிப்படுத்த இயலாத ஐ.நா உக்ரேன் மக்களுக்கான அனைத்துலகக் குற்றமன்ற விசாரணைகளை நிகழ்வுகள் நடைபெறுகின்ற போதே தொடங்கியுள்ளது என்றால், ஈழப் பெண்களான எங்களுக்கு ஏனிந்த மௌனம்? ஏனிந்த கால இழுத்தடிப்பு?

பெண் நீதியரசர்கள் அனைத்துலக நாளை இவ்வாண்டு முதல் கொண்டாடுகின்றீர்களே, எங்கள் தமிழீழ நீதியரசர்களாக இருந்த பெண்களைச் சிறிலங்கா இனவதை செய்த வரலாற்றையாவது நீங்கள் இந்நாளில் வெளியிடும் திராணியாவது உங்களுக்கு வருமா? இவையெல்லாம் உரிமை கொண்டெழுந்த ஈழத்தமிழ்ப் பெண்களின் குமுறல் மட்டுமல்ல, நாளை எங்கள் பெண்கள் உலகின் நீதியரசர்களாக அமர்கின்ற காலம் உலகநாடுகளில் விரைவில் வருகின்ற பொழுது உங்கள் செயல்களுக்கும் சேர்த்துத் தீர்ப்பு எழுதுவார்கள் என்பதை இப்பொழுதே உலகப் பெண்களுக்கு உரக்க உரைத்திடவே இவ்வெழுத்து.

இனி ஐக்கிய நாடுகள் சபையினர்தான் வாயளவில் பெண்ணுரிமை பேசுகின்ற பெருமையுடையவர்கள் என்றால், புலம்பெயர்ந்து புலம்பதிந்து வாழும் எங்கள் சொந்த உடன்பிறப்புக்களிலும் பெண்மானமற்ற பெண்களும் ஈழத்தமிழ்ப் பெண்களுக்குத் தாயகத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிலும் பெண்ணுரிமையை எட்டாத கனியாகவே கட்டித் தொங்க விடுவார்கள் என்பது அனுபவ வரலாறாக அமைகிறது.  இங்கு வாழ் புலம்பதிந்த தமிழர்களின் இந்து ஆலயங்களில் மாதவிலக்கென ஆலயச் சூழல்களில் உள்ள தமிழ் மற்றும் கலைகள் பயில் இடங்களுக்குக்கூட பள்ளி மாணவிகள் அனுமதிக்கப்படாத அடிப்படை மனித உரிமை மீறல்களைத் தமிழ்ப் பெற்றோர்களே தங்கள் விருப்பத் தெரிவாக முன்னெடுக்கும் பழமையும் வழமையாக உள்ளது. படிக்கும் பள்ளியில் வெளிக்களப் பயிற்சிப் பாசறைகளுக்குப் பெண் மாணவிகளைத் தங்கிப் பயிற்சிபெற அனுமதி மறுக்கும் பால்நிலைச் சமத்துவ மறுப்பாளர்களான தமிழ்ப் பெற்றோர்களும் ஏராளம்.

இதற்கிடை போதனா ஆசிரியர்களாகவும் தொழில் தருநர்களாகவும் தமிழிளம் பெண்களுடன் பழகி அவர்களைச் சிறுவர் வன்முறைகளுக்கு உள்ளாக்கிய தமிழர்கள் குறித்த வழக்கு எண்ணிக்கைகளும் அதிகரிக்கின்றன. அத்துடன் வீட்டு வன் முறைகளையே தமிழ்ப்பெண்கள் வாழ்வாக்கி, மீறினால் விவாகரத்துப் பெற்றுச் செல்பவர்கள் எண்ணிக்கையும் கூடத்தான் செய்கிறது. புதுமொழி பேசி சீதனத்தைப் பெண்களிடமிருந்து வாழ்க்கைப் பாதுகாப்பெனப் பெறும் ஆண்களும், ஆட்டை வளர்ப்பது தனது நாவுக்கான ருசிக்கு என்பது போல பிள்ளைகளை வளர்ப்பது தங்கள் விருப்புக்களின் எண்ணங்களின் ஒளிப்படப்பிரதிகளுக்கு உயிர் வழங்கவென்னும் பெற்றோர் கல்வி முதல்தொழில் வழி திருமணம் வரை தங்கள் விருப்பத் தெரிவில் பிள்ளையின் நாளைய வாழ்வை வடிவமைக்கும் சுதந்திரமான விருப்பத் தெரிவு மறுப்பு வாழ்வு என்பது புலத்தில் குறிப்பாகப் பெண்களுக்குத் தாயகத்திலும் இங்கும் ஒரே பழமையில் வந்த வழமைகளாகவே, மனித உரிமை வன்முறைப்படுத்தல்களின் வளர்ச்சியாகவே வளர்ந்து செல்கின்றன. இது புலத்துத் ஈழத்தமிழர் பெண்ணுரிமைகளுக்கு எதிரான சில தகர்க்கப்பட வேண்டிய அகத்து நிலைகள்.

அதேவேளை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ்ப் பெண்களுக்குப் புறநிலையில் தகர்க்கப்பட வேண்டிய சார்புநிலை ஒன்றே ஒன்றுதான், தங்கிவாழ மனிதமாகப் பெண்மை முன்னிறுத்தப்பட வேண்டும். மனிதம் தான் புறத்தில் உள்ளது அகத்தில் தான் ஆண்பால் பெண்பால் என்ற கருவளமுறைமை கட்டமைகிறது. இதனால்தான் காதல் என்னும் தன்னையே இழந்து இன்னொருவராகத் தான் வாழும் தன்மை பெயர்சொல்லா வழமையாக கட்டமைக்கப்பட்டு தமிழிலக்கிய மரபு காதல் எனத் தன்னை இழந்து இன்னொருயிரை தனதா கக்கருதி வாழத் தொடங்கும் உயர்நிலையையும், அந்த உணர்வின் வளர்ச்சியில் தன்னால் தோற்று விக்கப்பட்ட மனிததத்தையே தனதாகக் கருதி அதனை காக்கும் கடமையை வீரம் எனவும் சங்கத் தமிழிலக்கியம் அகத்திணை வாழ்வினதும் புறத்திணை வாழ்வினதும் பெருமையாக விழுமி யங்களாகப் பேசியது.

இந்தப் பெருமைக்குரிய மனிதப்பிறப்பை தன் உள்ள உடல் கலப்பால் உருவாக்கி தன்கருவில் அதனை இன்னொரு மானிட உடலாக வார்த்தெடுத்து தன் தன்னலமற்ற பெருவாழ்வால் அது இன்னொரு மனிதனாக இம் மண்ணில் தோன்றிய வினாடி முதல் கட்டியணைத்து முத்தமாரிக்கு நடுவில்தன் இரத்தத்தையே அதன் வளர்ச்சிக்கான உயிர்ச்சத்தான பாலாக்கி அது தன்னறிவு பெறும் வரை முற்றிலும் பாதுகாப்பாக அதற்குத் தன்னையே அளித்துத் தரணியில் வீர மனிதத்தின் வீறுநடையினை அம்மனிதன் இட வைக்கும் இதயப்பேரன்பு தாய்மை என்னும் தங்கக் கட்டிலில் அரசிருக்கும் பெண்மை என்னும் மானிடத்து முதல் தெய்வம். அவளுக்கு மறுபெயர் வாழும் கடவுள். இதுவே தமிழ்ப்பெண்கள் தனித்து நின்று சார்புத்தன்மைகளைத் தகர்த்து பால்நிலை வாழ்வில் மகிழ்வுறு காலத்தைப் படைத்த சங்கத் தமிழ்க்காலம்.

காலப்போக்கில் பெண்ணை அடிமை செய்து தாய்வழிச்சமுதாயத்தைத் திசைமாற்றி மண்ணையும் அடிமை செய்து தமிழையும் தமிழரையும் அலைவு உலைவு சமுதாயமாக உலகில் உலாவர வைத்தநிலை மாற்ற 2022இல் மீளவும் உறுதியின் உறைவிடமாகிய ஈழத் தமிழ்ப்பெண்கள் துப்பாக்கிகள் தங்களுக்கு முப்பது ஆண்டுகள் உயிர் உடல் உடமைப் பாதுகாப்பு அளித்த துப்பாக்கிகள் மௌனித்த நிலையிலும் வீரம் தரு தாய்முலைப்பாலேந்திய உடல்களே தமிழர்களின் பாதுகாப்பான அமைதியை மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் மூத்த பெண் போராளிகள் என்ற வரலாற்றுப் பெருமையினை மீளவும் உறுதிசெய்து இவ்வுலகின் பாதுகாப்பான அமைதியையும் நிலை நிறுத்த அணிஅணியாக நீதியின் குரலாக உண்மையின் உறுதிப்படுத்தலின் செயலாகப் பயணிப்பர் என்னும் உறுதியை இந்த 2022ம் ஆண்டின் தமிழீழக்காற்றிலும் கடலிலும் மண்ணிலும் வானிலும் ஒளியாக உலகப் பெண்ணினத்தின் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீர மங்கையர்கள் நினைவேந்தல் தருகிறது.

Exit mobile version