பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் -வழக்கறிஞர் சுகாஸ்

பயங்கர வாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ்   தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்ப கரமான வியாக்கி யானங்களைக் கொண்ட அல்லது பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை திட்ட வட்டமாகச் சட்ட ரீதியாக வரையறுக்காத ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப் படுகின்றது.

பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது இலங்கை அரசினுடைய அல்லது இலங்கை அரசை பல்வேறு பட்ட காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த, பல்வேறு பட்ட அரசாங்கங் களினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக செயல்படு கின்றவர்களை அல்லது அரசாங்கங் களினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான அரசியல் நிலைப் பாடுகளை கொண்டிருந்த வர்களை அடக்குவதற்கு பயன் படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத்  தான்  இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், இலங்கையிலே நடை பெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக் கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல் படுவது பயங்கரவாதம் ஆகாது. அந்த வகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப் பாடுகள் காரணமாகவே கைது செய்யப் பட்டிருக்கின்றார்கள்.

அதாவது இன்று சிறைகளிலே  நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப் படாது அல்லது ஆரம்பிக்கப் பட்ட வழக்கு விசாரணை முடிவடையாது எப்பொழுது தங்களுடைய வழக்குகள் முடிவடையும் என்பது கூடத் தெரியாது, நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் வாடிக் கொண்டிருக் கின்றார்கள்.

2009ஆம் ஆண்டுக்குப் பின் பயங்கர வாதம் இல்லை. அல்லது பயங்கர வாதத்தை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தது உண்மை. ஆனால் 2009இற்குப் பின்னர் நான் மேலே குறிப்பிட்ட வாறு, தங்களுடைய அரசியல் கொள்கை களுக்கு மாறாக செயல் படுகின்றவர்களை அடக்குவதற்கு தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் விரும்பியோ, விரும்பாமலோ கொண்டு வருவதற்கான ஒரு உத்தியாக, ஒரு சாதனமாக இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன் படுத்துகின்றது என்பது தான் உண்மை.

இன்று தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமின்றி, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம்  தலைவர்களும் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இது இலங்கை அரசும், அரசை ஆளுகின்ற அரசாங்கமும் தங்களினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவர்களை அல்லது ஏற்காதவர்களை அடக்கு வதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாக பயன் படுத்துகின்றது என்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் இது.

இதற்கான தீர்வுகள் என்று வருகின்ற பொழுது, முற்று முழுதான ஒரு சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையிலே நடை பெற்ற இனப் படு கொலைக்கு நடக்கின்ற பொழுது அங்கு இலங்கை அரசை வழிக்கு கொண்டு வருவதற்காக, இந்த பயங்கர வாத தடைச் சட்டத்தை, முற்றாக நீக்க வேண்டும் என்கின்ற ஒரு பேரம் பேசலை, அல்லது ஒரு நிபந்தனையை விதிக்க முடியும். அல்லது இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்களின் ஊடாக வழங்கப் படுகின்ற அழுத்தங்களின் ஊடாக இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தான் ஒரே தீர்வு.

ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு, நீக்குவதற்கு, ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கிய மானது.” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021