Home ஆய்வுகள் அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

582 Views
அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

தென்னா பிரிக்காவின் மெவிசோ (Mvezo) வில் 1918ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி பிறந்த நெல்சன் ரொலிலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்கள், தனது 26ஆவது அகவையில் ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து, அதன் வளர்ச்சியாக ஆபிரிக்க தேசிய இளையோர் காங்கிரசை உருவாக்கினார். 1948இல் அதன் செயலாளராகப் பணிப் பொறுப் பேற்றார். இது இளையவர்கள் பங்கேற்றுத் தங்களுக்கான கட்டமைப்பை உருவாக்கித் தலைமை தாங்கி வழி நடத்தல் என்பது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது.

ரொலிலா மண்டேலா என்பது தான் நெல்சன் மண்டேலா அவர்களின் பிறப்புப் பதிவுப் பெயர். இவருடைய ஆசிரியர் தான் ரொலிலா என்றால் குழப்பக்காரன் என்ற பொருள் தரும் சொல். அத்தகைய சொல்லை ஆபிரிக்கர்களின் அறியாமையை மையமாக வைத்து நிற வெறியர்கள் சூட்டு கிறார்கள் என்பதை எடுத்து விளக்கி, அவருக்கு நெல்சன் என்ற பெயரை அதற்குப் பதிலாகப் பயன்படுத்து மாறு கூறினதாக வரலாறு கூறுகிறது. தமிழர்களது வரலாற்றிலும் வடமொழியில் அதற்கு உள்ள இழி பொருள் தெரியாத தமிழர்கள் அதனைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி வருகின்றனர் என்பது இவ்விடத்தில் தமிழர்கள் மனங் கொள்ள வேண்டிய விடயம்.

‘மீறுகை’ முனைப்பியக்கம் ஆரம்பம்

“மனிதாயம் என்னும் மானிடத்தின் பொதுத் தன்மை மாற்ற இயலாது என்பதை மாற்ற வேண்டும் என ஒவ்வொரு மனிதனையும் கோருகிறது. எனவே ஒருவரால் இந்த உலகத்தை சிறப்பான உலகமாக மாற்ற முடியும். எல்லோரும் வளமாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குதலே அமைதியை  உருவாக்குதலாகும்” என்ற உள்ள உறுதியுடன் 1952 இல் ‘மீறுகை’ முனைப்பியக்கத்தை நெல்சன் மண்டேலா ஆரம்பித்தார். இந்த ‘மீறுகை’ இயக்கமானது, நீதியற்ற சட்டங்களுக்கு எதிரான மக்களின் திரள் நிலை ஒத்துழையாமையை வெளிப் படுத்தத் தொடங்கியது.

உலக அரசியல் வரலாற்றில் தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றில் தான் ஆறாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடாலிபுரத்தில் சமண மன்னராட்சிக்கு எதிராக முதன் முதலில் ‘சத்தியாக்கிரக’ என்று ஹிந்தி மொழியில் வழங்கப்படும் அறப்போர் வடிவத்தை தோற்றுவித்தார். தமிழிச்சியான வள்ளியம்மை என்பவரிடம் இருந்து தென்னா பிரிக்காவில் மகாத்மா காந்தி அறப் போரைத் தெரிந்து கொண்டு, அதனை தென்னா பிரிக்காவில் மனித சமத்துவத்திற்கான தனது போராட்டங்களிலும், இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பயன் படுத்தினார்.

1946ஆம் ஆண்டு இந்தியா தான் இன ஒதுக்கலுக்கு எதிரான நீதி என்பது ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப் படல் வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்து, தென்னா பிரிக்காவில் இந்தியர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது. இந்திய – தென்னாபிரிக்க மக்கள் உறவுக்கு இது மூலக்கல்லாக அமைந்தது.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள்  தென்னா பிரிக்காவின் ‘இஸ்சார்ப்வில்ல’ (Sharpeville)  வில் குழந்தைகள், பெண்கள் உட்பட்ட 69 தென்னா பிரிக்காவினரை அன்றைய பிரித்தானிய நிறவெறி ஆட்சியார்கள் இன அழிப்புச் செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 18000 பேரைக் கைது செய்தனர். இந்த இன அழிப்பு வரலாற்றின் நினை வேந்தலாகவே 1985ஆம் ஆண்டு முதல் மார்ச் 21இல் ‘இனபேத புறக் கணிப்புக்கு எதிரான உலக நாளை’ ஐக்கிய நாடுகள் சபை கட்டமைத்துக் கொண்டாடி வருகிறது.

1960களில் ஈழத்திலும் அறப்போர் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான கருவியாக முன்னெடுக்கப் பட்டு, அது சிங்கள பௌத்த இலங்கை அரசால் ஆயுதப் படைபலப் பயன் பாட்டின் மூலம் ஒடுக்கப் பட்டது, ஈழத் தமிழர் குறித்த வரலாறாக உள்ளது.

நெல்சன் மண்டேலா அறப் போரின் பின்னடைவை அடுத்து 1961இல் ‘நாங்கள் தேசியத்தின் ஈட்டி’ எனப் பொருள்படும் ‘உம்கொண்ரூ வீ சிஸ்வீ’ (Umkhonto we Sizwe) என்னும் ஆயுதமேந்திய தென்னாபிரிக்க விடுதலை அமைப்பை நிறுவி, அதன் தலைமைத் தளபதியாகத் தானே பணிப் பொறுப் பேற்றார்.

ஆனால் ஈழத் தமிழ்த் தலைமையினால் 1961 இல் மூன்று மாதங்கள் மட்டுமே சிங்கள ஆட்சியின் நிர்வாகத்தை வடக்கு கிழக்கில் முடக்க முடிந்தது.  ஈழத் தமிழ்த் தலைமை, தங்களின் அறப் போரை படையணிப் பலம் கொண்டு சிங்கள அரசு சிதைத்ததும், தங்களின் பாராளுமன்றப் பதவி நிலைகளைப் பாதுகாத்த நிலையில் ஆக்கிரமிப்புச் செய்யம் அரசிடமே மனுக் கொடுத்து உரிமை கோரும் பாராளுமன்றப் போராட்டமாக அதனை மாற்றிக் கொண்டது.

நெல்சன் மண்டேலா 1962இல் தனது விடுதலை அமைப்புக்கான ஆதரவைத் தேடி ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார்.

ஈழத்திலும் தந்தை செல்வாவும் அறப் போர் முடக்கப் பட்டதை அடுத்து, தமிழர்கள் மிக அதிகமாக வாழும் தமிழகத்திற்கு ஆதரவு தேடிச் சென்றார். ஆனால் மண்ணைக் காக்கும் உறுதியான திட்டங்கள் இல்லாது இருந்தமையால், அந்தப் பயணங்கள் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நிலையை உலகில் உருவாக்காது, வெறும் சந்திப்புக் களாகவே முடிந்தன.

1962 ஓகஸ்ட் 5ஆம் திகதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க அரசின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியமை, வேலை நிறுத்தங்களைத் தூண்டியமை என்ற குற்றச் சாட்டுக்களின் கீழ் கைது செய்யப் பட்டு, 5வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

1963இல் ரிவோனியாவில் தென்னாபிரிக்கத் தேசிய காங்கிரசின் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கில் நெல்சன் மண்டேலாவையும் ஆட்சியாளர்கள் இணைத்துக் கொண்டனர். 1962ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் நாள் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ரொப்பன் தீவு (Robben Island) சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அவரின் சிறை வாழ்க்கை பொல்ஸ்மோர் (Polls moor) சிறையிலும், விக்டர் வேர்ஸ்டர்  (Victor Verster) சிறையிலும் தொடர்ந்தது.

“எங்களுடைய விடுதலைக்கான அணிவகுப்பு மீளமாட்டாத தொன்று. அச்சத்தை எங்களுடைய பாதைக்குத் தடையாக நிறுத்த அனுமதியோம்” என்ற நெல்சன் மண்டேலா அவர்களின் உள்ள உறுதியைத் தங்கள் வாழ்வின் வழியாகக் கொண்டு, தலைமை இல்லாத நிலையிலும் தொடர்ந்து போராடி வந்த ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உடன் பிரட்றிக் வில்லியம் தீ கிளார்க் (Frederik Willem de Klerk) அவர்கள் உள்துறை அமைச்சராக வந்ததை அடுத்து தென்னாபிரிக்க அரசு 1985இல் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தது.

“எங்களுடைய விடுதலைக்கான அணிவகுப்பு மீளமாட்டாத தொன்று. அச்சத்தை எங்களுடைய பாதைக்குத் தடையாக நிறுத்த அனுமதியோம்”

1989இல் தென்னா பிரிக்காவின் அரச தலைவராக அவர் வந்த பின்னர், சிறைச் சாலையில் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்தார். இதன் விளைவாக 02.02. 1990 இல் தென்னாபிரிக்கத் தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்கப் பொதுவுடைமைக் கட்சி, எல்லா ஆபிரிக்கர்களுக்குமான கட்சி என்பவற்றின் மீதிருந்து வந்த தடை யுத்தரவுகள் நீக்கிக் கொள்ளப்பட்டன.

இதற்குக் காரணம் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் உலக மக்களிடை ஆதரவு தேடியமையே ஆகும்.  குறிப்பாக தென்னாபிரிக்க அரசுக்குப் பேராதரவாக இருந்த பிரித்தானியாவில் நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காகவும், தென்னா பிரிக்காவில் நிறவெறி ஒழிய வேண்டும் என்பதற்காகவும் பிரித்தானிய மக்களைத் தொடர்ச்சியாக தெருநிலை சனநாயகப் போராட்டங்களைத் தொடர  ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஊக்குவித்தது.  அரசுகளிடம் அல்ல மக்களிடமே நீதிக்கான குரல் எழுப்பப் பட்டாலே வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக, 27 ஆண்டுகால நீண்ட  சிறை வாழ்வின் பின்னர்  11.02.1990 இல் நெல்சன் மண்டேலா விடுவிக்கப் பட்டார்.

“உடைப்பதும் அழிப்பதும் இலகு. அமைதியை உருவாக்கி கட்டியெழுப்புபவரே சாதனை வீரர் எனப் படுபவர்கள்” என்பது நெல்சன் மண்டேலாவின் உள்ளத்து எண்ணமாக இருந்தமையே அவரின் துன்பங்களைத் தாங்குவதற்கான ஆற்றலாகவும், நிற வெறிக்கு எதிரான வெற்றியின் இரகசியமாகவும் அமைந்தது.

22.06. 1990 இல் ஐக்கிய நாடுகள் சபை நிறத்தால் இன ஒதுக்கல் செய்வதற்கு எதிரான சிறப்புச் செயற் குழுவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் துணைத் தலைவர் என்ற நிலையில் நெல்சன் மண்டேலா கலந்து கொண்டு உரையாற்றினார். தென்னா பிரிக்காவின் சூழலை நேரடியாகக் கண்டு உணர்ந்து ஏற்புடைய தீர்வை ஏற்படுத்து வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்கள் குழு ஒன்றினைத் தென்னா பிரிக்காவுக்கு அனுப்பும்படி ஐக்கிய நாடுகள் சபையின் இன ஒதுக்கலுக்கு எதிரான சிறப்புச் செயற் குழுவிடம்  அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“உடைப்பதும் அழிப்பதும் இலகு. அமைதியை உருவாக்கி கட்டியெழுப்புபவரே சாதனை வீரர் எனப் படுபவர்கள்”

ஐக்கிய நாடுகள் சபையும் அதனை ஏற்றது. 1993ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவிற்கும், பிரட்றிக் வில்லியம் தீ கிளார்க்கும் இணையாக வழங்கப்பட்டு இருவரதும் அமைதியை உருவாக்கி கட்டியெழுப்பும் பணிகள் போற்றப்பட்டன.

எல்லா இனத்தவரும் சமத்துவ வாக்குரிமையுடன் பங்கேற்ற 27.04.1994ஆம் ஆண்டு தென்னா பிரிக்கத் தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்தது. 10.05. 1994இல்  நெல்சன் மண்டேலா அவர்கள் முதன் முதலில் சனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாபிரிக்க அரசத் தலைவராகப் பொறுப்பேற்று, சிறுபான்மையினரான வெள்ளை நிறத்தவர்களையும் இனஒதுக்கல் செய்யாது நாட்டின் சமத்துவமான சகோதரத்துவ சுதந்திரக் குடிகளாக வாழ்வதற்கான முறையில் நல்லாட்சியைத் தொடங்கினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் முதலாவது பேருரை

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் தென்னாபிரிக்காவின் அரச தலைவராக தனது முதலாவது பேருரையை நெல்சன் மண்டேலா நிகழ்த்தினார். 14.06.1999 இல் தான் ஒருமுறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டு பதவி பெற மாட்டேன் என மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப நெல்சன் மண்டேலா மீண்டும் தேர்தலில் போட்டியிடாது தவிர்த்துக் கொண்டார். இவ்வாறு தன்னலமற்ற அரசியல் தலைவனாக விளங்கிய நெல்சன் மண்டேலா தனது 95ஆவது அகவையில் தென்னாபிரிக்கத் தலைநகரான ஜோகன்ஸ் பெர்க்கில் 05.12.2013இல் காலமாகினார்.

“ஒருவர் சிறையுள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வரை அந்த தேசத்தின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஒரு தேசத்தை அது உயர்ந்தவர்களை எவ்வாறு நடாத்துகிறது என்பதைக் கொண்டல்ல அது அத்தேசத்தின் மிக நலிந்தவர்களை எவ்வாறு நடாத்துகிறது என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பது நெல்சன் மண்டேலா உலகிற்கு விடுத்த வேண்டுகோள். இதன் அடிப்படையிலேயே இன்று உலகில் சிறைச் சாலையில் உள்ளவர்களையும் அதே சமூகத்தின் ஒருபகுதியாக ஏற்று நடாத்தும் அனைத்துலகச் சட்டங்கள் நெல்சன் மண்டேலாவின் சட்டங்கள் என்ற பெயரிலேயே ஐக்கிய நாடுகள் சபையினால் இயற்றப்பட்டு நெறிப் படுத்தப்பட்டு வருகின்றன.

“வறுமையை வெல்லுதல், தருமம் செய்தல் என்னும் செயல் அல்ல நீதிக்கான போராட்டம்”

“கண்மூடித் தனமான பின்பற்றல் வழி கிடைக்கும் மலிந்த புகழ் புரட்சியை ஒரு வகையிலும் ஏற்படுத்த மாட்டாது” என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளைப் போற்றி ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நெல்சன் மண்டேலா விருதினை வழங்கி வருகிறது. “வறுமையை வெல்லுதல், தருமம் செய்தல் என்னும் செயல் அல்ல நீதிக்கான போராட்டம்” என்பது மண்டேலாவின் மணிவாக்கு.

தனது அகவையின் 67 ஆண்டுகளை நெல்சன் மண்டேலா அவர்கள் மனித உரிமைச் சட்டத்தரணியாகவும், மனச் சாட்சிக்கான கைதியாகவும், அனைத்துலக அமைதியினை உருவாக்குவதற்காகவும், தென்னா பிரிக்காவின் அரச தலைவராகவும் கழித்துள்ளார். மனிதாயத்துக்கு நெல்சன் மண்டேலா ஆற்றிய இப்பணிகளைச் சிறப்பித்து அனைத்துலக நெல்சன் மண்டேலா நாளில் 67 நிமிடத் துளிகளுக்குப் பொது வேலைகளில் ஈடுபடுமாறு ஐக்கிய நாடுகள் சபை உலக மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

 

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version