அனைத்துலகக் கல்வி நாள் மற்றும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல்: அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

தளைநீக்கக் கல்வி, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கல்வி ஈழத்தமிழர் மீளவும் இனப்படுகொலையடையாது தடுக்கும் அனைத்துலகக் கல்வி நாள் 24.01.2023 இலும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல் நாள் 27.01.23இலும் கொண்டாடப்பட்டது தொடர்பான சிந்தனைகள்.

‘மக்கள் மேலான முதலீடுகள் மூலம் கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்’ என்கின்ற 2023ம் ஆண்டுக்கான மையக்கருவுடன் அனைத்துலகக் கல்விநாளை ஐக்கியநாடுகள் சபை 24.01. 23இல் உலகெங்கும் முன்னெடுத்தது.

‘சமத்துவமான சமுகங்கள் உருவாகவும் இயங்கியல்தன்மையுள்ள பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், உலகில் பயின்று கொண்டிருக்கிற ஒவ்வொருவரதும் எல்லையற்ற கனவுகளை அவர்கள் நனவாக்கத்தக்க முறையிலும் கூடிய முறையில் கல்விமுறைமைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குற்றர்சு அவர்களும் அனைத்துலக கல்வி நாளில் எடுத்துரைத்துள்ளார் அத்துடன் ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விக்கு இவ்வாண்டு கல்விநாள் அர்ப்பணிக்கவும் பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு தனது கல்வியின் எதிர்காலம் குறித்த அறிக்கையில் ‘எங்களின் எதிர்காலத்தை ஒருங்கிணைந்து மீள்உருவாக்குவோம் என அழைப்பும் விடுத்துள்ளது. இவைகள் சமகால உலகில் கல்வி மிகப்பெரும் வர்த்தகப் பொருளாக நுகரப்படும் உண்மையையும் எனவே கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதாயின் மக்கள் மேலான நிதி முதலீடுகள் அதிகரிக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும், சமகால கல்விமுறைமை எவ்வாறு அமையப்பட வேண்டும் என்னும் வரைபடத்தையும், ஒடுக்கப்பட்ட பெண்களின் கல்வி உரிமை குறிப்பாக ஆப்கானிஸ்தானிய பெண்களின் கல்வி உரிமை மீள்கட்டமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், உலகில் மனிதர்களாகிய எங்களின் எதிர்காலம் என்பது மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்கப்படல் வேண்டும் என்ற உண்மையையும் உலகில் உள்ள ஒவ்வொருவரினது நெஞ்சிலும் நெஞ்சுறுத்தி உள்ளன.

இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் 1948 முதல் இன்று 2023 வரை 75 ஆண்டுகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் அவர்களுடைய வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமை படைபல ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலையில் தங்களின் நாளாந்த வாழ்வில் உயிர் வாழ்தலுக்கும் சொத்துக்களைப் பேணுவதற்கும் வாழ்வாதாரங்களுக்குமான இனங்காணக்கூடிய அச்சத்துடன் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சியில் அல்லலுற்று வருகின்றனர்.

இந்நேரத்தில் 1944இல் ஐக்கிய தேசியக்கட்சியின் களனி மாநாட்டில் சிங்களமே அரசகருமமொழி என்கிற தீர்மானம் அதன் தலைவர்களில் ஒருவரான ஜே. ஆர். ஜயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்டது முதல் ஈழத்தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்வி அமைச்சர் ஐ.எம். ஆர் ஏ ஈரியக்கொல்லையால் ஈழத்தமிழர்களின் உயர்கல்விக்கு எதிரான பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்லூரிகள் அனுமதிக்கான தரப்படுத்தல் முறையும் முன்னெடுக்கப்பட்டதன் காரணத்தால் ஈழத்தமிழரின் அடிப்படைய மனித உரிமையான கல்வியின் சமத்துவம் சமவாய்ப்பு என்பன இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது. 2015இல் ஐக்கியநாடுகள் சபை 2030க்குள் நீடித்து நிற்கும் வளர்ச்சி முன்னெடுக்கப்படுவதற்கு கல்வி திறவுகோல் என அறிவித்த நிலையிலும் 2009ம் ஆண்டு முள்ளியவாய்க்கால் இனஅழிப்பால் தமிழர் தாயகங்களின் மேல் மீளவும் படைபல ஆக்கிரமிப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பண்பைத் தனது அரசாங்கத்திற்குப் பெற்றவரும் சிறிலங்கா ஈழத்தமிழர்களின் கல்விக்கான எந்த மாற்று நீடித்த வளர்ச்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் இருப்பும் அவர்களது இறைமையும் பாதுகாக்கப்படுவதற்கு தளைநீக்கக் கல்வி ஈழத்தமிழர் கல்வி முறைமையாக முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கம் இதனைச் செய்யாது என்பது உலகறிந்த உண்மை. எனவே ஈழத்தமிழர்கள் உலகப்பொதுக்கல்வி முறைமையுள் தங்களுக்கான தளைநீக்கக்கல்வியைப் பெறுவதற்கு உள்ள தடைகளை ஐக்கியநாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமே முன்னெடுக்க வேண்டிய பொறுப்புள்ளதாக உள்ளது என்பதை அனைத்துலக கல்விநாளில் உலகெங்கும் உலகவினமாக உள்ள ஈழத்தமிழர்கள் ஐக்கியநாடுகள் சபைக்கும் அதன் உறுப்புரிமை நாடுகளுக்கும் வலியுறுத்த வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களுக்கான சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐக்கியநாடுகள் சபை நியமிப்பது காலத்தின் தேவையாக உள்ளது என்பதையும் உலகத்தமிழர்கள் ஒருகுரலில் தாங்கள் வாழும் நாடுகளின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தலைமைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இதற்கு இறைமைப்பாதிப்புக்குள்ளாகி சனநாயகப் பங்களிப்பு மறுக்கப்பட்டு வாழும் ஈழத்தமிழர்கள் அதீத மனிதாய தேவைகளில் உள்ள மக்கள் என்பதை ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல்வாதிகள் உண்மையானதும் நேர்மையானதுமான முறையில் எடுத்துரைக்க வேண்டும்.

அவ்வாறே படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல் நாளை யூத மக்களுக்கு 1933 முதல் நடந்த கிட்லரின் இனஅழிப்பின் பின்னணியிலான படுகொலைகளை உலகம் மீள்நினைவேந்தல் செய்யும் சனவரி 27ம் நாளில் யூதமக்களுக்கு ஏற்பட்ட அந்தப் பெருந்துயரில் ஈழமக்களும் பங்கேற்பதுடன் மே 18 2009 இல் 21ம் நூற்றாண்டின் மிகமோசமான இனஅழிப்பை சிறிலங்கா செய்துள்ள வரலாற்று உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லி ஈழத்தமிழர்களின் ‘தாயகம்’ ஈழத்தமிழர்களின் ‘ சொத்துக்கள்’ என்பன இன்றும் சிறிலங்காவால் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் ஈழத்தமிழ் மக்கள் எந்நேரத்திலும் மீளவும் மற்றொரு படுகொலைக்கு உள்ளாகக் கூடிய பேராபாயத்தில் உள்ளனர் என்ற களநிலை எதார்த்தத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ளவர்களாக உலகத்தமிழர்கள் உள்ளனர்.

அத்துடன் சிறிலங்காவின் கிராமசபைகளுக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தலில் போட்டியிடுவதை ஈழத்தமிழ் மக்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலைக்கான பாதுகாப்பு முயற்சியாக ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் அறியாமையை ஏற்படுத்தும் ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தளைநீக்கக் கல்வியை கொடுக்க வேண்டியதுடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரலாற்றுக் கல்வியும் அளிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

ஈழத்தமிழர்களுடைய கல்வி முறை காலனித்துவ காலத்தில் ஆள்பவர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் தமிழர்களின் இறைமையைச் சிங்களர்களின் இறைமையுடன் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி மூலம் 75 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியதன் வழி பாரப்படுத்திய நாள் முதல் இன்றுவரை சிங்களப் பெரும்பான்மை கல்வி முறைமைக்குள் உள்ளடங்கிய ஒன்றாகவே தொடர்கிறது.

அத்துடன் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் ஈழத்தமிழின அழிப்பு, ஈழத்தமிழினத் துடைப்பு, ஈழப்பண்பாட்டு இனஅழிப்பு என்னும் மூவகைப்பட்ட இனஅழிப்பு முறைகளைத் தங்களின் அரசாங்கங்களின் அரசக் கொள்கையாகவும் அரசக்கோட்பாடாகவும் கடந்த 75 ஆண்டுகளாகச் செயற்படுத்துகின்ற அரசியல் எதார்த்த நிலையில் ஈழத்தமிழர்களின் கல்வியும், மலையகத் தமிழ் மக்களின் கல்வியும் முற்று முழுதான இனப்பாகுபாட்டுக் கல்வியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழர்களை சிங்கள இனத்தின் பகைமையாகவே கருத்தியல் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுவே சிங்கள மக்கள் திரள் இனவெறி மதவெறி அரசியல் தலைமைகளையே தங்களின் அரசியல் தலைவர்களாக 1921 முதலும் அரசாங்கத் தலைவர்களாக 1931முதலும் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து வருகின்றனர்.

இதனால் 1833 முதல் 1948 வரை 115 ஆண்டுகள் காலனித்துவப் பிரித்தானிய அரசாங்கம் செயற்கையாக நிலைப்படுத்த முயன்ற இலங்கையர் தேசியம் என்பது நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்றாகவே மாறியது இலங்கையின் வரலாறு.

இதனால் ஈழத்தமிழர்களின் தாயகத்திற்கான தேசியத்திற்கான தன்னாட்சிக்கான தளைநீக்கக் கல்வி என்பது ஆறுமுகநாவலரால் பண்பாட்டு மீட்டுணர்வு என்கிற தூண்டல் வழியாகத் தனித்துவமான ஒன்றாக முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் இது ஆகமப்பட்ட சாதிய சைவம் சார்ந்த பண்பாடே யாழ்ப்பாண அரசின் பண்பாடு என்ற தவறான புரிந்துணர்வுடன் சாதி மத பிரதேச வேறுபாடுகளை உள்ளடக்கிய ரீராக்கலாகவே வரலாறு பெற்றது. அத்துடன் தமிழ்மொழியின் தூய்மையை இலக்கணத்தின் மூலமும் நிலத்தோடும் நீரோடும் உடல் உழைப்போடும் கட்டுண்ட மக்களின் வாழ்வியலையும் கலை பண்பாட்டு வளர்ச்சிகளையும் புறக்கணித்து சைவவேளாள மேலாண்மையினை ஈழத்தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக மேலாண்மையாகக் கட்டமைக்கும் சீராக்கலையே கல்வியின் வழியாகச் செய்தது. அத்துடன் மேல்தட்டு வர்க்கத்தினை முன்னிலைப்படுத்தும் இந்தக் கல்வி முறையில் ஐரோப்பியவாக்கமும் ஆங்கில மொழியும் ஆகமப்பட்ட சாதிய சைவசமயத்தைப் பாதிக்காத வகையில் வரவேற்புப் பெற்றது. இதனால் 1833 முதல் 1931 வரை ஏறத்தாழ நூறாண்டுகள் சைவத்தின் தூண்களாக வெளிப்பட்ட இராமநாதன் குடும்ப அரசியலாக ஈழத்தமிழர் அரசியல் வரலாறு பெறவும் செய்தது. சேர் பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைத் தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையுண்டென முன்னெடுத்த முயற்சிகளுடன் சிங்கள இடதுசாரிக்கட்சிகளும் இலங்கைத் தமிழரின் தன்னாட்சி உரிமையை ஏற்று இருதேச இனங்களின் தனித்துவங்களும் இணைவுகளும் உள்ள சுதந்திரத்தைப் பெற எடுத்த கல்வி முறைகளும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இலங்கையின் இருதேச இனங்களான தமிழ் சிங்கள ஒருமைப்பாட்டு அரசியலை காலனித்துவ ஆங்கில ஆட்சிக்கு எதிரான இலங்கை மக்கள் சக்தியாக முன்னிறுத்திட சிங்கள தமிழ் மொழிகளை இருதேச இனத்தவர்களும் கற்று இருமொழி ஒரு நாடு என்ற அடிப்படையில் சுதந்திர அரசாங்கத்தை உருவாக்க எடுத்த முயற்சிகளும், காலனித்துவ விலகலின் பின்னர் 1960களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்காத இலக்கிய அடையாளமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தை அடையாளப்படுத்திப் பன்மொழிப் பல்லின பல பண்பாட்டு மக்களைக் கொண்ட நாட்டில் இடதுசாரி அரசியல் மூலம் சிங்களத் தமிழ் பாட்டாளியின ஆட்சியை இனமொழிமதபிரதேச சார்புகளற்ற அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்க முயன்ற கல்வி முறைமைகளும், சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்டு சிங்களவர் பௌத்தவர் சிங்களநாடு என்ற ஒருநாடு ஒருசட்ட ஆட்சியாக வெளிப்படுத்தப்பட்டமையால், இருமொழி ஒரு நாடு என இருந்த காலனித்துவ கால இலங்கை சுதந்திரத்தின் பின் ஒரு மொழி இருநாடுகள் என்ற தனது வரலாற்று இயல்புநிலைக்கு 22.05.1972 முதல் மீண்டமை வரலாறு. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலான அவர்களின் தேசமீள்உருவாக்கம் 1972 முதல் 1978 வரை ஈழத்தமிழகம் என்னும் கருத்தியல் உருவாக்கமாகவும், 1978 முதல் 2009 வரை தமிழீழம் என்னும் நடைமுறை அரசாகவும் வரலாறாகியது.

இந்த ஈழத்தமிழர்களின் மக்கள் இறைமையில் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப தனக்கான உலக ஏற்புடைமையை நோக்கி சீருடை அணிந்த முப்படைகளுடனும் நிர்வாக சட்டவாக்க சட்ட அமுலாக்கக் கட்டமைப்புகளுடனும் முன்னேறிக் கொண்டிருந்த ஈழமக்களின் நடைமுறை அரசைத்தான் பிரிவினை பயங்கரவாதம் என சிங்கள சிறிலங்காவின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் நிறுவும் செயலென்ற உண்மைக்கு மாறான நியாயப்படுத்தல் உடன் சிறிலங்கா தனக்கு ஆதரவான உலக வல்லாண்மைகள் பிராந்திய வல்லாண்மைகளின் துணையுடன் இனஅழிப்புக்குள்ளாக்கி மீளவும் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவை ஆயுதமுனையில் பெறும் தனது ஆக்கிரமிப்பை இன்று வரை தொடர்கிறது. இந்த வரலாற்றுக் கல்வி சிறிலங்காவின் ஈழத்தமிழினப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களையும் அனைத்துலக படுகொலைகளால் பாதிப்புற்றவர்களில் நாளில் நினைவேந்தல் செய்வதற்கு அவசியமாகிறது.

இவ்வாறு மனிதஉரிமைகளையும் மக்கள் உரிமைகளையும் ஈழத்தமிழர்களும் அனுபவிப்பதற்கு அவர்களுக்கு தளைநீக்கக்கல்வி என்பது கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் அவர்களது வரலாற்று உண்மைகளின் வரலாற்றுக் கல்வியுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டாலே ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சித் தன்மைகளை ஈழத்தமிழின இளையவர்கள் அறிந்து தெளிவு பெறவும் உலகம் உணர்ந்து ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிபப்டையில் அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்ளும் மக்கள் உரிமையை அவர்கள் அனுபவிக்க உதவ முடியும்.

படுகொலைகளால் பாதிப்புற்ற ஈழத்தமிழ் மக்களுக்கான பரிகார நீதியும், படுகொலைகளைச் செய்தவர்களுக்கான தண்டனை நீதியும் நடைமுறைச் சாத்தியமாகும். உலகத் தமிழினம் இந்த தளைநீக்கக் கல்வி, வரலாற்றுக்கல்வி என்பனவற்றை ஈழத்தமிழர்கள் பெற ஊடகங்கள் வழியாக உதவவேண்டுமென்ற வேண்டுகோளை பின்னர் இவை நடக்கும் என்று தீர்க்கதரிசனமாகவே சிந்தித்த கேர்ணல் கிட்டு அவர்கள் இலண்டனில் தங்கியிருந்த 90களிலேயே விடுத்தார்.

இந்த அடிப்படையிலேயே தமிழ்மொழிக்கான கல்வி அமைப்புக்களும் ஈழத்தமிழர் ஊடகங்களும் இங்கிலாந்திலும் உலகிலும் தோன்றின. ஆயினும் அவையும் வர்த்தகப் போக்குடையனவாகத் தமிழினப் பகைமைகளால் 2009ன் பின்னர் மாற்றப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக வானொலி நாளை பெப்ருவரி 13 இல் எதிர்கொள்ளும் உலகத் தமிழர்கள் உயிரோடைத் தமிழ் போன்ற தொடர்ந்தும் தமிழ்த்தேசியத்துடன் வர்த்தக நோக்கற்ற முறையில் பணி செய்யும் ஊடகங்களை இணைத்து ஈழத்தமிழர்களுக்கான பலம்பொருந்திய ஊடகத்துறையை மீளவும் கட்டியெழுப்பினாலே தளைநீக்கக் கல்வியும் வரலாற்றுக் கல்வியும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் நாளாந்த வாழ்வில் நடைமுறைச்சாத்தியமாகும்.

– சூ.யோ. பற்றிமாகரன் –
சனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் ஆசிரியர்