ஜனநாயகத்தை மறந்து போகும் நிலையிலே, இராணுவ ஆட்சியை விதைத்து கொண்டிருக்கின்றார்கள்- ரவிகரன்

ஜனநாயகத்தை மறந்து போகும் நிலை

‘ஜனநாயகத்தை மறந்து போகும் நிலையிலே இராணுவ ஆட்சியை படிப்படியாக விதைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை’ என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக நாளான இன்று,இது தொடர்பாக இலக்கு  செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

“இன்றையதினம் சர்வதேச ஜனநாயக தினமாக குறிப்பிடப்படுகின்றது. எங்களுடைய இலங்கையை எடுத்துக் கொண்டால், அதிலும் தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால், இங்கே ஜனநாயகம் என்பது கேள்விக்குறியே.

ஜனநாயக ரீதியிலான ஆட்சியில், நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. ஜனநாயக நாடென்று கூறிக்கொண்டு, இராணுவத்தினுடைய ஆட்சிதான், படிப்படியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டில், எங்களுடைய மக்கள், சுபிட்சமாக வாழ வேண்டும் என்ற ஒரு நோக்கம்தான், எங்கள் அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் உதாரணத்துக்கு ஒரு விடயத்தை சுட்டி காட்டுகின்றேன்.

இந்த வருடம் தை மாதம் இருபத்தியோராம் திகதியளவில் இராணுவ மயமாக மாறும் இலங்கை என்ற தலைப்பில் ஜஸ்மின் சூக்காவின் அமைப்பு கருத்து வெளியிட்டிருந்தது. முப்பத்தியொன்பது இராணுவ அதிகாரிகள், ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள், சிவில் சேவை தொழில் பதவிகளை பெற்று வருவதாக அது சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக, ஒரு முக்கியமான பொறுப்பான விடயங்கள் அனைத்தையும், அதாவது கொரோனாவுக்கான நடவடிக்கை, காவல்துறை, புலனாய்வுத்துறை, சிறைகள், வெளிநாட்டு கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படை தேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி உட்பட பல துறைகளிலும் இராணுவத்தினுடைய ஆட்சியை இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தமட்டிலே, மகாவலி எல் வலயம் என்று சொன்னால், தமிழர்களுடைய காணிகளை பறித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற ஒரு நடவடிக்கை அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு திணைக்களம் என்று எண்ணக்கூடிய அளவிலே, எங்களுடைய மக்கள் இருக்கின்றார்கள். அப்படியாக நடக்கின்றது எங்களுடைய பகுதியிலே.

அப்படியாக இருக்கையில் ஜனநாயகம் என்பது, இங்கு கேள்விக்குறியாகவும், ஜனநாயக ரீதியாக, ஒரு மலர்கின்ற, அதாவது, சந்தோஷமாக இருக்கின்ற நிலையில் நாங்கள் இல்லை. எங்களுடைய தமிழர்களுடைய நிலங்கள் பறி போகின்றன, தமிழர்களுடைய நீரேரிகள், ஆறுகள் பறிபோகின்றன.

தமிழர்களுடைய குளங்களை ஆக்கிரமிப்பு செய்து முன்னைய அரசர்கள் குளங்களை கட்டிவித்தார்கள் ஆனால் இப்போது இலங்கை அரசாங்கத்தினுடைய படைகட்டுமான பணிக்காக அந்த குளங்களை ஆக்கிரமிப்பு செய்து குளங்களை மூடி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பல குளங்களை மூடி இராணுவ கட்டமைப்போ அல்லது விமானப்படை கட்டமைப்போ, உருவாக்கப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன.

இப்படியாக கடல் ஆக்கிரமிப்பு, கடலில் எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலைமையில், அத்துமீறிய நடவடிக்கைகள் பெரும்பான்மை இன மக்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதை படைத்தரப்பு ஆதரவாக பார்த்துக் கொண்டு, ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இப்படியான நிலைமைதான், எங்களுடைய மக்களுக்கு இங்கே காணப்படுகின்றது. இந்த வகையிலே தமிழர்களுடைய மத அடையாளங்கள் கூட ஆக்கிரமிக்கப்படுகின்றது. இன்றைய இலங்கையை பொறுத்தமட்டிலே, அடக்குமுறை ஆட்சி, அதிகார திணிப்பு, பாரபட்ச அனுமதிகள், அத்துமீறிய நடவடிக்கைகள், பௌத்த மத திணிப்பு இப்படியாக ஆக்கிரமிப்பின் உச்சம் என தமிழினத்தின் மீதும், தமிழர்களுடைய நிலங்களின் மீதும், தமிழர்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், பாய்கின்ற கொடுமைகள், ஏராளம்.

இந்த ஜனநாயகம் என்பதையே, எங்களுடைய மக்கள் மறந்து போகும் நிலைமைக்கு இந்த அரசு கொண்டு வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, இராணுவ ஆட்சியை படிப்படியாக இந்த ஜனநாயகத்தை மறந்து போகும் நிலையிலே இராணுவ ஆட்சியை படிப்படியாக விதைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை” என்றார்

ilakku-Weekly-Epaper-146-September-05-2021