Tamil News
Home செய்திகள் தீவிரமடையும் போராட்டம் – கொழும்பில் வீதிகள் பல முடக்கப்பட்டன

தீவிரமடையும் போராட்டம் – கொழும்பில் வீதிகள் பல முடக்கப்பட்டன

கோட்டா அரசுக்கு எதிராக இன்று (24)  கொழும்பில் பரவலாக எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பில் வீதிகள் பல முடக்கப்பட்டன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல பாகங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கொழும்பு நகரின் முக்கிய வீதிகள் பல முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு யோர்க் வீதி, லோட்டஸ் வீதி, வங்கி வீதி மற்றும் கோட்டை உள்ளிட்ட வீதிகளில் நிரந்தர வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் கொழும்பு நகரின் பல இடங்களில் தற்போது பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பித்துள்ளது. எனினும் காலி முகத்திடலுக்கு செல்லும் சில உப வீதிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் அதிகளவிலான காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்தநிலையில் காலி முகத்திடலுக்கு செல்லும் உப வீதிகள் மூடப்பட்டுள்ளமையினால் போராட்டத்துக்கு செல்பவர்களும் சாரதிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் மருதானை – தொழிநுட்ப சந்தியிலும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version