அவுஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் ரோஹிங்கியா அகதிகள் சிக்கலை விவாதித்த இந்தோனேசியா

அமெரிக்காவில் மெக்சிக்கோ, இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே சந்திப்பு நடந்திருக்கிறது. இச்சந்திப்பில் ரோஹிங்கியா அகதிகளின் நிலைமை குறித்து இந்தோனேசியா சுட்டிக்காட்டியிருக்கிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வு நடந்து வரும் சூழலில், மெக்சிக்கோ, இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட MIKTA எனும் அமைப்பின் கூட்டம் நிகழ்ந்திருக்கிறது.

இக்கூட்டத்தில் பேசிய இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ மர்சூடி, வங்கதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் 11 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இவர்கள் மனித கடத்தல் மற்றும் தீவிரவாதத்தில் சிக்கும் நிலை உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

“மியான்மரில் தற்போதுள்ள சூழ்நிலையால் ரோஹிங்கியா அகதிகளின் பிரச்சனையை தீர்ப்பது கடினமாக உள்ளது,” என இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: மியான்மரில் வன்முறையை உடனடியாக நிறுத்துதல், மியான்மரில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துதல், மியான்மருக்கு என சிறப்புத் தூதரை நியமித்தல், தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மனிதாபிமான உதவிகளை மியான்மருக்கு விநியோகித்தல், அனைத்து தரப்பினரையும் சந்திக்க கூட்டமைப்பின் சிறப்பு தூதர் மியான்மருக்கு பயணித்தல் ஆகியவை ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.