ராஜபக்சக்களுக்கே வரமாய் அமையும் இந்தியாவின் உதவிகள் | இரா.ம.அனுதரன்

இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே

இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே

கால் நூற்றாண்டு கடந்தும் தமது குடும்ப இராச்சியமே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்திருக்கும் என்ற இறுமாப்போடு 2019 இல் மீண்டும் ஆட்சிபீடமேறிய ராஜபக்சக்களின் நிலை மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே மூச்சுமுட்டி திணறுமளவுக்கு நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது.

இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கேசுதந்திர இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையும் அதனோடிணைந்த பிராந்திய – அனைத்துலக ரீதியான நெருக்குவாரங்களுமே இந்நிலைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இலங்கைத் தீவு மெல்ல மெல்ல பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பொருளாதார நெருக்கடிநிலை காரணமாக மருத்துவத்துறை உள்ளிட்ட சகல கட்டமைப்புகளும் செயலிழந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு மற்றும் விலையேற்றம் என்பன மேற்சொன்ன நிலையினை பன்மடங்காக்கி வருகிறது. எரிபொருள் நெருக்கடியானது மெல்ல மெல்ல இலங்கைத் தீவை இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நிலையானது, மிக மோசமான அனுபவத்தை இலங்கையர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மின்தடை, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் பாதிப்பிற்குள்ளாக்குகின்ற போதிலும் அவர்கள் தவிர்ந்த ஏனைய இலங்கையர் களுக்கே மீளமுடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு மற்றும் அரச படைகளால் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த இன அழிப்புப் போரின் பின்னணியில் பல நெருப்பாறுகளைக் கடந்துவந்த தமிழர்களுக்கு இந்நிலை புதியனவும் அல்ல, சவாலானவையும் அல்ல.

அப்போது தமிழ் மக்களுக்கு காப்பரணாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளது நிர்வாகத்திறனும், மக்கள் நலன்சார் செயற்பாடுகளுமே தமிழ் மக்களுக்கு அவ்வாறானதொரு தற்காப்பு நிலையை ஏற்படுத்தியிருந்தது என்பதனை எக்காலத்திலும் எவராலும் மறுத்துவிடவே முடியாத பேருண்மையாகும். இருந்த போதிலும், போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 13ஆவது ஆண்டில் இலங்கையர்களாக தமிழ் மக்களும் பொருளாதார சுனாமிக்குள் நெருக்குவாரங்களைச் சந்திக்கும் நிலையேற்பட்டுள்ளமை ‘இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ என்பதனை வெய்யில் கால நிழலின் அருமையாக வலுவாக உணர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

pjimage 2022 04 04T202638.020 ராஜபக்சக்களுக்கே வரமாய் அமையும் இந்தியாவின் உதவிகள் | இரா.ம.அனுதரன்தமிழர்களுக்கு எதிரான போரின் கதாநாயகன் என்ற பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவை தமது ஏக தலைமையாக ஆட்சிபீடமேற்றி அழகுபார்த்த சிங்கள-பௌத்த தரப்பினரே இன்று ‘Go Home Gota 2022’ ‘Go Home Rajapaksas’ என ஒரு சேர முழக்கமிடுமளவிற்கு ராஜபக்சக்களின் அத்திவாரத்தையே அசைத்துள்ளது இலங்கைத் தீவு சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடிநிலை.

ஜனாதிபதி பதவிநிலை வழியே கிட்டிய சர்வ அதிகாரத்தின் மூலம் நாட்டின் ஆட்சி – அதிகாரத்தை தலைமையேற்று வழிநடத்திவரும் கோட்டாபய ராஜபக்சவிற்கு அந்த வரமே இன்று சாபமாக மாறியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி வலுப்படுத்துவதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காததுடன், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது, தமிழர்களுக்கு எதிரான பெறுபேறுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை நடத்திவிடலாம் எனும் பேரினவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் இவர்களும் தொடர்ந்து  செயற்பட்டு வருகின்றமையே இன்றைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணமாகும்.

மேற்சொன்ன காரணிகள் தொடர்பில் மிகவும் தெளிவாக உணர்ந்திருப்பினும், பௌத்த-சிங்கள பேரினவாத ஆதரவுத் தளத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக வரலாற்று படிப்பினைகளை உதாசீனப்படுத்திவிட்டு மனம்போன போக்கில் நடந்தமையின் மோசமான விளைவுகள் இன்று ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இந்நிலையில் தான் இந்திய அரசு இலங்கையை நோக்கி அதிக ஈடுபாட்டுடன் நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி நிலையின் தீவிரம் இப்போது உணரப்பட்டதாயினும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இந்தியாவின் தலையீடு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து வருகிறது. இந்திய எதிர்ப்புவாத தென்னிலங்கைத் தரப்பின் எதிர்ப்பினை மனதிற்கொண்டு கோட்டாபய அரசு இந்தியா விடயத்தில் இரண்டும் கெட்டான் நிலையிலேயே இருந்து வந்தது.

தனது பிராந்திய பாதுகாப்பிற்கு சவால்விடும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை இலங்கை அரசு மேற்கொண்ட தருணமே இலங்கை மீதான அழுத்தங்களை இந்தியா அதிகப்படுத்தியது. இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசை இணங்க வைக்கும் வகையில் நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டுவரும் பின்னணியில் தான் தற்போது கடன் உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு வருகின்றன.

 இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே‘அயலவர்களுக்கே முன்னுரிமை’ எனும் கொள்கை அடிப்படையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்ததாகவும், தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்படுவோம் எனவும் இந்தியத் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கைக்கான பயணமும் இந்நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் உதவி மூலமாக இலங்கை மக்கள் சந்தித்துள்ள பொருளாதார நெருக்குவாரங்கள் எவையும் சிறிதளவில் தன்னும் குறையவில்லை என்பதே உண்மையாகும்.

எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஒருபக்கம் நீடித்துவரும் நிலையில், அவற்றின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை மேற்சொன்ன நிலையின் சாட்சியாகும். கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் மக்களின் வாழ்க்கைச் சுமை மென்மேலும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர துளியளவேனும் குறைந்தபாடில்லை.

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மக்களை முன்னிறுத்தியதாக இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடனுதவி மூலம் ராஜபக்சக்களே ஓரளவு நன்மையடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் என்பன கணிசமான அளவு இந்திய நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலையானது அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விடயமாகவே அமைந்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவு விநியோகத்தை மேற்கொண்டு வருவதன் மூலம் தட்டுப்பாட்டு நிலையை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவும், வெகுவிரைவில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்ற வாக்குறுதியைத்தன்னும் இதன்மூலம் ராஜபக்சக்களால் வழங்க முடிந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் வழங்கப்பட்ட கடனுதவி மூலமாக இந்தியத் தரப்பும் தமது பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பில் நன்மைகளை அடைந்துள்ளமையும், அதற்கான உறுதிப்படுத்தல்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

சீனவுக்கு வழங்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்திற்கு 75 வீத நிதி உதவியை வழங்க முன்வந்ததன் மூலம் அத்தீவுகளை மையப்படுத்திய செயற்பாடு இந்தியாவின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை தவிர வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இந்தியத் தரப்பிற்கு வழங்க ராஜபக்சக்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான், ஆட்சிபீடம் ஏற்றி அழகுபார்த்த சிங்கள-பௌத்த தரப்பினரே ராஜபக்சக்களை வீட்டுக்கு விரட்டியடிக்கும் மனநிலைக்கு வந்துள்ள நிலையில் ராஜபக்சக்களின் ஆட்சி-அதிகாரத்தை காப்பாற்றுவதன் மூலம் தமது பிராந்திய பாதுகாப்கை உறுதிசெய்து கொள்ளும் எத்தனத்தில் இந்திய ஆட்சியாளர்கள் முனைப்புக்காட்டி வருவதனை அவதானிக்க முடிகிறது.

முற்றுமுழுதான சீன சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தது மட்டுமல்லாது, சீனாவின் ஆதரவு மட்டும் இருந்தாலே போதும் என்ற மனநிலையில் செயற்பட்ட மகிந்த ராஜபக்ச அரசை 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் வீட்டிற்கனுப்பியதில் இந்தியாவின் பங்கே பிரதானமாக இருந்தமை இந்தியத் தரப்பினாலேயே பின்நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பெயருக்குத்தான் ஆட்சி மாறியதே தவிர, காட்சிகள் எவையும் மாற்றமின்றி முன்னிலும் வேகமாக அரங்கேறியது.

ஆம், எதற்காகாக மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சி-அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதோ அதே விடயங்கள் யாவும் ரணில்-மைத்திரி கூட்டரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்டன. அம்பாந்தோட்டைத்  துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் உள்ளிட்ட சீன அரசின் பெருந்திட்டங்கள் இந்த கூட்டரசாங்கத்தின் காலத்தில்தான் இறுதிக் கட்டத்தை அடைந்தன.

ஆட்சி மாற்ற படலத்தின் மூலம் ஒருதடவை சூடு கண்ட அனுபவ பாடத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றம் என்ற நிலைப்பாட்டை தவிர்த்து இருக்கும் தரப்பின் நெருக்கடி நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமது நலன்களை உறுதிசெய்வது எனும் முடிவுக்கு இந்தியத் தரப்பு வந்துள்ளதன் வெளிப்பாடாகவே ராஜபக்சக்களை தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து காப்பாற்றும் வகையில் கடனுதவிகளை வழங்கி வருகின்றமை அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்களது நலன்களை முன்னிறுத்தியதாக முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள், இந்திய – இலங்கை தரப்பு நலன்கள் உறுதி செய்யப்படும் ஏதுநிலையை உருவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்களது நலன்களை பலியிட்டே இவ்வாறான நிலைமையென்பது இம்முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொடுப்பதாக சொல்லி வாக்கு அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தரப்புகளின் சுயலாப அரசியல் போக்கே இந்நிலைக்கு காரணமாகும். இலங்கை – இந்திய தரப்பினருடைய நலன்களை அடைவதற்கான காரணியாக இருதரப்பினாலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயமே முன்னிறுத்தப்பட்டு வருவது வழமையாகும். இந்நிலையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஈழத்தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி சமரசமின்றி பாடுபடுவதை தவிர்த்து எலும்புத் துண்டுகளை தூக்கிப்போடும் தரப்பினருக்கு விசுவாசமாக செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளின் தமிழ் மக்கள் விரோதப் போக்கே மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களது விவகாரம் கறிவேப்பிலையாக தூக்கியெறியப்படும் அவலம் தொடர்கதையாவதற்கு காரணமாகும்.

Tamil News