இலங்கை நெருக்கடி: நிவாரணப்பொருட்களுடன் கொழும்பை அடையும் இந்திய கப்பல்

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களுடன், கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்ட கப்பல் கொழும்பை வந்தடையவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக்கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள இந்திய  துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்களுக்கும் மேற்பட்ட 55 வகையான அத்தியாவசிய மருந்துகள், 2 வகையான சிறப்பு மருந்துகள் என்பன உள்ளடங்குகின்றன. இவற்றின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 40.55 கோடி ரூபாய் (16 மில்லியன் அமெரிக்க டொலர்) நிவாரணப்பொருட்கள்  இலங்கையில் இறங்கவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News