இலங்கை காவல்துறையினருக்கு இந்தி மொழி கற்றல் திட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய துாதரகம்

இலங்கை காவல்துறையினருக்கு இந்தி மொழி

இலங்கை காவல்துறையினருக்கு இந்தி மொழி: இலங்கை  காவல்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில்  உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் ‘இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார மற்றும் மொழி உறவுகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலானது. இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ‘இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என  காவல்துறை  ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால்,  காவல்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என்றும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamil News