இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு: எரிசக்தித் துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் இந்திய உயர்மட்டக் குழு நேற்று சந்தித்தது. அப்போது எரிசக்தித் துறையில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து முன்னெடுத்து வரும் பணிகளின் நிலவரம் குறித்து இந்திய குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தனர்.

இலங்கையில் இந்திய அரசின் பங்களிப்புடன் எரிசக்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு இலங்கை திருகோணமலையில் 100 மெகாவாட் சோலார் ஆலை அமைக்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விரு நாடுகளும் இணைந்து இலங்கையில் எரிபொருள் சேமிப்பு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இந்நிலையில், எரிசக்தித் துறையில் நடந்த முன்னேற்றங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்று ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்ததால் அந்நாடு திவால் நிலைக்கு உள்ளானது. அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவானது. பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு, மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலைவாசி வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது.

இந்தச் சூழலில் இந்தியா இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியது. இதுவரையில் 3.8 பில்லியன் டாலர் (ரூ.31,150கோடி) மதிப்பில் இந்தியா இலங்கைக்கு உதவிகள் வழங்கியுள்ளது.

நன்றி-  இந்து தமிழ் திசை