இலங்கைக்கு மேலதிக நிதியுதவியை இந்தியா வழங்காது

இந்த வருடத்தின் மீதமுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு மேலதிகமாக நிதியுதவியை வழங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று இந்திய அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாத தரப்புக்களை கோடிட்டு இந்த செய்தியை ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கத்துக்கு பின்னர், இலங்கையின் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமாகி வருகிறது.

எனவே இதுவரை வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என்று இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு, இந்தியா 4 பில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கியது. இதேவேளை இந்தியா, மேலதிகமாக நிதிகளை வழங்கப்போவதில்லை என்ற முடிவு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கை நடத்த திட்டமிட்டுள்ள நன்கொடையாளர் மாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது.