பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – இந்திய பிரதமர்  

இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பதவி காலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஊட்டமளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் நிலவும் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நீங்கள் பொறுப்புக்களை ஏற்றுள்ளீர்கள்.

உங்களின் இந்த பதவி காலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஊட்டமளிக்கும் என்று நம்புகின்றேன்.

இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும் , அண்டை நாடாகவும் ஜனநாயக வழிமுறைகளின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்கள், அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ளஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான இலங்கை மக்களின் முயற்சிக்கு இந்திய தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.

இரு நாட்டு மக்களதும் பரஸ்பர நலனுக்காகவும் , இரு நாடுகளுக்கிடையிலான பழமையானதும், நெருக்கமானதுமான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதவி காலம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.