இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்திஇந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இந்த விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? இந்த விஜயம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? என்பன குறித்து அரசியல் ஆய்வாளரும், யாழ். பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவருமான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் விரிவான செவ்வி ஒன்றை உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வுக்கு வழங்கியிருந்தார். அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

கேள்வி:
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கான முக்கியத்துவம் வாய்ந்ததான விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்தார். இன்றைய காலகட்டத்தில் இந்த விஜயத்தின் முக்கியத்துவம் என்ன?

பதில்:
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளரின் வருகை, மேற்கு நாடுகளாலும், இந்தியாவாலும் சீனா தொடர்பாகக் கொண்டிருக்கின்ற இயல்பான போக்குகளை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி, இந்தியா சார்பு நிலைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகவே இதனை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமகாலத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இழந்தாலும், மேற்கு முனையத்திற்கான ஒப்புதல் இந்தக் காலப்பகுதியில் கிடைத்ததோடு,  இரு நாடுகளுக்கும் இடையிலான,  பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அல்லது தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான உத்திகளோடு மேற்கொள்ளப்படும் இராணுவப் பயிற்சியின் தொடர்ச்சியும் இக்காலப் பகுதியில் நடந்துள்ளது.

இலங்கை மேற்கு நாடுகளால் பெரும்  நெருக்கடிக்குள்  உள்ளாக்கப்பட்ட ஒரு சூழலிலிருந்து இருந்து விடுபடுகின்ற ஒரு வாய்ப்பாக குறிப்பாக ஜெனிவா அரங்கு, ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய நகர்வுகளிலிருந்து, சீனா சார்ந்திருக்கக்கூடிய வகையிலான நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, நகருகின்ற ஒரு போக்கை இந்தியா இந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்கின்றது.

இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி2இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை தனது பாதுகாப்பிற்கும், தனது நட்பிற்கும், தனது நெருக்கமான தன்மைகளுக்குள்ளும் இருப்பதென்பதைக் கடந்து அது குவாட் நாடுகளின் ஒரு நெருக்கமான உறவு நிலைக்குள் இந்து சமுத்திரத்தின் முதன்மை நாடாக இருப்பதும், இந்தியாவின் புறச்சூழல் அதன் எல்லை ஓரங்களில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதும், அதற்குரிய ஒரு நெருக்கடியாகவே அது கருதியது. அதிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான ஒரு சூழலை இந்தச் சந்தர்பத்தில் அது ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கை மீட்டு, தனது நெருக்கமான உறவு நிலைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகத் தான் இந்த விஜயத்தை நான் பார்க்கிறேன்.

ஏனெனில், இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது வெளிப்படுத்திய செய்திகள் அதையே அழுத்துவதாக அமைகின்றன.

கேள்வி:
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது 13வது திருத்தம் தொடர்பாகவே இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மீண்டும் கூறியிருக்கின்றார். நீண்ட காலமாகவே இந்தியா இதனைத்தான் சொல்லி வருகின்றது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் இந்தியத் தரப்பு அதிக அளவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றதா?

பதில்:
ஆம். இந்தக் காலப்பகுதியில் நிறைய நெருக்கடிகளை, அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதை வெளிப்படையான அவதானிப்புகளில் நாங்கள் பார்க்க முடியும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவில் வடக்கு கிழக்குத் தொடர்பாக அல்லது அண்மைக் காலங்களில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்க காங்கிரசில் ஒரு தீர்மானமாக, உரையாடல் குறித்த ஒரு அம்சமாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் என் போன்ற தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஒரு வகையிலான நெருக்கீட்டைத்தான் உண்மையில் தந்தது.

சீனத் தாக்குதல் நிலைக்குள் இலங்கை தன்னையே நகர்த்திக் கொண்டு செல்கின்ற போது, அதனைத் தடுப்பதற்கான ஒரு உத்தியும், வாய்ப்பும் இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிற்கு இருந்தது. இந்தியா இதை ஒரு நெருக்கடியாகப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு உரித்துடைய, தன்னோடு சேர்ந்து இயங்கக்கூடிய ஒரு அரசாக அல்லது அது குறித்த ஒரு அம்சத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடாக அடையாளப்படுத்தியிருக்கின்றது என்பது தான் இதில் இப்போது இருக்கின்ற முடிவுகளாக இருக்கின்றது.

விஜயமும் மாகாண சபைத் தேர்தலும்3 இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்13ஆம் திருத்தச் சட்டத்தை மீள மீள வலியுறுத்துவது என்பது இந்தியாவிற்கு இருக்கின்ற ஒரு சூழலும், வாய்ப்புமாகத் தான் இருக்கின்றது. இதன் பின் இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை. அப்படியான வாய்ப்பு என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும் தான் இருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமே இந்தியாவிற்கு இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பான ஒரு பகுதியாக இருக்கின்றது. எனவே அதனை பராமரிப்பதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையோடு தன்னுடைய உறவைப் பலப்படுத்திக் கொள்ள அல்லது நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தை ஒரு கருவியாக மட்டும் இதுவரையில் அது பயன்படுத்தியிருக்கின்றது என்று தான் நான் நினைக்கிறேன்.

முப்பத்தி இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும், மாகாண சபைப் பொறிமுறை, நிலம் தொடர்பாக அதற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சம்பந்தமாக, சுகாதாரம், தேசிய பாடசாலை போன்ற பல அதிகாரங்கள் தகர்க்கப்படுகின்ற சூழலில் இந்தியா மீளவும் அதற்குக் கீழே தான் இயங்க முயற்சிக்கின்றது. அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மீளவும் ஒப்புவித்திருக்கின்றது.

இந்தியா பெருமளவிற்கு தன்னை ஒரு மாற்ற நிலைக்குள் அதாவது சோவித் சார்பு நிலைக்குள் இருந்து விடுபட்டு, தற்போது அமெரிக்க சார்பு நிலைக்குள் சென்று புதிய உலக ஒழுங்கை கண்டு, பனிப்போருக்குப் பின்னான அல்லது பின்னான பனிப்போர் வடிவங்கள் வந்த பிற்பாடுகூட, இலங்கையைப் பொறுத்து அது இன்னுமே 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு கருவியாக அது கருதுகிறது. அது ஒரு துரதிஸ்டவசமான அணுகுமுறை என்று தான் எனது அவதானிப்பைப் பொறுத்தவரையில் எனக்கு இருக்கின்றது.

உண்மையிலேயே இலங்கையோடு மீளமைக்கப்பட வேண்டிய, இலங்கையோடு ஆரோக்கியமான ஒரு உடன்பாட்டிற்கு போக வேண்டிய ஒரு தேவைப்பாடு இந்தியாவிற்கு இந்தக் காலப்பகுதியில் இருந்திருக்கிறது. அந்த வாய்ப்பை அது தனது நலனிற்கு உட்படுத்தப்பட்ட விதத்தில் அது பயன்படுத்துவதில் இந்தச் சூழலில் அது தவறு விடுகின்றது என்று தான் நான் நினைக்கிறேன்.

காரணம் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு மேலும் வடக்குக் கிழக்கில் அல்லது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்திற்கு இருக்கக்கூடிய தீர்வுகளை முன்வைக்கும் வாய்ப்புகள் எல்லாம் நிச்சயமாக உண்டு. ஏனெனில் உலகம் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. உலகத்தின் ஒழுங்குமுறை மாற்றப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் குறித்து இந்தியா ஒரே விதமான நோக்கோடு தான் கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக பயணம் செய்கின்றது என்பது ஒருவகை துரதிஸ்டவசமானதாகத் தான் நான் அவதானிக்க முயலுகின்றேன்.  7.52

கேள்வி:
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வரவிருந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையம் குறித்த உடன்படிக்கையில் இலங்கையும் இந்தியாவும் அவசரமாக கடத்தப்படுகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:
இலங்கை அரசாங்கம் இந்தியாவோடு இணங்கிப் போகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கத் தொடங்கி விட்டது. 60, 70 களில் எவ்வாறு இலங்கை இந்திய உறவு இருந்ததோ அதே போன்றதொரு சூழலுக்குள் மீளவும் கட்டியமைக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கின்றது. அதேபோல மிலிந்த மொரகொட எங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை, அல்லது எங்களுக்குள்ளே இருக்கின்ற நெருக்கீடுகளை எவ்வாறு தந்திரோபாயமான முறையாக மாற்றுவதற்குரிய பொறிமுறை ஒன்றை தன்னுடைய வழி வரைபடம் தொடர்பாக முதன்மைப்படுத்திக் கொண்டு செயற்பட முயற்சித்தார். ஆகவே இவற்றுக்கு ஊடாக ஒரு விடயம் தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவைக் கையாளுகின்ற விடயத்தில் அவர்கள் எப்போதுமே தந்திரோபாயமான பொறிமுறைகளை அவர்கள் பின்பற்றியிருக்கின்றார்கள்.

இலங்கை ஒரு சிறிய தீவு என்ற அடிப்படையில், அருகிலுள்ள பெரிய ஒரு தேசத்தை, அரசை அவர்கள் எதிர்கொள்வதற்கு முழுமையாக அவர்கள் தந்திரோபாயத்தையும், இராஜதந்திரத்தையும் மிக முக்கிய இலக்காகக் கொண்டு கடந்த காலங்களில் இயங்கியிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் இலங்கை புலமையாளர்களுடைய ஒன்றித்த பயணத்தினுடைய ஒரு வெற்றி முகம் என்று தான் நான் குறிப்பிடுவேன்.

இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்அந்த அடிப்படையில் தான் இந்த மேற்கு முனையத்தினுடைய உடன்பாடு, கிழக்கு முனையத்தை சீனாவோடு பகிருகின்ற போது, மேற்கு முனையத்தை இந்தியாவோடு பகிருகின்ற போது, சமநிலை பேணப்படுகின்ற ஒரு பொறிமுறை  ஒன்றை இந்தியா சார்ந்த நிலைக்கு அவர்கள் காட்டுவதன் ஊடாக இந்த அரசியல் சூழலை அவர்கள் கடந்து செல்வதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். இலங்கையின் உயிர் வாழ்வு என்பது அதன் வெளியுறவுக் கொள்கையில் தான் தங்கியிருக்கின்றது. வெளியுறவுக் கொள்கையின் இருப்பை அவர்கள் சரியாக கட்டமைத்திருப்பது என்பது தான் இந்த இடத்தில் நாங்கள் அவதானிக்கின்ற மிக முக்கியமான அம்சம்.

ஆகவே வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகின்ற போது இந்த உடன்பாடு செய்யப்படுகின்றது என்பதற்கு  முன்னரே திட்டமிட்டு விட்டார்கள். இந்தக் காலப்பகுதியில் அவர்கள் அதிகமாக ஒன்றிணைந்து இயங்குவதற்கு அவர்கள் தயாராகி விட்டார்கள். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்த காலப்பகுதியிலிருந்து மிலிந்த மொரகொட இந்தியாவிற்கு தூதுவராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து பாரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன.