13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. – குருசாமி சுரேந்திரன்

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது

தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை நடை பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அது நோக்கப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்வதில் முக்கிய பங்காற்றியது ரெலோ – அதாவது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தான். இந்தச் சந்திப்பின் நோக்கம். அது குறித்த முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் ‘ரெலோ’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சுரேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியை இங்கே தருகின்றோம்.

கேள்வி –  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் கூறுவீர்களா?

பதில் – நல்ல விடயம். இவை தொடர்பாக தவறான புரிதலோடு பல விமர்சனங்கள் வந்திருக்கின்ற வேளையிலே இந்தக் கேள்வி மக்களைத் தெளிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன்.

முதலில் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த எங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற ஒரு அரசியல் தீர்வே எங்களுடைய நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டிருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற இந்தியாவைக் கோருவதற்கு, அதன் பொறுப்பு   இந்தியாவிடம் இருக்கின்றது. இலங்கையை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதற்கான கோரிக்கையை பொதுத் தரப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பினால் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது அரசியல் தீர்வாக அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கின்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும்என்பது தான்  எங்கள் கோரிக்கை. இந்தக்கோரிக்கயைின் ஊடாக சில விடயங்களை நாங்கள் எட்ட விரும்புகின்றோம்.

ஒன்று இந்தியா தொடர்ந்தும் 13ஐ வலியுறுத்தி வருகின்றது. அதன் ஊடாகத்தான் எங்கள் அரசியல் தீர்வை நோக்கிய கோரிக்கைகளுக்கு இந்தியாவின் உதவி கிடைக்கும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். ஆகவே இந்தியா தமிழர்களின் கோரிக்கையில் எவ்வளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றது என்பதை, இந்தக் கோரிக்கையை அவர்களிடம் ஒருமித்த நிலையிலே முன்வைப்பதன் மூலம் நாங்கள் கண்டு கொள்ள முடியும்.

இரண்டாவது இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற 13ஐ முற்றுமுழுதாக நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கின்றதா? என்பதன் மூலம் எங்களுடைய சமஸ்டிக் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள முடியும். அரசியல் யாப்பிலே உள்ள விடயத்தையே அவர்கள் சரியாக நகர்த்த முடியாதவர்கள் அல்லது ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த முடியாதவர்கள், அதையும் தாண்டி ஒருதீர்வை இதய சுத்தியோடு தருவதற்கு  பேச்சுவார்த்தை நடத்துவார்களா? அல்லது நடத்துகின்ற பேச்சு வார்த்தையில் அர்த்தம் இருக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இருக்கும்.

மூன்றாவதாக அதேபோன்று தமிழர் தரப்பிலே இருக்கின்ற, அரசியல் யாப்பிலே இருக்கின்றவற்றைத் தாண்டி ஒரு புதிய அரசியல் தீர்வை. சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி போன்ற பல ஆட்சி முறைகளைப் பெற்றுத் தருவதாக வலியுறுத்தியிருந்தாலும், ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை, மிகக்குறைந்த அதிகாரங்களோடு கூடியதாக இருந்தாலும்கூட, அதையே நிறைவேற்ற முடியாத அல்லது இந்தியாவின் தரப்புக்களோ அல்லது சர்வதேச அழுத்தத்தோடு நிறைவேற்ற முடியாத தமிழர் தரப்புகளாகிய அரசியல் தரப்புகள் அதையும் தாண்டிய ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை பெறமுடியும்.

நான்காவதாக ஒருமித்த நிலைப்பாட்டிலே பன்முகப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தையும் ஒன்றிணைத்து இதற்கான கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் எம்முன்னே எடுத்து வருகின்ற பல விடயங்களுக்கு எங்கள் தமிழினம் முகம் கொடுக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வருகின்ற போது எங்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற பல நடவடிக்கைகளை தடுத்து நிறுது்த முடியும். குறிப்பாக காணி அபகரிப்பு, எங்களுடைய குடிப்பரம்பலைச் சிதைப்பதற்காகவும், எங்களுடைய இருப்பினை சீர்குலைப்பதற்காகவும், எங்களுடைய சனத்தொகையைக் குறைப்பதற்காகவுமாக எடுக்கப்பட்டு வருகின்ற திட்டமிட்ட காணி அபகரிப்புகளை நிறுத்துவதற்கு இந்த 13இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம் முற்றுமுழுதாக எங்களுக்கு வழங்கப்படுகின்ற போது, அதிலிருந்து எங்கள் தாயக பூபுமியைக் காத்துக் கொள்வதற்கு இந்தப் 13இன் கீழாக முதலாவது கட்டமாக முடியும். வழங்கப்படுமாக இருந்தால்.

அதேநேரத்திலே புதிய தேர்தல் விதிமுறைகள் என்று புதிய விடயங்களைக் கொண்டு வந்து எங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு, குறிப்பாக வழக்கு கிழக்கிற்கு வெளியிலும், திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஏற்கனவே சனப்பரம்பல் கேள்விக்குடியாக இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை அழித்து விடுவதற்கு ஏற்ற தேர்தல் சட்டவிதி முறைகளைக் கொண்டு வருகிறார்கள். அதேபோன்ற அரசியல் யாப்பிலே கூட பல சட்டங்களைக் கொண்டு வந்து எங்களுடைய அரசியல் உரிமைகளை மறுக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. காணி அபகரிப்பு, தேர்தல் திருத்தச் சட்டங்கள், அரசியல் சாசனம் போன்ற பல விடயங்களில் அரசாங்கம் முன்வைக்கின்ற நிலையில் அவற்றை தடுத்து நிறுவத்துவதற்கு இங்கிலாந்தின் உதவியைக் கோருவதன் மூலம் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்படுகின்ற, திட்டமிட்டு எடுக்கப்படுகின்ற அரசியல் நடவடிக்கைகளை, இனத்தை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முட்டுக்கட்டை போடுகின்ற  நடவடிக்கையாக இதை ஒரு இராஜதந்திர நடவடிக்கையாக மேற்கொள்ள முடியும் என்ற எதிர்பாரப்போடு தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கேள்வி – இது 13 க்குள் தமிழர் பிரச்சினையை முடக்கிவிடும் ஒரு உபாயம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

பதில் –  அது ஒரு அர்த்தமற்ற பேச்சு. ஏனென்றால், 13 என்பது ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கின்ற ஒரு விடயம். பயங்கரவாதத் தடைச்சட்டம் யாப்பிலே இருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகின்ற இந்த அரசாங்கம், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும். நாங்கள் கேட்பது சமஸ்டி அரசியல் உரிமை. அதாவது ஒற்றை ஆட்சியை ஏற்காத ஒரு அரசியல் தீர்வை நாங்கள் கோரிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு காணி அபகரிப்பின் மூலம் எங்கள் இனக்குடிப் பரம்பலைச் சிதைத்து அந்தக் கேள்விக்கான பலத்தினைக் குறைத்துக் கொண்டு வருவதை நாங்கள் காண்கிறோம். ஆகவே இந்தப் 13ஐக் கோருவது என்பது, எங்களுடைய தீர்வாக நாங்கள் கோரவில்லை. ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருப்பதை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோருகிறோம். அரசியல் தீர்விற்கான எங்கள் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு விடயமாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.

கேள்வி – இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் – தவறான கருத்து. ஒரு அரசியல் ஞானமற்ற, ஒரு அரசியல் தீர்க்கதரிசனமற்ற, சரியான யதார்த்தமான அரசியல் நிலைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு வரட்டு அரசியலைப் பேசிக்கொண்டிருக்கக்கூடிய தேர்தல் நோக்கத்தைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்தி சுயநலங்களைத் தீர்த்துக் கொள்ள முற்படுபவர் களுடைய கருத்தாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கிறோம். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதால், இந்தியா பெரிய நலன்களை அடைந்து விடும் என்பதில் எந்த நியாயப்பாடும் இல்லை. மாறாக இந்த முயற்சிக்கு அரசாங்கம் எங்கள் இனக்குடிப் பரம்பலைச் சிதைப்பதற்கும், எங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கும், எங்களின் அரசியல் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்குமான அரசின் நடவடிக்கைக்கு இப்படியான குற்றஞ் சாட்டுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்கள் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஏனென்றால், இந்த விடயத்திலே இந்தியாவின் நலன்களைப் பேணவேண்டிய தேவை எங்களுக்கு எதுவும் இல்லை. இந்தியா தன்னுடைய நலன்களை நன்றாகப் பேணிக் கொள்ளக்கூடிய பக்குவத்திலும், அரசியல் பலத்துடனும், தங்களுடைய செயல் வடிவங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற இராஜதந்திர நகர்வுகளுடனும் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் நலன்களை முன்னிறுத்துவதல்ல எங்களின் நோக்கம். முதலாவதாக நாங்கள் எங்களுடைய நலன்களைப் பேண வேண்டும் என்ற வகையிலே, எங்கள் இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையிலே 13ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இந்தியாவினுடைய கடமை. அதை ஒருமித்த நிலைப்பாட்டில் கோர வேண்டும் என்று எங்களை வலியுறுத்தி வருவதனாலே தான் இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுக்கிறோமே தவிர, இந்தியாவின் நலன்களைப் பேணுவதற்காக அல்ல. எமது மக்களின் நலன்களைப் பேணுவதற்கான நடவடிக்கை. இதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்போர் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் தங்கள ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைத்தான் எங்களால் வைக்க முடியும்.

கேள்வி –  13 ஆவது திருத்தம் கடந்த 3 தசாப்த காலமாக அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும், இதுவரையில் இல்லாத அக்கறை இப்போது எதற்காக என்ற கேள்வி ஒன்றும் எழுப்பப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – நிச்சயமாக. 2009 ஆம் ஆண்டு வரையிலும் விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற ஒரு கனவை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே 13ஐப் பற்றிப் பேச வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. காணி அபகரிப்போ, நில அபகரிப்போ அல்லது திட்டமிட்ட குடியேற்றங்களையோ அரசாங்கம் செய்ய முடியாத ஒரு சூழ்நியைலில் இருந்தபடியினாலே 13ஐப் பற்றிய கவலை எங்களுக்கு இருக்கவில்லை. அதேபோன்று ஆயுத பலத்தோடு இருந்த படியினாலே, இந்தக் குடியேற்றங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாத அளவிலே அரசாங்கம் மௌனித்துப் போயிருந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.

இன்று அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னராக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனநாயக வழியிலே கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சி செய்து வந்த வேளையிலே இன்று இந்த அரசாங்கம் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வையிலே திட்டமிட்டு எங்களின் இனப்பரம்பலைச் சிதைக்கின்ற   காணி அபகரிப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக பாதுகாப்பு, சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி, தொல்லியல் போன்ற திட்டங்களில் காணிகளை அபகரித்து, அதன் ஊடாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இப்போது மாதவனை, மயிலத்தமடு என்ற இடங்களில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொல்லியல் ஊடாக பலநூறு ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு என்ற  ரீதியில் மன்னார் நானாட்டான் என்ற இடத்திலே நாலாயிரம் ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்துக் கொண்டிருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நாளுமே எங்களுடைய மக்கள் காணி அபகரிப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதனால், நாங்கள் வெற்றியடையப் போவதில்லை. இப்படியான இன அழிப்பு நடவடிக்கைகள் கூர்ப்படைந்துள்ள வேளையிலே நாங்கள் இந்த 13ஐ வலியுறுத்துவதன் மூலம் தான் கடந்த காலத்தில் நாங்கள் சொல்லி வந்த அரசியல் தீர்வு என்பதை நல்லாட்சி அரசாங்கத்தில்கூட நிறைவேறாத பட்சத்திலே தொடர்ந்தும் நாங்கள் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இருக்கின்ற இருப்பை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அழித்து வருவதற்கு இந்த 13ஐ முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் ஆகக் குறைந்த எங்கள் தாயக பூமியை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். எங்கள் இனப்பரம்பல் குடிகளைப் பேணிக் கொள்ள முடியும் என்ற வகையிலே ஒரு தந்திரோபாயமாகத்தான் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

  ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. - குருசாமி சுரேந்திரன்