“தார்மீகக் கடமையிலிருந்து இந்தியா விலகி இருக்கிறது” – சிவசக்தி ஆனந்தன்

தற்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை கையாண்டு அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம். ஆனால் மேற்குலகம் மறுபடியும் ஒரே தவறை செய்கின்றது. அனைத்து தமிழ் தரப்புடனும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய செயற் திட்டங்களை வகுக்காமல் தனியே கூட்டமைப்புடன் அவர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப் பதானது இந்தியா தன் தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

தங்களது தெற்கு வாயிலை சீனா கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் இந்தியா அமைதியாக இருக்கின்றது. தொடர்ந்தும் தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

கொத்தலாவலை பல்கலைக்கழகத்திற்கு தனியான ஒரு சட்டம் இயற்றப்படுவது ஒரு பொருத்தமற்ற செயற்பாடு கொத்தலாவலை பல்கலைக்கழகம் இதுவரை காலமும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. அந்த சட்டங்கள் தான் அங்கும் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது அப்படி இருக்கையில் திடீர் என்று கொத்தலாவலை பல்கலைக் கழகத்திற்கு ஒரு விசேட சட்டம் கொண்டு வருவது இலவச பல்கலைக்கழக கல்வியை இராணுவ மயமாக்குகின்றது என்பதோடு, இதை ஒரு இராணுவ பல்கலைக் கழகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

ஏற்கனவே கொத்தலாலை பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற பல அதிகாரிகள் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். அதோடு இப் பல்கலைக் கழகத்திலிருந்து கல்விகற்று உயர் கல்விக்காக சீனாவிற்கு சென்று திரும்பியுள்ள மாணவர்கள் கொத்தலாலை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதனூடாக சீனாவிற்கும் கொத்தலாலை பல்கலைக் கழத்திற்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்கள் மேலும் வலுப் பெறுகின்ற ஆபத்தும் இருக்கின்றது.

இவ்வாறன விடயங்கள் பூகோள ரீதியாக பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் மேலும் சிவில் நிர்வாகத்துக்குள் எதிர் காலத்தில் இராணுவத்தை உட்புகுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவும் இதை கொள்ளலாம். ஏற்கனவே சிவில் நிர்வாகத்திற்குள் முன் பள்ளிகளில் இருந்து உயர் பதவிகள் வரைக்கும் தற்சமயம் இராணுவத்தில் இருப்பவர்களும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் புகுத்தப் பட்டிருப்பது எதிர் காலத்தில் மேலும் அதிகரிக்கப் படுவதற்கான ஆபத்தும் உள்ளது.