உக்ரைன் போரை கண்டிக்க இந்தியா, சீனா மறுப்பு

இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள நாடுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை கண்டிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட அழுத்தத்தை இந்தியாவும், சீனாவும் கூட்டாக நிராகரித்துள்ளன.

கடந்த புதன்கிழமை (1) இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகிய இந்த கூட்டத்தொடரில் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிக்கையானது கடந்த வாரம் நிதி நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிக்கையை ஒத்ததாக இருப்பாதாக அவை தெரிவித்துள்ளன.

அமைச்சர்களின் கூட்டத்தொடரில் உக்ரைன் விவகாரமே அதிகம் விவாதிக்கப்பட்ட போதும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான நிதி மறுசீரமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களே அறிக்கையில் இடம்பெற வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவை குற்றம் சுமத்துவதை அவர் விரும்பவில்லை. அதாவது கடந்த வாரம் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இடம்பெற்றது மீண்டும் நடைபெறக்கூடாது என்பதில் மோடி அவதானமாக இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.