இந்தியா, ஈழ ஏதிலிகளைக் கையாளும் முறை நாகரீகமற்றது – சே.வாஞ்சிநாதன்

சே.வாஞ்சிநாதன்கடந்த மே மாதம் 24ஆம் திகதி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள 78 ஈழத் தமிழ் ஏதிலிகள், தம்மை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து, போராட்டம் ஒன்றினை முன்னெடுத் திருந்தனர். அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது. ஆனாலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.

இதையடுத்து கடந்த ஜூன் 9 ஆம் திகதி முதல் ஜூன் 28 வரை  அதே கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தை   முன்னெடுத் திருந்தனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்களை தமிழக அரச அதிகாரிகள் சந்தித்து, அவர்களின் கோரிக்கைக்குத் தீர்வு காண்பதாக உத்தரவாதம்  அளித்துள்ளனர்.

இவ்வாறு தாம் ஒவ்வொரு போராட்டங்களை முன்னெடுக்கும் போதும், அரச அதிகாரிகளால் தமது கோரிக்கை தொடர்பில் வாக்குறுதிகள் அளிக்கப் படுவதாகவும், ஆனால் எந்த நடவடிக்கை யினையும் தமிழக அரசு இது வரையில் எடுக்க வில்லை என்றும், தாம் தொடர்ந்து தமது குடும்பங்களைப் பிரிந்து தனிச் சிறையில் வருடக் கணக்கில் துன்பப் படுவதாகவும் குறித்த ஏதிலிகள் கவலை வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மதுரை மாவட்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞரும்   மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சே.வாஞ்சிநாதன்,  சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஈழ ஏதிலிகள் குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

கேள்வி:
தமிழக சிறப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனைத்துலச் சட்ட விதிகளுக்கு அமைவாக நடத்தப் படுகின்றனரா?

பதில்:
இல்லை. அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப் பட்ட நிலையில், கொத்தடிமைகள் போல் நடத்தப் படுகின்றனர். ஈழத் தமிழர்களின் சட்ட பூர்வ நிலை என்பது ‘சட்ட விரோதக் குடியேறிகள்’ என்பதே. சட்ட விரோதக் குடியேறிகள் 50 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலும், அவர்களுக்கு அரச பணி, ஓட்டுநர் உரிமம் கிடையாது; நீதிமன்றம் செல்லும் உரிமை, கருத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என்பனவும் இல்லை.

இலங்கை என்றொரு நாடே தெரியாத இரண்டு தலை முறையினர் இங்கு வாழ்ந்து  வருகின்றனர். அவர்களுக்குத் தாய் நாடென்று இல்லவே இல்லை. எத்துணை கொடூரமான நிலை இது! அகதிகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா திட்டமிட்டே கையெழுத் திடாமல் இருக்கிறது. இந்தியாவிலும் ஏதிலிகள் சட்டம் இல்லை.

உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஈழ ஏதிலிகளைக் கையாளும் முறை நாகரீகமற்றது. இந்தியா, தமிழ கத்தோடு நேரடித் தொடர்பு டைவர்கள் ஈழத் தமிழர்கள். மொழி, பண்பாடு, உயிரியல் என மூலத் தொடர்பு கொண்டவர்கள். மற்ற நாடுகளைவிட ஈழத் தமிழர்களைக் காப்பதில் வரலாற்று ரீதியாக இந்தியா, தமிழ் நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

கேள்வி:
இவர்களின் நல்வாழ்வுக்கும், சுதந்திரத்திற்கும் தமிழ் மக்கள் எத்தகைய பணியை ஆற்ற வேண்டும்?

பதில்:
ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை தமிழ் நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். ஜல்லிக் கட்டுப் போன்று பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உலகத் தமிழர்கள் இதில் பங்கேற்க வேண்டும். தமிழக அரசு திபெத் அகதிகளுக்கு செய்ததைப் போன்று உரிய வசதிகளைச் செய்து தர வேண்டும்.

ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்துப் போராட வேண்டும். இரட்டைக் குடியுரிமை ஒன்றே தீர்வு என அனைவரும் ஒன்றுபட வேண்டும். மிக மோசமான முறையில் இந்தியா ஈழத் தமிழர்களை நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் பலர் குடியுரிமை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கின்றார்கள்.

ஆனால் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைகூட கிடையாது. சிறப்பு வதை முகாம்களில் அடைக்கப் பட்டுக் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப் படுகின்றனர். சாவுக்கு செல்லக் கூட   அரசு அனுமதி பெற வேண்டும். கூலி வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும். திருமணத்தை இலங்கைத் தூதரகத்தில் தான் பதிய வேண்டும். கியூ பிரிவு கண்காணிப்பு, பாலியல் தொல்லை என ஈழத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நரகமாகவே உள்ளது.

தங்கள் மீது செலுத்தப்படும் அடக்கு முறை, குற்றங்களுக்கு புகார் கூட அளிக்க முடியாது என்பது உச்சபட்ச மோசமான நிலை.  விடுதலைப் புலிகள் என்று சொல்லி செலுத்தப் பட்ட அடக்கு முறைகள் இன்று வரை நீடிப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள் கூட்டம் உடனே கூட்டப்பட்டு இப்பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் பிரச்சினையை எழுப்பலாம்.

கேள்வி:
அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் இந்தியா கையெழுத் திடாததும் ஈழத் தமிழ் ஏதிலிகளின் துன்பத்திற்கு காரணமா?

பதில்:
அது ஒரு காரணம் தான். திபெத் ஏதிலிகள் இந்திய அரசால் மிகவும் நன்றாக நடத்தப் படுகின்றனரே? கர்நாடக – தமிழக எல்லையான சத்திய மங்கலத்தில் உள்ள திபெத் அகதிகள் முகாமில் உள்ளோருக்கு 3000 ஏக்கர் நிலம், நல்ல வீடுகள், நிவாரணக் கடை, தானியங்கி பண சேவை, புத்த கோயில்கள் என அனைத்து வசதிகளும் உள்ளதே.

ஆனால்  அதன் அருகில் உள்ள பவானிசாகர் ஈழ அகதிகள் முகாம், மனிதர்கள் வாழும் நிலையில் இல்லையே.  இதில் 24 மணி நேர கண்காணிப்பு வேறு. இலங்கை – ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான இந்திய அரசின் கொள்கை தான் முக்கியமானது. இந்தியப் பெரு முதலாளிகளின் சந்தைக்காக இலங்கையை தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே இந்திய அரசின் நோக்கம்.

இந்திய முதலாளிகளின் பொருளாதார நலன்களுக்காகவும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை நிலை நிறுத்தவுமே இந்திய அரசு செயற்படுகிறது.

ரிலையன்ஸ், டாட்டா, பஜாஜ் உள்ளிட்ட இந்திய முதலாளிகளின் நலன், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் சக்கரத்தில் இணைவது – இதற்குட்பட்டே ஈழ மக்கள் தொடர்பான முடிவுகளை இந்திய அரசு எடுக்கிறது என்பதே உண்மை. காங்கிரஸ் போய் பாஜக வந்தாலும், கொள்கை ஒன்று தான். இரண்டாவதாகத் தமிழர்கள் தமிழ் மொழி, பண்பாடு மீதான ஆரியப் பார்ப்பனீயத்தின் பகை.

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் சித்தாந்த ரீதியாக ஆரிய, வர்ணாசிரம பண்பாட்டை மிக நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். இதனால் தமிழர்களைப் பகை மனப்பான்மையுடன் தான்  ஒன்றிய அரசு அணுகுகிறது. இக் கொள்கை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இதனால் தான் கடந்த ஆண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ்  இசுலாமியர்கள் போல்  இலங்கை நாடும், ஈழ அகதிகளும் கொண்டு வரப்படவில்லை. இன அடிப்படையிலான துல்லியமான பாகுபாடு இது. இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் மத, இன, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை  தீண்டாமைக் குற்றம் என்கிறது.

ஆனால் ஈழத் தமிழர்கள் மீதான இனப் பாகுபாட்டுக் குற்றம் 40 ஆண்டுகளாக நீடிக்கிறது. எனினும் அகதிகளுக்கான சர்வதேச உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட்டால், இந்திய நீதிமன்றங்கள் இப்பிரச்சினையில் தலையிடும். மனித உரிமை அமைப்புகள் சட்டப் போராட்டம் நடத்தும்.

குடியுரிமையை வலியுறுத்த வாய்ப்பு ஏற்படும். நாடுகளின் செயற்கையான எல்லைகள் இன்றுவரை விலங்களுக்கு இல்லை. உலகில் வாழும் உயிரினங்களில் அறிவார்ந்த உயிரினம் என்று அறியப்படும் மனித இனம் 7 கோடி மக்களை நாடற்றவர்களாக வைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அவமானப் படத்தக்க நிகழ்வு. இந் நிலையை மாற்ற அனைவரும் ஒன்றிணைவோம்!

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 இந்தியா, ஈழ ஏதிலிகளைக் கையாளும் முறை நாகரீகமற்றது - சே.வாஞ்சிநாதன்