Tamil News
Home செய்திகள் ‘வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய

‘வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய

“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பே,  இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுக்களின் போது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் போது, “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த பத்திரிகை குறிப்பு ஒன்றிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனா உட்கட்டமைப்பில் உதவவில்லை என்றும்  சீனாவின் கடன் பொறியில் இலங்கை வீழ்ந்துவிடவில்லை என்றும் கோட்டபாய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தேவை முதலீடே ஒழிய கடல் அல்ல என்றும் கோட்டபாய தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்ந்து வெளிநாடுகளிடம் கடன் பெற விரும்பவில்லை என்றும், தமக்கு தேவை உயர்மட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடே என்றும் கோட்டபாய கூறியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வகையிலான அரச அதிகாரிகளின் “சிவப்பு நாடா” முறைகளை இலங்கை அகற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் கோட்டபாய வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்று தெரிவித்த கோட்டபாய, கலாசார மற்றும் வரலாற்றுக் காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரிவினைவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது எனபதை சுட்டிக்காட்டியுள்ள கோட்டபாய, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோ, இலங்கையில் உயர்ந்தபட்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் ஒத்துழைத்துச் செயற்படும் என்று   கூறியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முதலீட்டை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். ஒழுங்கான திட்டங்களுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அமெரிக்கா உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version