Home செய்திகள் அதிகரித்துச் செல்லும் மரபணுமாற்றம் பெற்ற விவசாயமும் உணவும் -ஆர்த்தீகன்

அதிகரித்துச் செல்லும் மரபணுமாற்றம் பெற்ற விவசாயமும் உணவும் -ஆர்த்தீகன்

Aalif Ali !!: உயிர் வாழ்க்கைக்குச் சவால்விடும் மரபணுப் பொறியியல்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகளின் இறக்குமதியை 2024 ஆம் ஆண்டு தடை செய்ய மெக்சிகோ திட்டமிட்டுள்ளதானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவிற்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை செயலாளர் ரொம் வில்சக் மெக்சிகோ அதிபரை எச்சரித்தபோதும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரபணுமாற்றப்பட்ட விதையானது உள்ளூரில் உள்ள பாரம்பரிய சோள விதைகளுக்கு பெரும் ஆபத்தாக மாறிவருவதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.

உலகில் சீனாவுக்கு அடுத்த நிலையில் அதிகம் சோளத்தை இறக்குமதி செய்யும் நாடாக மெக்சிகோ உள்ளது. அது அதிக இறக்குமதியை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்வதுடன், இந்த தடை இறக்குமதியின் அளவை அரைபங்காக வீழ்ச்சியடைய செய்யும்.

மரபணுமாற்றம் செய்யப்பட்ட சோளத்தை 2024 ஆம் ஆண்டு முதல் மனிதர்கள் உண்ணுவதற்கு தடைவிதிக்கப் போவதாக மெக்சிகோ அதிபர் அன்ரஸ் மனுவல் ஒபரேற்றர் 2020 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

மரபணுமாற்றம் பெற்ற சோளம் பாரம்பரிய இயற்கையான சோளச் செய்கையில் என்ன பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் குறைவாகவே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் என்றால் என்ன?

ஒரு உயிரினத்தின் பயன்மிக்க மரபணுவை மற்றுமொரு உயிரினத்தின் உடலில் உள்ள மரபணுவில் புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக இணைத்து பின்னர் அதன் மூலம் மனிதர்கள் தமக்கு தேவையான உற்பத்தி பொருட்களை அதிக பயன் உள்ளதாக பெறுவதாகும்.

உதாரணமாக நீரழிவுநோயாளிகளுக்கான இன்சுலின் எனப்படும் ஹோர்மோன் மருந்தினை முன்னர் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களில் இருந்தே பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

ஆனால் உயிரியில் பொறியியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பின்னர் மனிதர்களின் மரபணுவில் உள்ள இன்சுலின் ஹோர்மோனுக்கான மரபணு வெட்டப்பட்டு அதனை பக்ரீரியா என்ற நுண்ணங்கியின் மராணுவில் பொருத்தி அதன் மூலம் பக்ரீரியாவை பயன்படுத்தி இன்சுலின் மருந்து மிகவும் விரைவாக தயாரிக்கப்படுகின்றது.

மாடுகள் மற்றும் பன்றிகளில் இருந்து பெறப்படும் இன்சுலின் சில நோயாளிகளுக்கு ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தியபோதும் மரபணுமாற்றம் பெற்ற பக்ரீரியா மூலம் தயாரிக்கப்படும் இன்சுலின் அவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவை மனிதர்களின் மரபணுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டவை.

இந்த தொழில்நுட்பம் பின்னர் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி தொழில்களில் அதிகம் புகுத்தப்பட்டுள்ளது. குறைந்த செலவில் நிறைவான உணவை தயாரிப்பதே அதன் நோக்கம் என்பதுடன், புதிய நிறங்கள், அதிக சுவை, அதிக பருமன், நீண்டகாலம் கெட்டுப்போகாத உணவுப்பொருட்கள், அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் என இந்த தொழில்நுட்பம் அதிக சந்தைவாய்ப்பை பிடித்துள்ளது.

கரட் எனப்படும் மரக்கறியில் உள்ள விற்றமின் ஏ என்ற தாதுப்பொருளுக்கான மரபணு நெல் பயிர்களுக்கு மாற்றப்பட்டு விற்றமின் ஏ கொண்ட அரிசி (Golden Rice) தயாரிக்கப்படுகின்றது.

அதிக காரம் கொண்ட செத்தல் மிளகாய் தொடக்கம் அதிக எடை கொண்ட அதிக நாட்கள் கெட்டுப்போகாத பப்பாளிப்பழம், சோளம், சோயா, பஞ்சு என பெருமளவான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

உலகில் 17 மில்லியன் விவசாயிகள் இந்த பயிர் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை சேர்ந்தவர்கள். 2019 ஆம் ஆண்டின் தகவல்களின் அடிப்படையில் உலகில் 70 இற்கு மேற்பட்ட நாடுகள் இந்த உணவுப்பொருட்களை பயிரிடுவதுடன், கொள்வனவும் செய்கின்றன. 5 அபிவிருத்தி அடைந்த நாடுகளும், 24 அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும் இந்த தொழில்நுட்பத்திற்கான பொறிமுறைகளை கொண்டுள்ளதுடன், உற்பத்தியிலும் ஈடுபடுகின்றன. மரபணுமாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா, பிரேசில், ஆர்ஜன்ரீனா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே முன்னனி வகிக்கின்றன.

தற்போதுள்ள ஆபிரிக்காவின் மக்கள் தொகையான 926 மில்லியன் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டு 2.2 பில்லியனாக அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே வறட்சியால் குறைவடைந்திருக்கும் அவர்களின் விவசாயத்தின் மூலம் இந்த மக்கள் தொகைக்கு உணவளிக்க முடியாது. இந்த நிலையில் அதிக விளைச்சலை தரும் மரபணுமாற்றப்பட்ட பயிர்செய்கையே அங்கு உகந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

பல நாடுகள் தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றன. 6.7 மில்லியன் ஏக்கரில் தென்னாபிரிக்கா பருத்தி மற்றும் சோயா பயிர் செய்கையில் ஈடுபடுகின்றது. ஆசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் மரபணுமாற்றப்பட்ட பருத்தி செய்கையில் ஈடுபடுகின்றன. பங்களாதேசத்தில் கத்தரிக்காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கனடாவும் அமெரிக்காவுமே 1996 ஆம் ஆண்டு முதலில் இந்த உற்பத்திகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன. பல நூறு மில்லியன் ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் மூலம் இரு நாடுகளும் 106 பில்லியன் டொலர்களை 1996 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சம்பாதித்துள்ளன. இதுவரையில் கனடா 185 புதிய இனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா உலகில் முன்னியில் உள்ளது. அது உலக ஏற்றுமதியில் 38 விகிதத்தை கொண்டுள்ளது. தற்போது மரபணு மாற்றப்பட்ட சல்மன் வகை மீன் உற்பத்தியிலும் இந்த இரு நாடுகளும் ஆர்வம் காண்பித்து வருகின்றன.

மரபணுமாற்றப்பட்ட பயிர் செய்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பின்தங்கியே உள்ளன. கடந்த 25 வருடங்களாக 500 இற்கு மேற்பட்ட சுயாதீன ஆய்வு நிறுவனங்கள் 130 இற்கு மேற்பட்ட ஆய்வு நடைவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் இந்த வகை உணவுகள் பாதுகாப்பாது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஸ்பெயின் மற்றும் போத்துக்கல் ஆகிய இரு நாடுகளே தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த உணவுப்பொருட்கள் மீதான அச்சம் மக்களிடம் இன்னும் நீங்கவில்லை. மக்கள் மீதான பாதிப்புக்கள் ஒருபுறம் இருக்க, இயற்கையான தாவர இனங்கள் அழிந்துவிடும் என்ற அச்சங்களும் மேல் ஏழுந்துள்ளன. இருந்தபோதும் அதிகரிக்கும் மக்கள் தொகை குறைவடையும் விளைநிலங்களின் அளவு என்பன இந்த தொழில்நுட்பத்தை நோக்கி எல்லா நாடுகளையும் திரும்பி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version