பெருந்தோட்டத் தொழிற்றுறை: வேலை நேரம் அதிகரிப்பு,வேலை நாட்கள் குறைவு -வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிற்றுறை

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் வேலை நேரம் அதிகரித்துள்ளதோடு தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைந்துள்ளன.

25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் பல்வேறு நலன்களும் கம்பனியினரால் பறித்தெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சமகால போக்குகள் தொடர்பில் அதிகமான விமர்சனங்கள் இருந்து வருவது தெரிந்த விடயமாகும்.தொழிலாளர்களும், தொழிற்றுறையும் நெருக்கீடுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இச்சமூகம் அடையாளமிழக்கும் நிலைமைகளே வெளித்தெரிகின்றன.தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேலிக்கூத்தாகி இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமிடத்து தொழிலாளர்களுக்கு இருபத்தைந்து வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும் என்று நாம் கம்பனியினரை வலியுறுத்தி இருந்தோம். கம்பனியினர் இதனை ஏற்றுக் கொண்டதோடு  எமது மேலும் பல கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்திருந்த நிலையில் நிலைமைகள் இப்போது தலைகீழாகி இருக்கின்றன.

தற்போது  அதிகமான தோட்டங்களில் பெரும்பாலும்  12 நாட்களே வேலை வழங்கப்படும் நிலையில் தொழிலாளர்கள் மாதாந்தம் 12,000 ரூபாவையே வருமானமாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் முன்னதாக 700 ரூபா நாட்சம்பளமாக வழங்கப்பட்ட  நிலையில் 30 வேலை நாட்கள் மாதாந்தம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இதன் மூலம் தொழிலாளர்கள் 21,000 ரூபாவை அப்போது வருமானமாகப் பெற்றுக் கொண்டனர்.எனவே ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் பின்னர் தொழிலாளர்கள் மாதாந்தம் ஒன்பதாயிரம் ரூபாவை இழக்க வேண்டியேற்பட்டுள்ளது.அத்தோடு தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலைத் கொழுந்தின் அளவு 15 கிலோவில் இருந்து 22 கிலோவாக அதிகரிக்கப் பட்டிருக்கின்றது.

உரிய பசளை இல்லாது தேயிலைப் செடிகள் கருதி மடியும் நிலையில் உரியவாறு தேயிலைத் கொழுந்தினை பறிக்க முடியாத நிலை மேலெழுந்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும்.மேலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த நவன்கள் பலவற்றையும் கம்பெனிகள் இப்போது  பறித்தெடுத்துள்ளதோடு ஒரு இருண்ட யுகத்திற்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லவே முற்படுகின்றன.

இதேவேளை தோட்டக் காணிகளின் சுவீகரிப்பு நிலையானது தொழிலாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.இதனால் மேலெழும்பும் பாதக விளைவுகள் கொஞ்ச நஞ்சமல் தொழிற் சட்டங்கள் மற்றும் தொழில் உரிமைகள் என்பன கடுமையாக மீறப்பட்டு வருவதோடு ஒரு சமத்துவமற்ற போக்கினையும் தோட்டங்களில்அவதானிக்க முடிகின்றது.இது பெருந்தோட்டத் தேயிலைத் தொழிற்றுறைக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.

இவ்வாறாக பெருந்தோட்ட சமூகத்தினரின் நெருக்கீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மலையக அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனியாக இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.இத்தகையோர் மௌனத்தைச் களைத்து விட்டு தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த குரல் கொடுப்பது மிகவும் அவசியமாகும். வெற்றுக் கோஷங்களை விடுத்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்  என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad பெருந்தோட்டத் தொழிற்றுறை: வேலை நேரம் அதிகரிப்பு,வேலை நாட்கள் குறைவு -வடிவேல் சுரேஷ்