இலங்கையில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. 

இலங்கை முழுவதிலும் உள்ள 42 எச்.ஐ.வி மருத்துவ முகாம்களில், 2,350 தொற்றாளர்கள் சிகிச்சைகளை பெற்று வருவதாக   தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை முழுவதும் 4686 வரையான எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 350 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 52 இளைஞர், யுவதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021ம் ஆண்டு 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 25 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அந்த தொகை இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 53ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்குள்ளான 30 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் யுவதிகள் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த ஆண்டின் எதிர்வரும் சில மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.