திருகோணமலை மாவட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம் 

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்

காலங்காலமாக தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த முனைகின்ற போது, சட்டத்துக்கு முரணாக மாற்றம் ஏற்படுகிறது. இதுவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. 

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியில் வசித்து வரும் வயது 38 உடைய (பெயர் குறிப்பிட விரும்பாத) நபர் தனது வீட்டு பிரதான வீதியில் உள்ள மதிலில் கடந்த கால நாடாளுமன்ற தேர்தலில் சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக கூறும் போது, “நிறைய போஸ்டர்களை மதிலில் ஒட்டி விட்டு சென்றுட்டாங்க.  இரவில் இதனை அகற்றுவதும் கடினம்” எனக் கூறினார்.

காவல்துறையினர் அரசின் சட்ட திட்டத்துக்கு அமைய இதனைக் கறுப்பு நிற மையைக் கொண்டு அகற்றியதால், மதில் அசுத்தமடைந்ததாக தெரிவித்தார். நாட்டின் தேர்தல் சட்டம் இருந்தாலும், இதனை மீறி வேட்பாளர்கள் செயற்படுகிறனர் .

வன்முறைச் சம்பவங்களும் இதனால் பதிவாகிறது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மூதூர் தொகுதி, திருகோணமலைத் தொகுதி, சேருவில தொகுதி என மூன்று தொகுதிகள் காணப்படுகிறன.  இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தேர்தல் காலத்தில் பதிவாகின. அரச சொத்துக்களை பயன்படுத்தல், கட்சிகளுக்கு இடையே சண்டை, பொது இடங்களில் விளம்பரப் பலகை வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகிய நிலையில், தேர்தல் திணைக்களம் இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் சொல்லப்பட்டிருந்தது.

இறுதி நேரத்தில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சுவரொட்டிகள் கறுப்பு நிற மைகளை கொண்டு அகற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் வன்முறைச் சம்பவங்கள் மறைமுகமாக நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

கிண்ணியாவை சமூக ஆர்வலரான சேர்ந்த எம்.எம்.மஹ்தி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் தேர்தல் சட்டத் திருத்தங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். சட்டத்தை மதிக்காது நடந்தால், உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்தது” என்றார். தங்கள் வாக்குகளை அதிகரிப்பதற்காகவே வன்முறைச் சம்பவங்கள்  அதிகம் ஏற்படுத்தப்படுகின்றன.

மூதூர் பகுதியினைச் சேர்ந்த பொது மகனான ஒருவர் (வயது49) இவ்வாறு குறிப்பிடுகிறார்; “கடந்த தேர்தல் காலத்தின் போது எங்களுடைய வீட்டின் சுவரில் சமகிஜனபலய வேட்பாளரின் விருப்பு இலக்கம், சின்னம் என்பனவற்றை பெயின்டினால் வரைந்து சென்றதையடுத்து, காவல்துறையினர் அதனை கறுப்புநிற மையால் அகற்றியதால் அசுத்தமாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு பொதுமக்கள் சொத்துக்களையும் சேதப்படுத்துவதால், சாதாரணமாக தேர்தல் காலங்களில் வன்முறைகள் அதிகரிக்கிறன.

திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் அரசியல்கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என வேட்பாளர்களாக களமிறங்கியது மக்களின் விருப்பு வாக்குகளை பெறுவதற்காகவே. அரசியல் கட்சிகள், சுயேட்சை குழு வேட்பாளர்கள் பல்வேறு விதமான பிரயத்தனங்களை மேற்கொண்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், கடந்த கால தேர்தல்களின் போது சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2019 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் சில சம்பவங்கள் பதிவாகிய நிலையில் உள்ளன. எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் போது மொத்தமாக 15,992,096 வாக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில், 13,387,951(83.72%)வீதமான வாக்களிப்பு இடம் பெற்றுள்ளது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) தேர்தல் அவதானிப்பு அறிக்கையின் படி திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்னர் ஆறு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. தாக்குதல் சம்பவம் – 01,அரச வாகனங்கள் முறைகேடாக பாவித்தமை – 03, தீக்கிரையாக்கல் – 01, அரச அதிகாரியின் பகிரங்க அரசியல் ஈடுபாடு – 01 என வன் முறைகள் பதிவாகியுள்ளது

மேலும் சிறிய சம்பவங்களாக சட்ட முரணான பிரச்சாரம் – 01, சட்ட முரணான சுவரொட்டிகள் பதாகைகள் – 03,தேர்தல் குற்றங்கள் – 05 என ஒன்பது சம்பவங்கள் இனங்காணப்பட்டன.  குறிப்பாக வன்முறைச் சம்பவங்களாக தாக்குதல், இலஞ்சம், சட்ட முரணான பிரச்சாரம், முரணான சுவரொட்டிகள், அச்சுறுத்தல், பொருட்களை பகிர்தல்  உள்ளிட்ட பல குற்றங்கள் தேர்தல் காலங்களில் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் தினத்தன்றும், வாக்களிப்பு முடிவுகளை அறிவித்த பின்பும்  பதிவாகின்றன. தேர்தலுக்கு பின்னரான காலத்தில் ஆதனச் சேதம் ஒரு சம்பவமாக இடம் பெற்றுள்ளது.

இது தவிர 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போதும் கூட வன்முறை இடம் பெற்றுள்ளதும், மேலும் குறித்த நிலையம் அறிக்கையூடாக சுட்டிக் காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 57 சம்பவங்களும் , தேர்தல் தினத்தன்று 08 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் அவர்களிடம் வினவிய போது, “தேர்தல்கால வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறுவதற்கு பிரதான காரணம் போட்டித் தன்மையும் மற்றும் விருப்பு வாக்கு முறை ஆகும். அபேட்சகர்கள் தங்களது ஆதரவுகளையும், செல்வாக்குகளையும் கூட்டுவதற்காக இவ்வாறான சம்பவ நிலை ஏற்படுகிறது ” என தெரிவித்தார்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 2020ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்தமாக  (24.07.2020) வரை 101 தேர்தல் முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றுள்ளதாக உதவி தெரிவத்தாட்சி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கிறன.

இதில் 68 முறைப்பாடுகள் காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதில் சிறிய அளவிலான முறைப்பாடுகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றிற்கு காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  என தெரிவிக்கப்படுகிறது.  அரச சொத்துக்களைத் தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தல் உள்ளிட்ட சிறிய ரக முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

தேர்தல் சட்டங்கள் எழுத்துருவில் மட்டுமே உள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது போதாது. புதிய வேட்பாளர் அறிமுகம் என்பது மிகவும் கஷ்டமாகவுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டம் உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தைப் பாதுகாக்க காவல் துறையினர், உரிய தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு போதிய தெளிவின்மை உள்ளது.

ஆளுங்கட்சிகள் இறுதி நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை சூறையாட நினைக்கிறார்கள். தான் சுவரொட்டிகளை பெரியளவில் பயன்படுத்தவில்லை சட்டத்தை மதிக்கிறேன். வன்முறைகளை தடுக்கவே வழிசமைக்கிறோம். எந்தவொரு இடையூறும் இல்லாமல் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் பிரச்சார பணிகள் முன்னெடுக்கப்படுகிறன என  தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

ஜனநாயக முறையான தேர்தல் இடம்பெற வேண்டும் என பேசப்பட்டாலும் கூட, அது நடை முறையில் சாத்தியமாகுவதில்லை. தேர்தல் காலங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அதனை அவதானிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன. இது தவிர, சர்வதேச கண்காணிப்பாளர்களும் களமிறக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் விகிதாசார தேர்தல் முறையும் காணப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைகள் மறுசீரமைப்பு  தொடர்பில் நிபுணர்கள் குழு அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் வன்முறையற்ற தேர்தலாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை .

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக திருகோணமலை தேர்தல்கள் அலுவலகத்துக்கு  கோரப்பட்ட 2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்முறைச் சம்பவங்களின் பிரகாரம்,  வன்முறைகள் – 2, தேர்தல் சட்டத்தை மீறியமை – 57, ஏனையவை – 21 என மொத்தமாக 80 சம்பவங்கள் பதிவாகியதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (கிழக்கு மாகாணம்) எஸ்.சுதாகரன் கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இச் சம்பவங்கள் தொடர்பில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னரே தபால் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தகவல் கிடைக்கப் பெற்றது.

எது எப்படியாக இருந்தாலும், தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாக வன்முறைச் சம்பவங்களைக் குறைப்பது தொடர்பாக எதிர்பார்க்கப்பட்டாலும், காலத்துக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது சம்பவங்கள் நிகழ்வது வழமையாகி விட்டன.

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என பல தேர்தல்கள் காலங்காலமாக நடத்தப்பட்டு ஆட்சி இடம் பெறுகிறது. விகிதாசார தேர்தல் முறை எதிர்காலத்தில் மாகாண சபைக்காக நடை பெறுமா என வாதப் பிரதி வாதங்களும் நிலவுகின்றன. அதே போன்று தான் வட்டார முறையும் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது அமுலில் இருந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக வன்முறைகளைத் தூண்டுவதாக தேர்தல் காலங்களில் காணப்படுகிறது. அபேட்சகர்கள் தங்களது வாக்குகளை அதிகரிப்பதற்காக தேர்தலின் போது பணம், மதுபானம் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி தங்களை தாங்களே பலப்படுத்த முயற்சிக்கின்றனர்.  இதனால் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

இந்த அரசாங்கம் மூலம் புதிய தேர்தல் முறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், அது தேர்தல் காலத்தின் போது தேர்தலுக்கு முன்னும், அதன் பிற்பாடும் வன்முறைக்கு தூண்டுமா? என்பதிலும் சந்தேகம் எழுகின்றது.

Tamil News