யாழ்ப்பாணம் போதைப்பொருள் பேரழிவின் பிடியில்-பி.மாணிக்கவாசகம்

கல்விக்குப் பெயர் பெற்றிருந்த யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருள் பாவனையிலும் பெயர் பெற்றிருக்கின்றது. அதிலும் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் பரவியிருக்கின்றது.

இது பற்றிய தகவல்களை யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர் பிரணவன் ஆகியோர் வெளியிட்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை. சமூகக் கட்டுப்பாடுகள் நன்னடத்தை என்பவற்றுக்குப் பெயர் பெற்றிருந்த யாழ் குடாநாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைச் சீரழிவு இடம்பெற்று வருவது தமிழ்ச் சமூகத்திற்கு நேரிட்டுள்ள பெருங்கேடு என்பதில் சந்தேகமில்லை.

பிரபல யாழ் நகர பாடசாலையொன்றில் மயங்கி வீழ்ந்த 3 மாணவர்கள் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. இந்த விடயம் மருத்துவமனை வட்டாரங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகம் தமது நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக அந்தத் தகவலையும் சம்பந்தப்பட்ட விடயங்களையும் மறைத்துவிட்டது. இந்த நடவஎக்கை கொலைக்குச் சமமானது எனக் குறிப்பிட்ட மருத்துவ வட்டாரங்கள் கண்டித்திருந்தன.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. யாழ் நகரப் பாடசாலை மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொளை உடைமையில் வைத்திருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

மற்றுமொரு சம்பவத்தில் தாய் ஒருவர் தனது 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தியிருந்தமையைக் கண்டறிந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் அந்த சிறுமியை நீதிமன்றத உத்தரவைப் பெற்று சிறுவர் இல்லாம் ஒன்றில் இணைத்துப் பாதுகாத்துள்ளனர். அந்த சிறுமியின் பெற்றோர்கள் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலான நீதிமன்ற வழக்குகளுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

போதைப்பொருள் பாவனை வெறுமனே பாவனையுடன் நிற்கவில்லை. போதைப்பொருளை நுகர்ந்தவர்களை போதைப்பொருள் பலிகொள்ளவும் செய்திருக்கின்றது. இந்த நிலைமை யாழ் சமூகத்திற்கு ஏள்பட்டுள்ள மிக மோசமான பாதிப்பாகும்.

போதைப்பொருள் பாவனை கடந்த ஆண்டிலும் யாழ்ப்பாணத்தில் இனம் காணப்பட்டிருந்தது. அதேவேளை, கடந்த ஆண்டிலும் பார்க்க அது இந்த வருடம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடம் யுhழ் சிறைச்சாலையில் போதைப்பொருளுக்கு 10 பெண்கள் உட்பட 491 பேர் அடிமையாகி இருந்ததாகவும் ஆனால் இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது. அத்துட்ன இந்த வருடம் 10 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்திருப்பதாகவும் டாக்டர் சத்திதயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளை ஊசி மூலம் இரத்த நாளங்களில் செலுத்துகின்ற முறையைப் பயன்படுத்தும்போதும் மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. அதேவேளை, அடையாளம் காணப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் 185 பேர் சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் 300க்கும் மேற்பட்டவர்கள் யாழ் போதான மருத்துவமனை விடுதிகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்றும் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.

போதைப்பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருப்பதைப்பற்றி குறிபிபட்டுள்ள அவர், இந்த நிலைமை குறித்து பாடசாலை அதிபர்களும் அதேவேளை பெற்றோர்களும் கூடிய கரிசனையும் கவனமும் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையின் கேடு குறித்து பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை குறிப்பாக ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரி;த்துள்ளதையடுத்து, போதைப்பொருள் பாவனை, அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கையாள்வது தொடர்பில் யாழ் போதனா மருத்துவமனையில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே இந்தத் தகவல்களை டாக்டர் சத்தியமூர்த்தி வெளியிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதில் பொலிசாரும் படையினரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் தொடர்ச்சியாகக் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப் பொருட்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கேரள கஞ்சா பொதிகளாகவும் மூடை மூடையகவும் நாட்டிற்குள் கடத்தி வரப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் இவற்றைக் கடற்படையினர் கைப்பற்றுவது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த 13 வருட காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படிப்படியாகத் தீவிரமடைந்திருக்கின்றது. ஆனால் அதன் அடிவேரைக் கண்டுபிடிக்கவோ அதனை முற்றாகத் தடுத்து நிறுத்தவோ படையினரால் முடியாமல் இருக்கின்றது.

இந்த வகையில் 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் திகதி வரையில் மொத்தமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 152.91 கிலோ கிராம் ஹெரோயினைக் கடற்படையினர் கைப்பற்றி இருக்கின்றனர். இவற்றில் 2021 ஆம் ஆண்டிலேயே இதுவரையில் அதிக அளவிலான 1268.85 கிலோ கிராம் ஹெரோயின் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டிருக்கின்றது. அத்துடன் 2018 ஆம் ஆண்டு .11 கிலோ கிராமில் தொடங்கி, இதுவரையில 1081.35 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினரின் புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 27 ஆயிரத்து 357.70 கிலோ கிராம் கேரள கஞ்சா நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் புள்ளிவிபரத் தகவல் கூறுகின்றது. இதைவிட உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட 11 ஆயிரத்து 26.91 கிலோ கிராம் கஞ்சாவும் படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் வடபகுதியில் குறிப்பாக யாழ் குடாநாட்டிலேயே அதிக அளவில் காணப்பட்டிருக்கின்றது. தலைநகரப் பாடசாலைகளிலும் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்ற போதிலும் வடக்கு நிலைமையைப் போன்று அங்கு மோசமானதாகத் தெரியவில்லை.

யுத்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக அரச தரப்பில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் வடக்கிலோ கிழக்கிலோ அக்காலப்பகுதியில் எவரும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படவில்லை. போதைப்பொருளை உட்கொண்டவர்கள் என்று எவரும் கண்டறியப்படவுமில்லை. போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் 2011 ஆம் ஆண்டிலிருந்தே வடபகுதியில் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இந்த போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் பேரினவாத ஆட்சியாளர்களினால் திட்டமிட்ட வகையில் வடபகுதியில் பரப்பப்பட்டிருப்பதாக ஒரு சந்தேகம் நிலவுகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரசு விடுதலைப்புலிகளை மௌனிக்கச் செய்துள்ள போதிலும், அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்து விடுவார்கள் என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வந்துள்ளனர்.

அதேவேளை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அவ்வாறாக விடுதலைப்புலிகளுக்கு உயிரூட்டுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக படையினர் அவ்வப்போது செய்திகளைக் கசியவிட்டு வந்துள்ளனர். அத்துடன் அது தொடர்பில் சிலரைக் கைது செய்தும் உள்ளனர்.

ஹேரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களான மாணவர்கள், குறிப்பாக கல்விப் பொதுத் தராதர சாதாரண வகுப்பு மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்கள் தங்களது கற்கின்ற சக்தியை அதிகரிப்பதற்கு ஹெரோயின் போதைப்பொருள் பாவனை ஊக்கமளித்து உதவியாக இருப்பதாகக் கருதிச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையில் போதைப்பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்குரிய கபடத்தனமானதோர் உத்தியாகவே தெரிகின்றது.

பேரினவாதிகளின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே  மாணவர்கள் சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது. திட்டமிட்ட தரப்படுத்தல் கல்விமுறையின் மூலம் தமிழ் மக்கள் கல்வித்துறை முன்னேற்றத்தைப் பேரின அரசியல்வாதிகள் தடுத்திருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக நாடுகளின் உதவிகயோடு நசுக்கி சின்னாபின்னமாக்கியவர்கள் தமக்கான அரசியல் அதிகார உரிமை தொடர்பில் தமிழ் மக்கள் கொள்கை ரீதியாகக் மனதளவில் கொண்டுள்ள கருத்தியலை அடியோடு இல்லாமற் செய்வதற்காக இளந்தலைமுறையினரை செயலற்றவர்களாக்கும் ஒரு நடவடிக்கையாகவே போதைப் பொருள் பாவனை பரப்பப்பட்டிருக்கின்றதோ என்றும் சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

எது எப்படியாயினும் தமிழ் சிறார்களின் எதிர்காலத்தை சூனியமாக்க வல்ல போதைப்பொருள் பாவனை ,குறித்து தமிழ் மக்கள் சமூக மட்டத்தில் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். போதைப்பொருள் பாவனை என்பது அரசியல் கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டாலும், அது உண்மையில் சமூக மட்டத்தில் கேடு விளைவிக்கின்ற ஒரு பயங்கரமான நடவடிக்கையாகும். இதற்கு அரசியல் ரீதியாக முடிவு காண்பது எந்த வகையிலும் சாத்தியமாகக் கூடும் என்று கூறுவதற்கில்லை.

தெளிவான சிந்தனையும் நற்பழக்க வழக்கங்களும் கொண்டுள்ளவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கான ஆவலையோ விருப்பத்தையோ ஏற்படுத்திவிட முடியாது. எனவே நன்னெறி வழியிலான ஒழுக்கசீலர்களாக சிறுவர்களும் மாணவர்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு சமூக மட்டத்திலான பாடசாலைகள், ஆலயங்கள் ஊடாகவும், நன்னெறிகளைப் போதிக்கின்ற கலை கலாசார நிகழ்வுகளின் ஊடாகவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இதற்கு சமூக மட்டத்திலான அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி இதற்கான செயலுறுதி மொழியை எடுத்து, ஒன்றிணைந்த ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட முன்வர வேண்டும்.