கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா – சீன உறவாடல், உலகப் பிரச்சினையாகத் தலைதூக்கியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது.

அமெரிக்காவில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அரசத் தலைவராக வந்தாலும், இந்தப் பிரச்சினை அமெரிக்காவின் தேசியப் பிரச்சினையாக முன்னுரிமை பெறும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அதேவேளை, கடன் பொறிக்குள் சிறீலங்காவைச் சிக்க வைப்பதன் மூலம் சீனா தனது வலுவாண்மையைச் சிறீலங்காவின் இறைமை மீது மேற்கொள்கிறது. இதனைத் தடுக்கும் ஆற்றலை சிறீலங்கா இழந்து நிற்பதால், ‘சீன அதிகாரம்’  உள்ள நாடாக சிறீலங்கா மாறிவிட்டது என்பது, அமெரிக்காவின் சிறீலங்கா குறித்த தெளிவான விளக்கமாக உள்ளது.

இவ்விடத்தில் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவுக்கு ஈழத்தமிழர்களின் கடற்பலத்தை ஒடுக்க உதவியதன் உலக விளைவாகவே இன்று சிறீலங்கா எந்த நாடுகளையும் உலகச் சட்டங்களையும் பொருட்படுத்தாது, சீனாவுடன் ‘ஆசிய நாடுகளுக்கு முன்னுரிமை’ என்னும் கொள்கை உருவாக்கல் மூலம் சார்ந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பாதுகாப்பான கடலாக இந்துமா கடலைப் பேணுவதற்கு சிறீலங்காவும் இந்தோ – பசுபிக் கடற் பாதுகாப்புக்கான அமெரிக்க திட்டங்களில் பங்காளராக வேண்டும் என்பது, அமெரிக்காவின் இன்றைய அழைப்பாக உள்ளது. இந்த அழைப்பைச் சிறீலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா, தனது சிறீலங்காவுக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. இந்த மென்மைப் போக்கு சிறீலங்கா தொடர்ந்தும் அனைத்துலக சட்டங்களுக்கோ அல்லது அனைத்துலக முறைமைகளுக்கோ கட்டுப்படாத அரசாகச் செயற்படுவதற்கான ஊக்கத்தையே சிறீலங்காவுக்கு அளிக்கிறது.

‘அயலகத்துக்கு முதலிடம்’ என்னும் வெளிவிவகாரக் கொள்கைத் திட்டமிடல் மூலம் இந்தியாவும் கடன்களை வழங்கியும், இராணுவப் பயிற்சிகளை அளித்தும் மென்மையான போக்கில் சிறீலங்காவின் பங்காளிகளாகத் தொடர்வதன் மூலமே இந்துமா கடல் மீதான தனது நிலை கொள்ளலை உறுதி செய்ய முயற்சிக்கிறது.

ஆயினும் வரலாற்றில் ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாப்புற்ற வேளைகளிலேயே, சீன ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடிந்தது என்ற உண்மையை இந்தியா உணர வேண்டும். யாழ்ப்பாண அரசின் தோற்றம் என்பது இந்துமா கடல் கடற் பாதுகாப்பைச் சோழர்கள், பாண்டியர்கள் இழந்ததின் பின்னணியில் ஏற்பட்டது என்பதையும், யாழ்ப்பாண அரசை 17 ஆண்டுகள் மட்டும் ஆண்ட சிங்கள சார்பான செண்பகப் பெருமாள் கைப்பற்றிய பொழுதும்,  தமிழரசனான அழகக்கோனின் கம்பஹா அரசின் வீழ்ச்சியின் பொழுதும், அக்காலத்திலேயே சீனக் கடற்படை இலங்கை கடல் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் இந்நேரத்தில் இந்தியா எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்துமா கடலில் சமநிலையின்மையை ஏற்படுத்த உதவுங்கள்; நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்ற கோரிக்கைகள் போராட்டக் காலங்களில் முன்வைக்கப்பட்ட நேரங்களிலும், ஈழத்தமிழர்களின் தலைமை உலக அமைதியையும் இந்தியத் துணைக் கண்டத்து அமைதியையும் முன்னிலைப்படுத்தி, தங்களுக்கு நன்மை வரும் என்ற நிலையிலும் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள் என்பது இன்றைய சமகால வரலாறு.

இன்று இந்துமா கடலில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும், இந்தியாவும் எதிர்பார்க்கும் இந்துமா கடல் அமைதித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதாக இருந்தால், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாப்பு வழி அவர்களின் கடலான தென்னிந்திய இந்துமா கடல் மேலான அவர்களின் இறைமையும் அவர்களால் ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுதல் அவசியமாகிறது.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க இராஜங்க செயலாளருக்கான கடிதம் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான நிலைமாற்றக்கால நீதியையும், மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கலையும் ஆதாரபூர்வமாக வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு உலக அமைப்புக்கள் பலவும் நிலைமாற்ற நீதியையும் நிவாரணங்களையும் மனித உரிமைப் பாதுகாப்பையும் நல்லாட்சியையும் ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் இக்காலத்தில், இதற்கான உரையாடல்களை ஈழத்தமிழர்களுடன் ஈழத்திலும் அவர்கள் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலும் உலகநாடுகள் நடாத்தி அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் ஏற்பதே இலங்கை சார்ந்த இந்துமா கடல் அமைதிப்பிர தேசமாகத் தொடர்வதற்கான சிறந்த வழிகளைத் தோற்றுவிக்கும்.

இதற்கான அரசியல் உரையாடல்களை முன்னெடுக்கக் கூடிய ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட அரசியல் கட்டமைப்பு ஒன்றை உடன் உருவாக்க வேண்டியது புலம்பெயர் தமிழரின் இன்றைய இலக்காக உள்ளது.