சிறுதொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்ந்த உறவுகள் உதவவேண்டும்! | பொருளாதார ஆலோசகர் செல்வின் செவ்வி

இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி தமிழர் தாயகப் பகுதிகளிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்த நிலையை எம்மவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளமுடியும?; புலம்பெயர்ந்த உறவுகள் இவ்விடயத்தில் எந்த வகையில் உதவ முடியும்? போன்ற விடயங்கள் தொடர்பில் பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலின் சுருக்கம் அதன் முக்கியத்துவம் கருதி ‘இலக்கு’ வாசகர்களுக்குத் தருகிறோம்.

கேள்வி: தற்போதைய பொருளாதார நெருக்கடி வடக்கு கிழக்கில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது?

பதில்: பெரும் நெருக்கடி ஒன்று எதிர்கொள்ளப்படுகின்றது. மக்கள் வறுமையால் கஸ்;டப்படுகின்றார்கள். இந்த நெருக்கடி எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பது மக்களுக்குத் தெரியாதுள்ளது. வெறுமனே எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினைகள்தான் நகரப்பகுதிகளில் முதன்மைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. ஆனால், உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி அவற்றின் விலையேற்றம் என்பன ஒரு புறம் மக்களைத் தாக்குகின்றது. மறுபுறம் எரிபொருள் இல்லாமையால் தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்படுவதுடன், அவர்களுடைய கைத்தொழில்கள் பலவும் மூடப்படுகின்றன. இந்த இரண்டு பிரச்சினைகளும் பெரும் நெருக்கடியைக் குடும்பங்கள் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்திக்கொண்டே செல்கின்றது.

அதேவேளையில் சமூகச் சீரழிவுகள், குடும்ப வன்முறைகள் போன்றன இயல்பான ஒரு விடயமாக மாறிவிடுமோ என்ற ஒரு அச்சமும் உருவாகியிருக்கின்றது. இதேவேளையில் எல்லாவிதமான மதுபானக் கடைகளும் முழுமையாகவே திறந்திருக்கின்றன. ஒருபுறம் வேலையின்மை, வறுமை என்பனவற்றுடன் குறைந்த வருமானத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த விலைவாசியுடன் மக்கள் போராடிக்கொண்டிருக்கையில் இந்த மதுபானக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. இரவு 9.00, 10 மணி வரையில் இவை திறந்திருக்கின்றன. இது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அரசாங்கம் மதுபான விற்பனையின் மூலம் வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காக இதனை அனுமதிக்கின்றது. ஆனால், பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ள நிலையில் இதனை அனுமதிப்பது குடும்பங்களுக்குள் குழப்பங்களை, வன்முறைகளை அதிகரிப்பதாக இருக்கும்.

இதனைவிட வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் பாராபட்சமான செயற்பாடுகளினாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இப்போது எமக்கு கிடைக்கும் உணவு கடந்த கால விளைச்சலின் மூலம் கிடைத்த விளைவுதான். விரைவில் அவற்றுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

வீட்டுத் தோட்டம் செய்வதற்காக மக்கள் பெருமளவுக்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள். ஆனால், போதிய விதைகள் இல்லை. இது ஒரு பாரிய பிரச்சினையாகவுள்ளது. அதனைவிட வடபகுதியின் விவசாயம், ஏற்று நீர்ப்பாசன விவசாயம். அதாவது கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சுவது. இதற்கு மின்சாரம் அல்லது எரிபொருள் தேவை. எரிபொருளுக்கான தட்டுப்பாடும் கள்ளச்சந்தையில் அவை அதிக விலைக்கு விற்கப்படுவதும் வாழை போன்றவற்றுக்குத் தண்ணீர் இறைப்பது என்பது மிகவும் சிரமமானதாக மாறியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் இறைப்பதைக்கூட அவர்கள் நிறுத்திவிட்டார்கள். இதனால், இந்தப் பயிர்ச்செய்கையின் எதிர்காலம் நாசமாகப்போகப்போகின்றது.

கேள்வி: இந்த நெருக்கடியை எதிர்கொள்ளத்தக்கவகையில் எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன ?

பதில்: கட்டம் கட்டமாக சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இவை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா எனக் கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். இளைய தலைமுறையினர் சிலர் இதில் ஈடுபடுகின்றார்கள். வீட்டுத் தோட்டங்கள் அல்லது உணவு உற்பத்திப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்துவதற்காக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இதனை அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். இதனை ஓரு ஆரோக்கியமான விடயமாகப் பார்த்தாலும், இவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

கேள்வி: விவசாயம், கைத்தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் பெரிதாக பேசப்படுகின்றது. கால்நடை வளர்ப்புத்துறையில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது?

பதில்: கால்நடைகளுக்கான தீவனம் பற்றாக்குறையாக மாறிக்கொண்டிருக்கின்றது. கால்நடை, கோழி வளர்ப்பவர்கள் இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றார்கள். இதனால் முட்டை விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்திருக்கின்றது. சாதாரண மக்களின் வருமானத்தில் இவற்றை வாங்க முடியாதளவுக்கு இதன் விலை ஏற்றம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. மறுபுறம் கொள்வனவு குறையும்போது தொழில் வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால், கால்நடைகளை வெளியே விடமுடியாத நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மேய்ச்சல் தரை என்று ஒரு பகுதி வரையறுக்கப்படுவதாக இல்லை. இதனால், கால்நடைகளுக்கு உணவுப் பிரச்சினை உருவாகின்றது.

கேள்வி: வடக்கு கிழக்கில் மீன்பிடித்துறை எவ்வாறுள்ளது?

பதில்: மீனவர்களுக்கும் எரிபொருள் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அவர்கள் மூன்று நான்கு நாட்கள் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொண்டு சென்றால், ஒரு நாளுக்கு கூட அது போதுமானதாக இருக்காது. இனால் கடற்றொழிலாளர்கள் வாரத்துக்கு ஒருதடவைதான் மீன்பிடிக்கச் செல்ல முடிகின்றது. இதனால், மீன்பிடியின் அளவு குறைகின்றது. இதனால், மீனின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது கருவாடு போடுவது உள்ளிட்ட கடற்றொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மீன்பிடியாளர்களுக்கு எரிபொருள்களை கிரமமாக வழங்குவதற்கான ஏற்பாடு அவசியம். இந்த நிலையால் அவர்களுடைய வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: சிறுகைத்தொழிலாளர்களின் நிலை எவ்வாறுள்ளது?

பதில்: சிறுகைத்தொழிலளர்களும் தற்போதைய நிலைமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிறிய சிறிய இயந்திரங்கள் இயங்குவதற்கு மின்சாரம், எரிபொருள் என்பன இல்லாதிருப்பது பெரிய போராட்டமாக இருக்கின்றது. இரும்புத் தொழில், தச்சுத் தொழில் என்பன கூட மின்சாரம் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான மாற்று ஏற்பாடுகளும் இல்லாத நிலை.

இவை தொடர்பில் அரசாங்கம் எதுவும் செய்யாதிருக்கும் நிலையில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள புத்திஜீவிகள் கூட இவ்விடயங்கள் தொடர்பில் பேசுவதாக இல்லை. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து இவை தொடர்பில் ஆராய வேண்டும். இவற்றுக்கு என்ன செய்யலாம் என்பதையிட்டு திட்டமிடவேண்டும்.

கேள்வி: இந்தப்பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளத்தக்கவகையில் புலம்பெயர்ந்த உறவுகள் எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியும்?

பதில்: இந்த இடத்தில் புலம்பெயர்ந்த உறவுகள் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.

ஒன்று – உணவு நெருக்கடி எதிர்கொள்ளப்படும் நிலையில் வெறுமனே பணம் அனுப்புவதைவிட, உணவு உற்பத்தியில் – வீட்டுத் தோட்டம் போன்றவற்றில் ஈடுபடுமாறு அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இரண்டு – தாம் பணம் அனுப்புபவர்களுக்கு அவர்கள் சொல்லவேண்டும் – அளவுக்கு அதிகமாக எரிபொருட்களை வாங்கி வாகனங்களில் ஓடித்திரிய வேண்டாம் என்று.

மூன்றாவது – சிறுதொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்கு அவர்கள் உதவ வேண்டும். சிறுதொழில் முயற்சியாளர்கள் முறிந்துபோனால் அவர்கள் மீள எழுவதற்கு மிகவும் சிரப்படுவார்கள். அதனால், நாம் சார்ந்த சமூகத்தில் இருக்கக்கூடிய சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நான்காவது – இந்த சிறுதொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை எமது சமூகத்திலிருந்தே உற்பத்தி செய்யக்கூடியளவுக்கு நாம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இவற்றுக்காக தென்னிலங்கையை எதிர்பார்த்திருப்பது நெருக்கடியை அதிகரிக்கலாம்.

உதாரணமாக இங்கு நல்லெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அதற்குத் தேவையான எள் தென்னிலங்கையிலிருந்தே வருகின்றது. போக்குவரத்து தடைப்படுமானால் நல்லெண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்படும். இது போன்ற பல பிரச்சினைகள் வடபகுதியில் காணப்படுகின்றன. இதனையிட்டும் புலம்பெயர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியலில் பாதுகாப்பான நிலை ஒன்று ஏற்படும்போது தமது முதலீடுகளை கைத்தொழில்களில் செய்வதற்கு புலம்பெயர்ந்த உறவுகள் முன்வர வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தாம் வாழும் நாடுகளிலேயே அவர்கள் இப்போதே ஆரம்பிக்கலாம். அவர்கள் வாழும் நாடுகளின் அரசாங்கத்தின் ஊடாக இந்த முதலீடுகள் வருவது பாதுகாப்பானதாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துகொள்ளலாம்.

இந்த நேர்காணலை முழுமையாக யூரிப்பில் காணலாம்.