திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-வ. கௌதமன்

181 Views

228798313 1390222918016779 3097800430237896709 n திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-வ. கௌதமன்

“திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” என தமிழ்ப் பேரரசு கட்சி “சோழன் குடில்” பொதுச் செயலாளர் வ. கௌதமன், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா வெ.இறையன்புவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா வெ.இறையன்புக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“பெரும் மரியாதைக்குரிய  தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கு வணக்கம்.

திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகச் சிறைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களுடைய தண்டனைக் காலம் முடிந்த நிலையிலும் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத ஒரு சூழலில் சிக்கி உளவியலாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

விடுதலை ஆவதற்கு தகுதியான அந்த 48 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு 30.07.2021 அன்று காவல்துறை கூடுதல் தலைவர் ஐயா செள.டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தேன். அதனைத் தங்கள் பார்வைக்கும் அனுப்பி இருந்தேன்.

ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  கோரிக்கை வைத்ததோடு மரியாதைக்குரிய அகதிகள் மறுவாழ்வு துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களிடமும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஐயா சிவராஜன் அவர்களிடமும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஐயா ஈஸ்வரமூர்த்தி அவர்களிடமும் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

27.07.2021 அன்று சென்னையிலிருந்து சென்றிருந்த,  மரியாதைக்குரிய அகதிகளுக்கான மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயசிந்தா லாரன்ஸ் அவர்கள் வெகு விரைவில்  உங்களது விடுதலை உறுதி ஆகும் என வாக்குறுதி கொடுத்தபடியால் நம்பிக்கை வைத்து அந்நேரத்தில் அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டார்கள்.

கிட்டத்தட்ட அவர்கள் வாக்குறுதி கொடுத்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட இதுவரை எந்தப் பதிலும் விடுதலைக்கான அறிவிப்பும் இல்லாதது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இதற்கு முன்பு அவர்கள் தங்களின் விடுதலைக்கான கோரிக்கையை வைத்துப் போராடிய ஓர் அறவழிப் போராட்டத்தின் மீது வழக்குப் பதிந்து அதற்காக 10.08.2021 (நேற்று) நீதிமன்றத்திற்கும் அழைத்துச் சென்றது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

ஒரு புறம் விடுதலை குறித்து பேசிக்கொண்டு இன்னொரு புறம் வழக்குத் தொடுத்திருப்பதைக் கசப்போடு எதிர்கொள்ளும் அவர்கள் மீண்டும் தங்களது  போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

மனதுக்குக் கவலை தரக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் அந்த 48 கைதிகளில் ஒருவரின் மனைவி தனது கணவர் விடுதலை ஆவதற்கான முகாந்திரமே இனி இல்லை என்று கூறி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

இதே பாஸ்போர்ட் வழக்கில் 2016இல் ஆறு நபர்களை விடுதலை செய்தது போன்று, அதே நடைமுறையினைப் பின்பற்றி 48 நபர்களையும் விடுதலை செய்வதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களோடு பேசி விடுதலைப் பெற்று அவர்கள் தங்களின் குடும்பத்தோடு  வாழ்வதற்கு  அழகானதொரு சூழலைத் தாங்கள் தாய் மனதோடு  உருவாக்கித் தரும்படி உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் அவர்கள் விடுதலை பெற்றாலும் அவர்கள் தங்கியிருக்கிற முகாமிலிருந்து அவர்களின் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடும் ஒரு சூழலை உருவாக்கினால் அதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply