Home Blog Page 1987

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு;ஒருவர் காயம்

இன்று (10) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைருக்கு காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மூன்றாவது நாளாகவும் விசாரணை;சிக்கித் தவிக்கும் சுவிஸ் தூதரக பணியாளர்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் (10) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று மாலை 5.30 மணிக்குச் சென்ற சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம், நேற்று அதிகாலை 2.30 வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.

சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, தூதரக பெண் அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

அவருக்கு பாலியல் வன்கொடுமை அல்லது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தூதரக பெண் அதிகாரியின் உளநல பாதிப்பு தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலக மனிதவுரிமைகள் நாள்

உலக மனித உரிமை நாள் இன்று. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவனால் விட்டுக்கொடுக்க முடியாத, உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் பத்தாம் தேதி, உலக மனித உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் பெற்றன.

முதல் பணியாக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது.

இந்தப் பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950 ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும். யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது.

மனிதனின் கவுரவத்தையும் அவனின் பிரிக்க முடியாத உரிமைகளை அரிந்து ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அளிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல. ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடம் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால், ஒருவரின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ஒரு குடிமகனின் மனித உரிமையைப் பறிக்க அந்த நாட்டின் அரசுக்குக்கூட அதிகாரம் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் உள்ளது. இவற்றை உலகுக்கு உறக்கச் சொல்லும் நாள்தான் உலக மனித உரிமை நாள்.

வாழ்வுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அனைவரும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை அம்சங்கள் ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள். இவற்றையே மனித உரிமை என்று சொல்கிறோம்.

நாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வுதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். நாடு, மொழி, ஜாதி, இனம் பொருளாதாரம் போன்ற எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒருவனுடைய இந்த உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதே உலக மனித உரிமை நாள்.

நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- சேமசிங்க

விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் பிரதமரின் தலைமையில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் நடைபெற்றுள்ளன என்றும் மேற்படி வங்கிகளிடமிருந்து உரிய அறிக்கைகள் கிடைத்ததும் அடுத்த வாரத்திற்குள் சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது மேலும் குறிப்பிடுகையில்:

கடந்த அரசாங்கத்தில் பொருத்தமான செயற்பாடுகள் காணப்படவில்லை. அதுவே கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

ஆனால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தேர்தல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தே அதிகாரத்திற்கு வந்துள்ளோம். நாம் அதைப் பின்பற்றுவோம்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எல்லோருமே அடுத்த ஐந்து வருடங்களுள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றைச் செயற்படுத்துவோம்.

இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் தலைமைத்துவங்களுடன் பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளோம்.

இதன் நோக்கமானது, எதிர்கால முதலீட்டுச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்காக இவ் வங்கிகளின் பொருளாதார நிலைமையை ஆராய்வதாகும்.அதன்படி அவர்கள் இவ்வாரத்தினுள் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள்.

சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே நாம் நாட்டம்கொண்டுள்ளோம் – மஹிந்த

சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொழும்பு போர்ட்சிட்டி கம்பனியும் இணைந்து நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு நேர்காணலொன்றை வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக கடலிலிருந்து நிறப்பப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அன்றையதினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டிய நிகழ்விற்காக அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமருடன் கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் சியூயுவானும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

‘சீனாவும், இலங்கையும் பலம் பொருந்திய நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்புறவு நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வலிமை வாய்ந்த அத்திவாரத்தை அமைத்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிவருகின்ற நீண்டகால ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மண்டலமும், பாதையும் செயற்திட்டத்திலான இலங்கையின் பங்கேற்பு ஒரு கடன்பொறிக்குச் சமனானது என்று மேற்குலகின் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. சீனாவின் ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பேரார்வம் மிக்க அந்த செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பை அவ்வாறு ஒரு கடன்பொறியாக நான் நினைக்கவில்லை.

‘அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பெறப்பட்ட கடன்களை இலங்கையினால் தெளிவாக மீளச்செலுத்த முடியும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. ஆனால் நாம் அதை மீளக்கட்டியெழுப்பும் போது கடனை மீளச்செலுத்துவது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

‘அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாகப் பரபரப்பாக்கியிருக்கின்றன. உண்மையில் அவர் சீனாவுடனான அந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பின்புலத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் அதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையினால் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி அதனைக் கூறவில்லை. முன்றைய அரசாங்கத்தைப் போலன்றி எமது அரசு பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார்.

‘இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில் அவற்றை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் ஒரு புதிய வர்த்தக மையமாக கொழும்புத் துறைமுக நகரம் தோன்றுவதை உறுதி செய்வதற்கு அந்தத் திட்டத்தை நிர்மாணிக்கும் சீனாவின் பணிகளுக்கு எனது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும். கொழும்பு துறைமுக நகரத்தின் முன்னுரிமைக் கொள்கைகளை அரசாங்க மட்டத்தில் துரிதப்படுத்தும் பணிகளை 2020 ஜனவரியிலிருந்து முன்னெடுக்கப்போவதாகவும் பிரதமர் ராஜபக்ஷ நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி

இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள் தாக்கம் செலுத்துகின்றன.

பழைய வரலாறு

10,000 ஆண்டுகளுக்கு முன் ஆறுகள் ஓடி செழுமையாக்கப்பட்ட நிலப்பரப்பான மத்திய கிழக்கில் விவசாயமும் அதனால் உருவான ஓரிடத்தில் வாழும் நாகரீகமும் ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரு பகுதி நிலமே பாலஸ்தீன் என்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்களை இன்றைய காலத்தில் அரேபியர்கள் என்கிறோம். இந்த அரேபியர்கள் மத்தியில் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான் யூத மதம். இவர்களின் கதையாடல்களில் இவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது மோசஸ் இவர்களை பாலஸ்தீனத்திற்கு நடத்தி சென்றார் என்பார்கள்.

2000 ஆண்டுகக்கு முன் ஆட்சி செய்த யூத அரசன் டேவிட் ஜெரூசலதத்தில் கட்டிய கோவில் யூதர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக தொடர்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் எழும்பிய ரோமாபுரி அரசின் கிறிஸ்தவ சிலுவைப்போர் காலத்தில் இக்கோவில் அழிக்கப்பட்டது. யூதர்களும் தொடர்ச்சியாக ஐரோப்பா எங்கும் பரவினார்கள்.

இதற்கு பின்னர் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்க பகுதிகளை ஏறக்குறைய 600 ஆண்டுகளாக 19ம் நூற்றாண்டு வரை ஆட்சிசெய்தது இஸ்லாமிய பேரரசான ஒட்டமான் பேரரசு. அப்பேரரசின் கீழ் கலைகள், அறிவியல் வளர்ச்சிகள் பற்றி ஆய்வாளர்கள் வியந்து பேசுவார்கள். ஒட்டமான் அரசின் கீழிருந்த ஐரோப்பிய பிரதேசங்கள் ஏற்கனவே கத்தோலிக்க மதத்தை பின்பற்றியவை. ஏறக்குறைய 500 ஆண்டுகளின் முன் இப்பிதேசங்களின் அரசர்கள் ஒட்டமான பேரரசுடன் தொடர்ந்து போர் செய்து போத்துக்கேய மற்றும் இஸ்பானிய பேரரசுகளை வளர்த்தார்கள். இக்காலத்திலேயே ஐரோப்பாவில் யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான இனவாத கருத்துக்கள் வளர்ந்தன.

தொடர்ந்து பிரித்தானிய பேரரசு உட்பட ஐரோப்பாவில் வளர்ந்த பேரரசுகள் தான் உலகெங்கும் காலனிகளை உருவாக்கினார்கள். இன்று நாம் காலனிய காலம் என்று அறிந்திருக்கும் காலத்தை இந்த ஐரோப்பிய பேரரசுகள் ஆரம்பித்து வைத்தன. இந்த காலனிய காலத்தின் இறுதியில், அடுத்தடுத்து 30 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்கள்தான் இன்றைய ஐநாவையும் உலக ஒழுங்கையும் நிர்ணயித்தவை.

முதலாம் உலகப்போரும் சியோனிஸ்டுகள் குடியேற்றமும் பலநூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் அங்கு அவர்கள் மேல் காட்டப்பட்ட இனவாதத்தால் உலகளாவிய் சியோனிச இயக்கம் ஒன்றை உருவாக்கி தமது பூர்வ நிலமாக அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தை மீண்டும் கற்பனை செய்ய தொடங்கினார்கள்.

செல்வந்தர்களான யூதர்கள், வரலாற்று பாலஸ்தீனம் என்று இன்று அழைக்கப்படும் பாலஸ்தீனத்தில் நிலங்கள் வாங்கி அங்கு யூதர்களை குடியேற்னார்கள். படத்தில் வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகளே இவ்வாறு யூதர்கள் குடியேறிய பகுதிகள். முதலாம் உலக போரின் போது உலகிலேயே பலம் மிக்க பேரரசாக இருந்த பிரித்தானிய பேரசு இந்த சியோனிச கனவுக்கு ஆதரவு வழங்கி பாலஸ்தீனிய பிரச்சனைக்கு வித்திட்டது என்று சொல்வதும் பிழையாகாது. முதலாம் உலக போரின் இறுதியில், 1917இல், பிரித்தானியா ஒட்டமான் பேரசின் கீழிருந்த பாலஸ்தீன நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இக்காலத்திலேயே பிரித்தானியா சியோனிச கனவுக்கு ஆதரவு வழங்கும் “பல்ஃவோர்” (Balfour) பிரகடனத்தை செய்தது.

nnn பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

பிரித்தானியா பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த குறுகிய காலத்தில், அதன் சியோனிச திட்டத்தை எதிர்த்து பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்களின் ஆயதப்போராட்டத்தை சிறுக சிறுக ஆரம்பித்தார்கள். அரேபிய போராட்டக்காரர்களுக்கு எதிராக யூதர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா தனது இராணுவத்தை இயக்கியது. அரேபியர்களின் எதிர்ப்பை அழித்தொழித்தது பிரித்தானியா. யூதர்கள் பெரும்தொகையாக குடியேறுவதை முதலில் ஆதரித்த பிரித்தானியா இப்போது அரேபியர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக யூதர்களின் பாலஸ்தீனத்திற்கு வரும் தொகையை கட்டுப்படுத்த முயன்றது. இப்போது சியோனிச சக்திகள் பிரித்தானியவை வெளியேற்றும் எண்ணத்துடன் அதன் மேலும் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வெளியேற்றும் திட்டங்களையும் சியோசிஸ்டுகள் தொடர்ந்து அமுல்படுத்தினார்கள்.

இரண்டாம் உலக போரும் சியோனிச ஆதரவு சூழலும்

இரண்டாம் உலக போர்ச்சூழலில் ஐரோப்பாவில், முக்கியமாக ஜெர்மனியில், யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பால் யூதர்களுக்கு ஆதரவான சூழல் ஒன்று உலகில் உருவானது. யூதர்களுக்கு ஆதராவாக உருவான சூழலில் வரலாற்று பாலஸ்தீனத்தை யூதர்கள் இடங்கள், அரேபியர்கள் இடங்கள் என்று படத்தில் காட்டப்பட்டது போல் பங்கு போட்டு ஐநாவின் ஊடாக ஒரு தீர்மானத்தையும் 1947 இல் நிறைவேற்றியது பிரித்தானியா. தொடர்ந்து 1948 இல் பிரித்தானியா அங்கிருந்து வெளியேறியது. சர்ச்சைக்குரிய ஜெரூசலம் ஐநாவில் நிர்வகிக்கப்படும் என்றும் இத்தீர்மானம் சொல்லியது.

அக்காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் 30 வீதம். இவர்களில் பெரும்பான்மையோர் சில வருடங்களுக்கு முன்னர்தான் ஐரோப்பாவில் இருந்து அங்கு குடியேறிவர்கள். இருந்தும் இவர்களுக்கு 55 வீதம் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. அரேபிய நாடுகளை தவிர்த்த ஏனைய நாடுகள் இதனை ஆதரித்தன. பேரளவில் அரேபிய மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதாற்கான கட்டமைப்புக்களை உருவாக்கி விட்டு பிரித்தானியா வெளியேறினாலும், யூதர்கள் அடுத்தடுத்து இவற்றை நீக்கினார்கள். இப்போது தங்களுக்கு ஆதரவாக செல்வாக்கு நிறைந்த யூதர்கள் வாழும் ஐ-அமெரிக்காவை தங்களுடன் இணைத்து கொண்டார்கள்.

nab பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

ஐநா தீர்மானம் நிறைவேற்றி ஆறு மாதங்களுக்குள் இஸ்ரேயில் தனிநாட்டு பிரகடனம் செய்தது. அரேபிய நாடுகளுக்கும் இஸ்ரேயிலுக்கும் இடையில் தொடர்ந்து நடந்த போரில் அரேபிய நாடுகள் தோல்வியை தழுவின. அரேபிய பாலஸ்தீனர்கள் பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக வெளியேறினார்கள். அரேபியர்களுக்கு என்று பிரிக்கப்பட்ட பிரதேசங்கள் பல இஸ்ரேயிலின் கட்டுப்பாட்டில் போனது. ஜோர்டன் நாடு West Bank மற்றும் கிழக்கு ஜெரூசலத்தையும், எகிப்து Gaza Strip ஐயும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறிய இந்நிகழ்வையே ‘அல் நக்பா’ (The Catastrophe) என்று நினைவுகூருகிறார்கள்.

தொடர்ந்த இஸ்ரேயில் அரேபிய போர்கள்

ஆறு நாட்கள் போர் என்று குறிப்பிடப்படும் போர் இஸ்ரேயிலுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையில் 1967 இல் நடந்தது. அதிலும் இஸ்ரேயில் வெற்றி பெற்றது. எகிப்தின் கையில் இருந்த Gaza Strip, ஜோர்டனிடமிருந்த West Bank மற்றும் கிழக்கு ஜெரூசலம், யாவும் இஸ்ரேயிலின் கைகளுக்கு மாறியது. கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து இஸ்ரேயில் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச்சபை நிறைவேற்றியது. ஆனால் இஸ்ரேயில் வெளியேறவில்லை.

1973ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இஸ்ரேயிலுடன் போரிட்டன. ஐநாவால் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் உருவானது. ஐநா சமாதான படைகள் அங்கு நிறுத்தப்பட்டன. எகிப்தும் இஸ்ரேயிலும் 1979 இல் ஒப்பந்தம் செய்த பின்னர் ஐநா படைகள் அங்கிருந்து வெளியேறின. கோலன் மலையில் ஐநா படைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டன. இதனோடு ஏனைய அரேபிய நாடுகள் பாலஸ்தீன விடுதலைக்காக நேரடியாக போரிடுவதும் நின்று போயிற்று. ஏராளமான அரேபிய நாடுகளின் மத்தியில் இருந்தும் பாலஸ்தீன மக்கள் தனித்து விடப்பட்டார்கள்.

பாலஸ்தீன் விடுதலை இயக்கம்

அரேபிய நாடுகளான சிரியா, லெபனன், ஜோர்டன் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் பாலஸ்தீனிய மக்களிடையே ஃபாற்றா (Fatah) என்ற அமைப்பு 1959 இல் தோற்றம் பெற்றது. உலகெங்கும் வாழும் பாலஸ்தீனிய மக்களை ஒன்று சேர்த்து பாலஸ்தீன் விடுதலைக்காக போரை முன்னெடுப்பது அப்போது அதன் நோக்கமாக இருந்தது. பிற்காலத்தில் இதுவே PLO அமைப்பின் முதன்மை பங்காளியானது. PLO எனப்படும் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் 1964 இல் நிறுவப்பட்டது. 1967 ஆறு நாட்கள் போரை தொடர்ந்து இது பலமாக இயங்க ஆரம்பித்தது. யசார் அரபத் 1969 இலிருந்து 2004 இல் அவர் இறக்கும் வரை அதன் தலைவாராக தொடர்ந்தார். வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்கள் எல்லோரும் இன்றும் பாலஸ்தீன விடுதலை போராட்டத்தின் குறியீடாக யசார் அரபத்தை போற்றுகிறார்கள்.

rrr பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

PLO-Fatah இஸ்ரேயிலின் மீது பல தாக்குதல்களை நடத்தியது. 1974 இல் அரேபிய நாடுகளின் கூட்டணி PLO வை பாலஸ்தீன மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஐநா பொதுச்சபையில் பேசும் முதலாவது நாடற்ற மக்களின் தலைவராக 1982 இல் யசார் அரபத் ஐநாவில் பேசினார்.

அரேபிய வழக்கில் இன்ரஃபாடா (Intifada) என்பது அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் தலைமைத்துவம் இல்லாமல் கிளர்ந்தெழுந்து போராடுவதை குறிக்கும். இஸ்ரேயில் அடக்குமுறைகளுக்கு எதிராக பாலஸ்தீனியர்களின் முதலாவது இன்ரஃபாடா 1987 இலிருந்து 1993 வரையான காலப்பகுதி வரை தொடர்ந்தது.
பல வன்முறை போராட்டங்களை தொடர்ந்து, 1991 இல் யசார் அரபாத்தும் இஸ்ரேயிலின் பிரதமர் யிட்சக் ரபீனும் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதற்காக இருவருக்கும் 1994 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசும் கிடைத்தது.

Gaza வினதும் West Bank இனதும் சில பகுதிகளை நிர்வாகிக்க ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன் தேசிய சபையை (PA) உருவாக்கியது. அது முதலில் PLO வின் ஒரு அமைப்பாக இயங்கியது. காலப்போக்கில் வேறு கட்சிகளும் தேசிய சபை தேர்தலில் இறங்கிய போது பாலஸ்தீன் தேசிய சபை தனித்து இயங்க, PLO ஃபாற்றா என்ற அதன் முந்தைய பெயரை எடுத்துக்கொண்டது.

ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனத்தின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேயில் வெளியேறவும் ஒரு கால அட்டவணையை ஏற்றுக்கொண்டது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பல காலம் நீடிக்கவில்லை. இஸ்ரேயிலின் தொடரும் அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீன மக்கள் மீண்டும் போராடினார்கள். அதுவே இரண்டாவது இன்ரஃபாடா என்று அன்று அழைக்கப்படுகிறது. 2000 ஆண்டிலிருந்து 2005 வரை அது நீடித்தது. அதை தொடர்ந்து இஸ்ரேயில் Gaza விலிருந்து வெளியேறியது.

ஹமாஸ்

Gaza வில் ஃபாற்றாவுக்கு போட்டியாக ஹமாஸ் என்ற பாலஸ்தீன ஆயுத அமைப்பு இப்போது பலம் பெற்றது. 2006 பாலஸ்தீன் தேசிய சபை தேர்தலில் ஹமாஸ் பெரு வெற்றி அடைந்தது சர்தேசத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து 2007-2017 வரையான காலப்பகுதியில் இந்த இரு பாலஸ்தீன அமைப்புக்களான ஃபாற்றாவும் ஹமாஸூம் கடுமையாக மோதிக்கொண்டன. 2017இல் இரு அமைப்புக்களும் ஒன்றாக செயற்படுதவற்கான ஒப்பந்தம் செய்து பாலஸ்தீன தேசிய சபையில் சேர்ந்து இயங்குகின்றன. Gaza வில் ஹமாஸூம் West Bank இல் ஃபாற்றாவும் பலமாக இயங்குகின்றது

hh பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

ஐநா

இன்று 6 மில்லியன் பாலஸ்தீனியர்கள் உலகின் பல பாகங்களிலும், 4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்திலும் வாழ்கிறார்கள். அதே நேரம், இன்று உலகின் யூத மக்கள் தொகை ஏறக்குறைய 20 மில்லியன். இவர்களில் 6 மில்லியன் யூதர்கள் இஸ்ரேயிலில் வாழ்கிறார்கள். 12 மில்லியன் யூதர்கள் ஐ-அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.

1977 இலிருந்து ஐநாவின் பொதுச்சபை பாலஸ்தீன பிரதேசங்களை 1948 இல் பிரகடனப்படுத்திய நவம்பர் 29ம் திகதியை பாலஸ்தீன மக்களுக்கான கூட்டொருமை நாளாக பிரகடனப்படுத்தி அந்நாளை பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை பிரபலமாக்கும் நாளாக அவதானித்து வருகிறது. தனது அங்கத்துவ நாடுகளையும் பாலஸ்தீன மக்களின் கூட்டொருமை நாளாக இந்நாளை அவதானிக்க கேட்டு வருகிறது. இவ்வளவு உலக ஆதரவு இருந்தும் ஐ-அமெரிக்க, ஐரோப்பிய எதிர்ப்பு இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்தே வருகிறது.

ScreenShot2015 05 15at4.55.52PM பாலஸ்தீன தேசிய போராட்டம் - ந.மாலதி

2011 இல் ஐநாவின் முழு உறுப்பினராவதற்கு பாலஸ்தீன் தேசிய சபை விண்ணப்பித்தது. ஆனால் பாலஸ்தீன் தேசிய சபையை பார்வையாளராகவே ஐநா பொதுச்சபை ஏற்று வாக்களித்தது. தற்போது இத்தேசிய சபையின் தலைவராக உள்ள முகமத் அபாஸ் வன்முறைகளை எதிர்க்கிறார். சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன தனிநாட்டிற்கான அங்கீகாரம் பெறுவதற்காகவே இவர் உழைக்கிறார். பயங்கரவாத அமைப்பாக ஐ-அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட ஹமாஸ் கூட இஸ்ரேயில்-பாலஸ்தீன் என்ற இருநாட்டு தீர்வை ஏற்கிறது. இந்தியா மற்றும் சிறிலங்கா உட்பட, உலகின் 140 க்கும் அதிகமான நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டை அங்கீகரித்து தூதரகங்களையும் வைத்திருக்கின்றன. இஸ்ரேயிலும் ஐ-அமெரிக்காவும் தான் தொடர்ந்து இத்தீர்வை எதிர்க்கின்றன. உலகில் இன்று நிலவும் அநீதிக்கு அடிப்படை காரணம் எதுவென்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எமக்கான பாடங்கள்

பாலஸ்தீன தேசிய பிரச்சனையை புரிந்து கொள்வது இன்றைய உலக ஒழுங்கை புரிந்து கொள்வதற்கு மிகவும் உதவும். பாலஸ்தீன தேசிய பிரச்சனையின் செயற்பாட்டாளர்களில் முதன்மையானதாக ஐ-அமெரிக்காதான் இயங்குகிறது. உண்மையில் உலகம் பாலஸ்தீனியர்களின் பக்கமும் மேற்குலகம் ஐ-அமெரிக்க-இஸ்ரேயில் கூட்டணிக்கு பின்னாலும் நின்றுதான் இயங்குகின்றன. இவ்விரு பிரிவுகளின் இடையில் இயங்கும் ஐநாவின் பலவீனத்தை பற்றியும் நாம் புரிந்து கொள்ளலாம். சர்வதேச சட்டங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இங்கு பலமிழந்து போகின்றன. இருந்தும் இதே ஐநாவும் மேற்குலகமும் மனித உரிமைகள் பற்றி பேசுவது எத்துணை நகைமுரணானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலக ஒழுங்கை மாற்றினால்தான் ஐ-அமெரிக்காவுக்கு இடையூறாக உள்ள தேசிய போராட்டங்களுக்கு நீதி கிடைக்கும். இதை மாற்றுவதற்கு சீனா போன்ற வேறொரு வல்லரசுதான் தேவையா? அல்லது சமூக நீதியை முன்னிறுத்தும் அமைப்புக்களும் போராட்டங்களும் சிந்தனைகளும் உலக மக்களிடையே வளருவதுதான் தேவையா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

கோத்தபயாவிற்கு ஆதரவு வழங்க இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

கோத்தபயாவை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளனர்.

ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கும், மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தபயா தலைமையின் கீழான இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவினை வலுப்படுத்த தாம் முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுந்தரம் அருமைநாயகம் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவியேற்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும் நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியானால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது,
ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாளை இந்த இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த பதவியேற்பிற்காக சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெலவின் அமைச்சான முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கே இவர் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். முன்னர் இவர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாற்றம் வழங்குமாறு கோரியுள்ளதாகவும், இருந்தாலும் இந்த நியமனம் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமையவே வழங்கப்படும் என்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!

கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று(8) இடம்பெற்றது.

கதந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 05.மணியளவில் சேமமடு 01ம் யூனிற்,மற்றும் 02யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாராண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர்.அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது.

01 1 இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!

சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜைவழிபாடுகளும் நடைபெற்றது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள்,உறவினர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

01 1 இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!

இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் – அன்ரோனியோ குற்றூஸ்

மனித உரிமையை வாழ்வுக்குக் கொண்டு வரும் இளையோர்களின் பங்களிப்பை இவ்வாண்டு மனித உரிமைகள் தினத்தில் கொண்டாட விரும்புகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மனித உரிமைகள் தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உடல்நலம் தரக்கூடிய சுற்றுச் சூழலைப் பேணுவதற்கான உரிமைக்காகவும், இளம்பெண்களதும் பெண்களதும் சமத்துவ உரிமைக்காகவும், தீர்மானங்களை எடுப்பதில் தங்களுக்கான பங்களிப்புக்களுக்காகவும், தங்களின் கருத்துக்களைச் சுதந்திரமான வெளியிடும் உரிமைக்காகவும் உலகெங்கும் இளையோர்கள் பேரணிகள் நடத்தியும்இ அமைப்புக்களை உருவாக்கியும் இவை குறித்துப் பேசியும் வருகின்றனர்.

இவர்கள் தங்களுடைய எதிர்கால அமைதிக்காகவும், நீதிக்காகவும், சமமான வாய்ப்புகளுக்காகவும் அணிதிரண்டெழுகின்றனர். எங்கே வாழ்கிறார்கள், எந்த இனத்தை, சாதியை, மதத்தை, சமுகத்தன்மையை, பால் தன்மையை, பாலியல்அமைப்பினை, அரசியல் அல்லது கருத்துக்களை உடையவர் என்ற நிலைகளை, வலுவின்மை வருமானமின்மை என்பற்றைக் கொண்டடிருப்பவராயினும் அல்லது வேறு எந்த நிலைகளில் இருந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் எல்லா உரிமைகளுக்கும் தகுதியுள்ளவனாகவே உள்ளான்.

இந்த அனைத்துலக மனித உரிமைகள் தினத்தில் நான் ஒவ்வொருவரையும் இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் என வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்” என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், அன்ரோனியோ குற்றூஸ் (Antonio Guterres) தனது அனைத்துலக மனித உரிமைகள் தினத்துக்கான 2019ம் ஆண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.