இந்தியாவின் தெற்கு உலகம் (குளோபல் சவுத் ) என்னும் அனைத்துலக கொள்கை அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரம்பின் “வர்த்தகப் போர்” தொடுப்பால் இந்தியா சீனாவுடன் நெருக்கமாகி முன்னெடுக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளதை கடந்த வாரத்தில் இந்திய சீன உறவில் ஏற்பட்டுள்ள 2020க்குப் பின்னதான புதிய திடீர் நெருக்கம் வெளிப்படுத்துகிறது. இந்த புதிய நெருக்கத்தை குறிக்கும் அரசியல் குறியீட்டு அடையாள மொழியாக சீனாவை டிரகன் எனவும் இந்தியாவை யானை எனவும் சுட்டி இருநாடுகளதும் நெருக்கத்தை டிரகன் யானை நடன ஆரம்பமாக அரசியல் வர்ணனைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நேரத்தில் சிறிலங்காவுக்கான சீனத்தூதுவர் இந்தியாவும் சீனாவும் இணைந்து சிறிலங்கா உட்பட்ட தெற்காசிய விவகாரங்களில் செயற்பட வேண்டுமென்று புதிய அழைப்பை விடுத்துள்ளார். இதனால் டிரகன் யானை நடனம் கண்டிய நடனத்துடன் பாடும் மீன் துள்ளும் இலங்கைத் தீவின் கிழக்குக் கரைகளிலும் வான் உயர் பனை நிறை வடக்கிலும் நில-கடல்- வான் இணைப்புப் பொருளாதார முயற்சிகள் வழி நடக்கப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்த நடனத்தில் யானையின் மேல் கழுகும் வந்து உட்கார்ந்து தன்னை இந்துமாக்கடலின் அமைதிப் புறாவாகத் தொழச் சொல்லும். இப்புதிய நிலையில் இவைகளிலிருந்து பாடும் மீனினதும் வானுயர் பனையினதும் உயிர்வாழ்தல் இருப்பு பேணப்பட பனையினதும் மீனினதும் நிலமாகவும் கடலாகவும் உள்ள ஈழத்தமிழர் தாயகத்தின் இறைமை ஈழத்தமிழர்களால் பாதுகாக்கப்படுவதற்கு உள்ளூராட்சி ஈழத்தமிழர்களுடையதாக மாற மே மாதம் 6ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைமைக்கட்சியாக உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து ஒரு பலம் பொருந்திய மக்களாணையைத் தமிழ்த் தேசியத்துக்கு வழங்கிட வேண்டுமென்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.
மேலும் தெற்கு உலகின் இந்த சமுக பொருளாதார அரசியல் மாற்றம் சீனாவால் வரவேற்கப்படுகிறது என்பதை கேஜி மாவோ என்னும் சீனாவின் தேசிய அபிவிருத்தி சீர்திருத்த ஆணையகத்தின் அனைத்துலக ஒத்துழைப்பு மையத்தின் ஆய்வாளர் மார்ச் 21ம் நாள் ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில்’ எழுதிய “‘எவ்வாறு ‘அமெரிக்கா முதல்’ என்பது இந்தியாவையும் சீனாவையும் நெருக்கமடையச் செய்கிறது’ என்ற ஆய்வுக்கட்டுரை தெளிவாக்கியுள்ளது. அவ்வாய்வுக் கட்டுரையில் ‘அமெரிக்காவில் ட்ரம்ப் தொடங்கியுள்ள வர்த்தகப் போர் இந்தியாவுக்கும் அமெரிக்காவின் பொருட்களை அதிக விலைகொடுத்தே வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் அரசு சீனாவுடனான பனிப்போர் நிலையைத் தொடர்வது அதிக விலையுள்ளதாகவும் பலத்த அழுத்தங்கள் உள்ளதாகவும் உள்ளதால் அதனைத் தொடர விரும்பாது சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் புதிய யுகத்தை ஆரம்பித்துள்ளது’ என விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மார்ச் 17ம் திகதி இரண்டு பாரிய அபிவிருத்தி நாடுகளான சீனாவும் இந்தியாவும் தேசிய அபிவிருத்தியில் பகிர்வுகளை மேற்கொண்டு இந்தோ சைனோ உறவுக்கு மீள்புத்துயிர் அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளமை அமைகிறது. இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கப் ‘பொட்காஸ்டர்’ லெக்ஸ் பிரிட்மனுக்கு இம்மாதம் 16ம் திகதி அளித்த செவ்வியில் ‘ சீன இந்திய போட்டியிடல் இயல்பானது அது முரண்பாடாக மாறாது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சீனாவும் இந்தியாவும் இணைந்து செயற்பட வேண்டும் “என்று நேர்த்தன்மையான கருத்துரைப்புக்களைச் செய்ததின் அடிப்படையில் அதனை வரவேற்று சீனாவின் நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ இல் சீனாவை டிரகனாகவும் இந்தியாவை யானையாகவும் உவமித்து இரண்டினதும் இணைந்த நடனமே சிறந்தது” என்று எழுதப்பட்டது. அத்துடன் சீனாவும் இந்தியாவும் இந்தியாவின் காலனித்தவ காலத்துக்கு முன்னர் உலகின் 50 வீதமான பொருளாதாரத்தை வழங்கிய பொருளாதார வரலாற்றையும் மீள்நினைவுபடுத்தினார்.
இவைகள் ஈழத்தமிழர்களின் தாயக நில கடல் வான் மூலவளங்களும் மக்களின் மனித வலுவும் இந்த நாடுகளால் உருவாக்கப்படும் தொழில் வர்த்தக முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக்குகின்றன. இந்நேரத்தில் அரசுக்கு இப்பகுதிகளின் உள்ளூராட்சி மேலான அதிகாரம் முக்கியமானதாகிறது. இதுவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வடக்கின் 17 சபைகளிலும் களமிறங்கி மற்றவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் பலவற்றைச் சட்டத்துணை கொண்டு ஏற்காது நிராகரிக்க வைத்து வாக்குகள் சிதறாது தங்களுக்கே விழ வைப்பதற்காகச் சனநாயகத்தையே அழிக்கும் உத்திகளை கையாண்டதன் காரணமாகிறது. அதாவது இந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சிக்கு வருபவர்கள் வரவிருக்கும் பொருளாதார மாற்றத்துக்கு மண்ணின் கடலின் வளத்தையும் மக்களின் மனிதவலுவையும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் முகவர்களாக மாறுவார்கள்.
இந்நேரத்தில் இந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பொருளாதார வளங்கள் பற்றிய பொருளாதாரக் கட்டுமானத் திரட்டையும் மக்களின் தொழிற்திறன் கல்வித்திறன் மற்றும் சிறப்புத் திறன்கள் குறித்த விபரக்கொத்தையும் இவற்றுக்கான நிதித்தேவை அளவையும் திரட்டும் பணியை உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளவர்கள் செய்ய வேண்டும் என்பது இலக்கின் கருத்தாக உள்ளது. அப்பொழுதுதான் ஈழத்தமிழர்களிடையிலே சுயதொழில் செய்பவர்களையும் தொழில் வழங்குநர்களையும் ஏற்படுத்த முடியும். இதற்கு அனைத்துலக ஈழத்தமிழர்களும் இணைந்து பணியாற்றுவதற்கு பொருளாதார மீட்புக் கவுன்சில் ஒன்று கட்டமைக்கப்பட்டேயாக வேண்டும். சிறு நடுத்தர வர்த்தக தொழில் முயற்சிகளுக்கு அனைத்து உலக ஈழத்தமிழரும் இயலுமான மதி நிதி வளங்கள் அளிப்பதற்கும் இயலுமான தொழிற்பயிற்சிகள் அளிப்பதற்குமான திட்டங்களைத் தயாரிப்பது இக்கால கட்டத்தில் முக்கியமாகிறது. இல்லையேல் முதலீடுகளால் அந்நியர்களுடையதாக நிலமும் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களால் மக்கள் தொகை மாறுபடுத்தல்களும் இயல்பாகும். எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் மக்களுடையது உள்ளூராட்சி என்பதால் அதனை மக்களே ஆட்சிப்படுத்தக் கூடிய வகையில் மக்களுக்கும் மண்ணுக்கும் சக்தியளிக்கப்பட வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. மக்களுக்கு யாரில் தங்கள் நாளாந்த வாழ்வுக்கும் தங்கள் மண்ணுக்கும் தங்களுக்கும் பாதுகாப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறதோ அவர்களுக்கே வாக்களிப்பார்கள் என்பதையும் இதனை வேட்பாளர்கள் மனதிருத்துவதே தோற்றபின் அழுது புலம்பாது வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்பதையும் இலக்கு கூறிவைக்க விரும்புகிறது.
ஆசிரியர்