இன்றைய சமகால உலகில் அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கல் என்கிற பெயரில் மக்கள் இறைமையை அழித்தல் என்பது அமெரிக்காவின் எலன் மஸ்க், ட்ரம்ப் கூட்டாண்மை வழி வளர்க்கப்படும் அரசியல் தத்துவமாக உள்ளது. இதற்காக ட்ரம்பின் 2வது ஆட்சிக்காலம் என அரசியலில் பேசப்படும் 2025ம் ஆண்டு சனவரி 20 முதலான காலத்தில் அமெரிக்காவில் எலன் மஸ்க்கின் நெறிப்படுத்தலில் அரசாங்கச் செயல் திறனுக் கான திணைக்களம் (Department of Government efficiency) ட்ரம்பால் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை ஆங்கிலத்தில் ‘டொஜ்’ (‘Doge’) என அழைக்கின்றனர். இந்த புதிய திணைக்களத்தின் செயற்பாடு பெயரளவில் அமெரிக்க ஒன்றியத்துள் எனச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் உலகளாவிய நிலையில் எல்லா அரசாங்கங்களையும் தங்களின் ஆளுமைக்குள் ஏதோஒருவகையில் உட்படுத்துவதன் மூலம் உலகின் மூலவளங் களையும் முதலீடுகளையும் மனிதவலுவையும் அமெரிக்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தல் என்கிற உள்நோக்கிளை கொண்டதாகவுள்ளது. இதற்கு நியாப்படுத்தலாக அமெரிக்கா எந்த அரசாங்கங்களுக்கு 1945 முதல் அதாவது இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததின் பின்னர் அதிக நிதியளிப்புக்களைப் பொருளாதார உதவிகளை அளித்ததோ அந்த நாடுகளை எல்லாம் தமது நாடுகளாக மாற்றுவது அல்லது இருக்கும் அரசாங்கங்கள் வழி நிர்வகிப்பது என்பதாக அமைகிறது.
இந்த அடிப்படையில் தான் கனடாவை 51வது மாநிலமாகவும் பனாமாக் கால்வாயை மீளவும் தம் அகப்படுத்துவதும் மெக்சிகோ வளைகுடாவையே அமெரிக்க வளைகுடாவாக பெயர் மாற்றம் செய்வதும் பலஸ்தீனியத்தின் காசாசை தமதாக்கி அல்லது இஸ்ரேயல் ஆட்சியாளரான ‘பலஸ்தீன இனவழிப்புக் குற்றவாளியாகிய இஸ்ரேலிய இன்றையப் பிரதமர் நெத்தென்யாகுவின் ஒத்துழைப்புடன் தாம் நிர்வகித்து மத்திய கிழக்கின் கடற்கரை உல்லாசபுரியாக்கி பணம் உழைப்பதற்காக பலஸ்தீனியர்களுக்குக் காசாவுக்குத் திரும்பிச் சென்று வாழ உரிமையில்லையென ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து முடிவெடுத்து யோர்தானை அவர்களின் ஒருபகுதியை ஏற்காது விட்டால் அமெரிக்கா யோர்தானுக்கான அனைத்து உதவிகளையும் சேவைகளையும் உடன் நிறுத்தும் என எச்சரித்துப் பயப்படுத்தியும் எகிப்தை மறுபகுதியை ஏற்கத்தான் வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியும் உலக அரசியலை தனது நாட்டு அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பரிசில் அனைத்துலக செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் செயற்பாட்டு மாநாட்டில் இணைத்தலைவராகப் பணியாற்றிவிட்டு அந்த மாநாட்டின் பிரகடனங் களை ஏற்க மறுத்துக் கையொப்பமிடாது அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அவமதித்த செய்தி பரவிக்கொண்டிருக்கையிலேயே அமெரிக்கா சென்று இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் முப்பது பொருள்களுக்கு வரிக்குறைப்பு செய்து ட்ரம்்பை மகிழ்வித்திருக்கின்றார். இதன்வழி பிரான்சு அரசத்தலைவர் மக்ரோனையும் அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்ட் ட்ரம்பையும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் ரஸ்ய அரசத்தலைவர் புட்டினையும் ஏககாலத்தில் கட்டி அணைக்கும் நாற்கரமுள்ள புதிய பிரம்மா தான் என்பதை நிரூபித்து அதிகாரங்களுக்கு அடிபணியும் மக்கள் தன்மானத்தை ஏறெடுத்தம் பார்க்காத தனது அரசியற் கொள்கை நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உறுதி செய்துள்ளார். அதாவது பங்காண்மைகள் கூட்டாண்மைகள் வழி மக்களை அல்ல தங்கள் அரசாங்கங்களை செயல்திறனுள்ளதாக்கல் வழி நாட்டின் மூலவளங்ளையும் மூலதனங்களையும் மனிதவலுவையும் தமது ஆட்சியை நிலைநிறுத்த தாம் விரும்பியவாறு பயன்படுத்தல், விற்றல் என்பன இந்த அரசாங்கங்கள் அனைத்தினதும் இன்றைய அரசியல் கொள்கையாகவும் உள்ளது. இதற்குச் சிறிலங்காவின் இன்றை அரசத்தலைவர் அநூரகுமார திசநாயக்காவும் விதிவிலக்கல்ல. அவரின் இந்திய சீன வெளிநாட்டு ஆதாரநிலைப் பயணங்களும் தொடரும் சவூதி அரேபிய அனைத்து உலக அரசாங்கத்தலைவர்களின் மாநாட்டுப் பயணமும் தனது அரசாங்கத்தைச் செயல் திறனுள்ளதாக்கி அனைத்து மக்கள் இறைமையப் பொதுவாகவும் ஈழத்தமிழர்களின் மக்கள் இறைமையைச் சிறப்பாகவும் படிப்படியாக இல்லாதொழிப்பதன் வழி சிங்கள சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்திறனை வளர்த்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தல் என்பதாகவே அமைந்துள்ளது.
இத்தகைய ஒரு சூழலில்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை விட நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னுரிமையாகிறது. தையிட்டியில் பௌத்த விகாரைக் கென மக்கள் காணிகளை கையகப்படுத்தி அதற்கு இணையாக பலாலி விமான ஓடுதள நீளப்படுத்தல் அகலப்படுத்தலுக்கென அங்கும் மக்கள் காணிகளைக் கையகப் படுத்தி இஸ்ரேலின் பலஸ்தீனிய மக்கள் வாழும் மேற்குக்கரை இஸ்ரேலியக் குடியேற்றம் மாதிரி காங்கேசன்துறை முதல் மாதகல் வழி காரைநகர் வரையான வடதமிழீழத்தின் இந்துமாக்கடல் கரைப்பகுதியிலும் வளமான யாழ்குடாநாட்டு விவசாய மண்ணிலும் நிரந்தரமான சிங்களக் குடியேற்றமொன்றை அமைத்துக்கொள்ளுதல் அமைகிறது. இதனை எதிர்த்தே தங்கள் நிலத்தைத் தங்களுக்குத் தரும்படி வாழ்வாதாரத்தையும் வதிவிடத்தையும் இழந்த தையிட்டி மக்கள் சனநாயக வழிப்போராட்டங்களில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நேரத்தில் உலக அரசியலும் இலங்கையின் அரசியலும் வரலாறுகளைப் பேசுவதாலோ அல்லது பாதிப்புக்களை மீளவும் மீளவும் உரப்பக் கூறுவதாலோ எந்தத் தீர்வையும் ஈழத்தமிழர்கள் பெற முடியாது என்கின்ற எதார்த்தத்தைத் தமிழர்கள் உணரவேண்டும். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு சனநாயக வழியில்தான் போராட வேண்டும் என்கிற போராட்ட முறைமை மாற்றம் பெற்றுள்ள நிலையில் ஈழத்தமிழர் வாழ்வின் ஒவ்வொரு அலகுகளும் புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் நிதியாலும் மதியாலும் சகோதரத்துவ உறவாலும் சமுக மூலதன இணைப்பாலும் அறிவளிப்புச் சத்தியூட்டலாலும் பாதுகாக்கப்பட வேண்டியதாகவும் ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சி உரிமையுடன் கூடிய அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் உலக மக்களைக் கொண்டு புலமத்தில் உள்ளவர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டியதுமான மிகப்பெரிய கடமைப் பொறுப்பு புலத்தில் தமிழர்களுக்கு உள்ளது.
பலஸ்தீனியத்தின் காசா நீள்நிலப்பரப்பை மேற்குக்கரைப்பரப்பை எவ்வாறு மனிதப்படுகொலைகளாலும் உட்கட்டுமான அழிவுகளாலும் மனிதர்கள் வாழ இயலாத அளவுக்குச் சிதைத்து விட்டு நெத்தென்யாகுவும் ட்ரம்பும் இணைந்து அங்கு வாழ முடியாதுள்ள உங்கள் மேல் எங்கள் கருணை உங்களை இன்னொரு நாட்டில் படிப்பும் செல்வப்பிடிப்பும் அதிகாரப்பதவியும் உள்ளவர்களாக வாழ வைப்பதேயென ஆசைகாட்டி மோசம் செய்ய முயற்சிக்கின்றார்களோ இதே அரசியலைத்தான் சிங்கள பௌத்த அரசுக்கள் அன்றும் இன்றும் என்றும் செய்து ஈழத்தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு அரசியலைத் தொடர்கின்றார்கள். இந்நேரத்தில் ஈழத்தமிழரின் இறைமையுள்ள தேசமாக இலங்கையின் வடக்கு கிழக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை உள்ளதென்பதை உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் வடக்கு கிழக்கின் தேச நிர்மாணத்தை உலக மக்களின் உதவியுடன் முன்னெடுக்கவும் கூடிய ஆற்றலாளர்களின் எல்லாத் துறைகளுக்குமான சமுகங்கள் அமைப்புநிலை பெறவேண்டும் என்பதும் இதன் கூட்டமைப்பாகப் பொதுக்கட்டமைப்புவொன்று வெளிப்பட வேண்டுமென்பதும் இதுவே ஈழத்தமிழர்களின் சமகால வாழ்வுக்கான ஒரே பலமாகும் என்பதும் இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. 3வது உலகப் போருக்கான போர் மேகங்கள் கருக்கொள்கின்ற இக்கால கட்டத்தில் புலத்து தமிழரின் வாழ்வுக்கும் இது அவசியமாக உள்ளது என்பதும் இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்