Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் பாரத் – லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர்...

பாரத் – லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 275

பாரத் – லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 275

சிறிலங்காவின் முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரசதரப்புப் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்வீரசேகர, “இந்திய ரூபா இலங்கையில் பயன்படுத்தப்படும் பணமாகிவிட்டதும், சிறிலங்காவின் கேந்திர மையங்களான துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களை இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வருவதும், இந்தியாவில் 44 இலட்சம் வேலையில்லாதவர்களும் தொழில் இல்லாதவர்களாக 2 இலட்சம் வைத்தியர்களும் 15 இலட்சம் பொறியியலார்களும் உள்ள நிலையில் எட்கா ஒப்பந்தத்தின் மூலம் சிறிலங்காவில் இவர்கள் தொழில் பெறும் நிலை உருவாக்கப்படுவதும், இந்தியாவின் 29வது மாநிலமாகச் சிறிலங்காவை அடையாளப்படுத்தும் முயற்சியாக உள்ளது. நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை” எனச் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் பாரத் லங்கா கூட்டாண்மை இறைமையுள்ள நாட்டின் நடைமுறையாட்சி உள்ளதென்பதைச் சீரணித்துக் கொள்ள இயலாமல் குமுறியுள்ளார். பாரத் லங்கா வீடமைப்புத் திட்டம் போன்ற இன்றைய பெயரீடுகளே கூட்டாண்மையை இரு நாடுகளுமே வெளிப்படுத்தியுள்ளமைக்குச் சான்றாகிறது. இந்தியாவுக்குச் சிறிலங்கா அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரசாங்க சிவில் நிர்வாக அதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் கூடக் குறுகிய காலப் பயிற்சிகளுக்குச் சென்று, இருநாடுகளும் இரண்டாக இருந்தாலும் இரண்டல்ல என நடைமுறையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனை உணர்ந்தவராகவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச “டெலிக்கொம் நிறுவனத்தையும் மின்சார சபையையும் துண்டுகளாப் பிரித்தும் இந்தியாவுக்கே வழங்கவுள்ளனர். மன்னார் காற்றாலை மின்னுற்பத்தியின் அதிகாரத்தையும் அதானிக்கு வழங்கவுள்ளனர். இறுதியில் எது எமக்கு எஞ்சியிருக்கிறது? எட்கா உடன்படிக்கையில் கையொப்பமிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ஆனால் அந்த ஒப்பந்தத்தை அமைச்சரவை அமைச்சர்கள் கண்ணாலேயே காணவில்லை. ஆனால் அதற்கான தனியான அலுவலகம் அமைக்கப்பட்டுச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எமது அடையாள அட்டையையும் இந்தியாவே வழங்கவுள்ளது. இதன் மூலம் இந்தியா சிறிலங்காவின் தரவுக்கட்டமைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளது. அதே போன்று மில்கோ நிறுவனத்தையும் செயற்பட அனுமதித்து எட்கா ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தினால் இலங்கை என்று ஒன்றுமே இருக்காது. இந்நிலையில் குறைந்த பட்சம் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ சிறிலங்கா இந்தியாவின் பகுதி என்று கூறியமைக்காவது ராசபக்சக்களோ மொட்டுக்கட்சியோ அது எவ்வளவு பாரதூரமானது என்று கூறக்கூடச் சொல்லாது முதுகெலும்பின்றி இருக்கிறார்கள்” எனப் பேசித் தனது நெஞ்சக் குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலை சிறிலங்காவக்கு இந்தோ சிறிலங்கா 1987 உடன்படிக்கை வழி தோன்றி “இந்தோ சிறிலங்கா தேசியவாதமாக இன்று பரிணாமடைந்துள்ளது என்று 17.02.2024 ஆசிரிய தலையங்கத்தில் ‘இலக்கு’ எடுத்துவிளக்கியிருந்தது. இவ்வாரம் அந்த இந்தோ சிறிலங்காத் தேசியவாதம் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை ஆட்சியாகப் பரிணாமம் அடைந்து வருவதைச் சிறிலங்காவின் சிங்கள அரசியல்வாதிகளின் ஏக்கம் மிகு சிறிலங்காப் பாராளுமன்றப் புலம்பல்கள் வழி எடுத்து விளக்குகின்றது.
மேலும் ‘உலகளாவிய ஊடகப் பரப்பும் சனநாயகத்தின் மேல் அதன் தாக்கமும்’ என்னும் மையப்பொருளில் அமெரிக்காவின் பொதுஇராஜதந்திரத்துக்கான துணைச் செயலாளர் எலிசபேத் எம் அலன் அவர்கள் கொழும்பில் இலங்கைப் பத்திரிகைகள் நிறுவனத்தில் பெப்ரவரி 19ம் திகதி உரையாற்றும் பொழுது “இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கங்களைத் தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்கள் இடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது நாம் குரல் கொடுக்க வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்காவில் ஊழலுக்கு எதிராகச்செயற்பட்டு” “மக்ரேக்கர்கள்” (வதந்தி பரப்புபவர்கள்) என ஜனாதிபதி தியடோர் ரூஸ்வெல்ட்டால் வகைமைப்படுத்தப்பட்ட புலனாய்வு ஊடகத்துறையின் தந்தையான ‘லிங்கள் ஸ்டெஃபென்ஸ் அவர்களின் 1904ம் ஆண்டு நூலான “தஷேம் ஒப் த சிட்டிஸ்’, அரசியல் தலைவர்கள் வர்த்தகர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் இடையான உட்தொடர்புகளை உலகுக்குத் தெளிவுபடுத்தி, அமெரிக்க அரசியலை சீர்மைப்படுத்தியதை உதாரணங்களுடன் எடுத்து விளக்கினார். “இவை போன்ற நாடாகவா நாம் இருக்க விரும்புகிறோம்? என்ற கேள்வியை அவர் மக்களிடை ஊடகத்தின் வழி எழுப்பி சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை வெளிப்படுத்தி அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கவேண்டும் என்றார். பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்தியையும் வளர்ச்சிகளையும் வளர்க்கும் வகையில் எல்லா மக்களுக்குமான சனநாயகத்தை ஆதரித்து அனைவருக்குமான பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்தவும் உழைக்கவும் வேண்டும் என்றார். இதனாலேயே சிறிலங்காவின் பாராளுமன்றம் சனவரி மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றியபோது, கருத்துச் சுதந்திரம் புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் அது ஏற்படுத்தக் கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது” என்றார் இச்சட்ட மூலத்துக்கு எதிரான அமெரிக்காவின் கவலையை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் யூலி யே சஞ் அவர்களும் வெளியிட்டிருந்தார். அத்துடன் பொருளாதார நெருக்கடி நேரத்தில் 60 மில்லியன் டொலர்களை வழங்கியும் சிறிலங்காவுக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் 65 மில்லியன் டொலர்களை அடுத்த ஐந்தண்டுகளுக்கு வழங்கவும் செய்த யு.எஸ். எய்ட்ஸ் நிர்வாகி சமந்தாப் பவர் “சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரம் நிகழ்நிலை காப்புச்சட்டத்தால் பாதிப்புற்றுள்ளமை குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம் நேரடிப்பாதிப்படைந்துள்ளதும் சிறிலங்காவின் சட்டமியற்றும் முறைமைகள் சனநாயக ஆட்சியைப் பேணுதல் குறித்தும் அமெரிக்காவின் கவலையை சிறிலங்கா ஜனாதிபதிக்கு மெய்நிகர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த அக்கறைகளுக்குச் சிறிலங்காவின் பதில் போல அமைச்சரவை முடிபுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துலு குணவர்த்தனா “சிறிலங்கா இறையாண்மையுள்ள சுதந்திரமான ஒரு நாடு. நமது நாட்டின் சட்டதிட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கே உரித்துண்டு. அதில் தலையிட இது ஒன்றும் அமெரிக்காவின் பிராந்தியம் அல்ல” என வெளிப்படையாகப் பேசியுள்ளார். இவையெல்லாம் இரண்டல்ல என்ற நிலையில் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை ஆட்சி நடைமுறையில் வேகமாக அதிகரித்து வருவதையும் அமெரிக்காவும் பொருளாதாரக் கூட்டணியாக நெறிப்படுத்தல்களைச் செய்யும் என்பதையும் தெளிவாக்குகிறது. இந்தக் கூட்டாண்மை கூட்டணி ஆட்சி முறைமைகளுக்குள் ஈழத்தமிழர் இறைமை என்பது கேள்விக்குறியாகவே அமையும். சமுகம் என்ற நிலையிலேயே இருநாடுகளுமே ஈழத்தமிழர் தேசிய பிரச்சினையை அணுகி வருகின்றன. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் ஏற்பட்டுள்ள புதிய சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக மாற்றங்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்து தங்களது இறைமையை முதன்மைப்படுத்தித் தங்களுக்கான தன்னாட்சி மூலம் பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது இன்றுள்ள கேள்வி. இதற்குப் பதில் மாண்பமை எலிசபேத் யே அலன் அவர்களின் உரையில் உள்ளது. ஈழத்தமிழர்களின் ஒன்றிணைந்த குரலாக அமையக்கூடிய தேசிய ஊடகம் ஒன்றை உடனடியாக உருவாக்குவதே உலகில் பொதுக்கருத்துக் கோளத்தை உருவாக்குவதற்கு ஒரே வழி என்பதே இலக்கின் உறுதியான எண்ணம் ஊடகத்தின் வழியான திறந்த உரையாடல்களும் அறிவூட்டல்களும் தாயக உலக ஈழத்தமிழர்கள் இணைப்பும் காலத்துக்குரிய பதிலை வருவிக்கும்.

 

Exit mobile version