Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிக்கின்ற தீர்வு வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...

ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிக்கின்ற தீர்வு வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 235

ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிக்கின்ற தீர்வு வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 235

இரஸ்ய-உக்ரேன் போரில் உக்ரேன் அரசத்தலைவர் சீன அரசத்தலைவருடன் மூன்று கிழமைகளுக்கு முன்பு பேசியதன் தொடர்ச்சியாக அமைதித் தீர்வுக்கான திட்டத்தை முன்னெடுத்துச் சீனாவின் மீயுர் ராஜதந்திரியாகிய லீகுயிய் (Li Hui) உக்ரேன் சென்றுள்ளார். உக்ரேனுடனான பேச்சுக்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமைதித் தீர்வை முன்னெடுக்கும் வகையில் செல்லவுள்ளார். இந்நேரத்தில் லீ குயியைச் சந்தித்த உக்ரேனின் வெளிவிவகார அமைச்சர் டிமைட்ரே குலிபா (Dmytro Kuleba) உக்ரேனின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதியுங்கள் எனச் சீனாவின் மீயுயர் ராஜ தந்திரி லீகுயிய்க்கு பேச்சுவாரத்தைக்கான முன்நிபந்தனையைத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளாகத் தங்களை முன்னிறுத்தும் எவருக்கும் உக்ரேனின் வெளிவிவகார அமைச்சர் டிமைட்ரே குலிபா எவ்வாறு ஒரு பேச்சுவார்த்தையை எதிர் கொள்ள வேண்டுமென்பதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணத்தைக் கட்டமைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல இரஸ்யாவின் தலையீட்டுக்குப் பின்னரான எந்த எல்லைகளையும் இழந்து பேசவோ அல்லது போரை இந்த அளவில் உறைநிலையில் வைத்துக் கொண்டு பேசவோ தாங்கள் ஒருபொழுதும் தயாரில்லை எனவும் தெளிவாக உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரேனின் வெளிவிவகார அமைச்சர் உடைய அணுகுமுறை ஒரு தேசமக்களின் இறைமை பாதிப்புக்குள்ளாகும் பொழுது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இறைமையை விட்டுக் கொடுக்காது தீர்வுக்கான பேச்சுக்களில் உறுதியுடன் ஈடுபட வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.
ஆனால் ஈழத்து அரசியல்வாதிகளும் சரி புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் சரி 2009 இல் ஈழத்தமிழர்களின் இறைமையின் நடைமுறை அரசு சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பால் வீழ்ச்சியுற்றதன் பின்னர் இதுவரை ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஆள்நிலை ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வும் சுதந்திரமான வளர்ச்சிகளும் மீள் உறுதிப்படுத்தப்பட வைப்பது உலகநாடுகளதும் உலக அமைப்புக்களதும் கடமைப் பொறுப்பு என்பதை வலியுறுத்தி அவர்கள் கடமையில் இருந்து தவறுவதே சிறிலங்கா ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பைத் தனது அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்டு செயற்படுவதற்கான மூலகாரணமாகிறது என்பதையும் எடுத்துரைக்காமையே இன்று சிறிலங்கா தனது அரசபயங்கரவாதத்தைத் தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு என நியாயப்படுத்த வழிவகுத்து வருகிறது. எனவே ஈழத்தமிழினத்தின் தாயக உலக அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல பிரித்தானிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாது தொடரும் காலனித்துவ காலப் பிரச்சினை என்பதால் ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையில் உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றே 2023ம் ஆண்டு மே 18 ஈழத்தமிழினப் படுகொலை நினைவேந்தல்களில் ஈழத்தமிழர்கள் ஒரே குரலாக உலகெங்கும் முன்னெடுத்தனர்.
அதிலும் குறிப்பாக இந்த இனப்படுகொலையில் தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களை இழந்த இளம் ஈழத்தமிழர்கள் அந்த வலிசுமந்து எழுந்து தங்கள் தாயகத்தின் பாதுகாப்பான அமைதிக்கான வலி மிகுந்த உண்மையின் குரலாக நீதிக்கான முழக்கமாக ஒலித்தமை குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியாக உள்ளது. இளையோரின் நீதிக்கான தேடலுக்கு மேலும் வலு சேர்க்கும் செயலாகக் கடந்த ஆண்டில் மே 18 இனஅழிப்பு என முதன் முதலில் உலகுக்கு அறிவித்த கனடிய அரசாங்கம் இவ்வாண்டில் ஒன்ரோறிய மாநிலத்தில் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தை தமிழினப்படுகொலைகள் அறிவுறுத்தல் வாரமாகக் கொண்டாட ஒன்ரோறியா மாநில 104ம் சட்டத்தின் மூலம் சட்டரீதியாக அனுமதித்துள்ளது. இவ்வாரத்தில் ஒன்ரோறியா மாநிலப்பள்ளிகளில் தமிழினப்படுகொலைகள் குறித்த ஒரு மணிநேர அறிவூட்டல் பள்ளிப்பாடத்திட்டத்தின் ஓரங்கமாகவே படிப்பிக்கப்படுவது அறிவுலகம் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட சிறிலங்காவின் இனப்படுகொலைகளை அறிவாகவே மாற்றிட உதவும் பெருஞ்செயலாகிறது. கனடாவின் ஈழத்தமிழர் மக்கள் அவையினரின் இத்தகைய முயற்சிகள் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மக்களவைகளையும் அவர்களின் நாடுகளின் அரசாங்கங்கள் மூலம் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க முன்மாதிரியாக அமைந்துள்ளன.
பிரித்தானியாவில் ஈழத்தமிழர் பேரவையினர் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கேட்போர்கூடத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடாத்திய தமிழர் தேச இருப்பும் அரசியல் உரிமைகளும் மாநாட்டிலும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுத் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களை அநியாயமாக இழந்த வலிசுமந்து எழுந்த இளம் தலைமுறையினரின் உருக்கமான உண்மைக்கான சாட்சியங்களும் நீதிக்கான குரல்களும் பிரித்தானியப் பாராளுமன்ற சமுகத்தினரிடை நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியமையை மறுநாள் பிரித்தானியப் பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், நிழல் வெளிவிவகார அமைச்சர், நிழல் ஆசிய தெற்காசிய அமைச்சர் உட்படப் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளிலும் நினைவேந்தல் புத்தகத்தில் உருக்கமான குறிப்புக்களுடன் பலரும் இட்ட கையெழுத்துக்களிலும் கண்டுகொள்ள முடிந்தது.
ஆயினும் தமிழகத்தில் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள இராமநாதபுரம் சென்ற பொழுது கலந்து கொள்ளாதவாறு பொலிசாரால் தடுக்கப்பட்டதும், சிறிலங்காவில் கொழும்பில் சிவில் சமுகத்தினர் சிங்களவர்கள் உட்பட நினைவேந்தல் வழிபாடு செய்கையில் சிங்கள அரசியல் வாதிகளின் அடியாட்கள் வழிபாட்டுச் சுதந்திரத்தைக் கூட அனுமதிக்க மறுத்து அதனைக் குழப்ப முயன்றதுமான நிகழ்வுகள் இவ்விருநாடுகளும் இன்னும் அரசியல் நாகரிகம் கூட இல்லாது அடிப்படை மனித உரிமைகளை வன்முறைப்படுத்தி இனப்படுகொலையாளர்களுக்குச் சாதகமாக நிற்கும் மனநிலை உடையவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தன்னாட்சி உரிமையப் பயன்படுத்த இயலாத நாட்டெல்லையில் வாழும் மக்களாக உள்ளனர் எனவும் அவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிர்வாகப் பிரதிநிதியை நியமித்து அவர்கள் தன்னாட்சி உரிமையைப்பயன்படுத்தி வாழும் நிலை வரும் வரை அவர்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பாராளுமன்றப் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிர்வரும் 25ம் திகதி முதல் 31வரை ஐக்கிய நாடுகள் சபை தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ இயலாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான கூட்டு ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னெடுக்கையில் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்துவதைச் சிறிலங்கா இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு அரசியல் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் தடுத்து இனங்காணக் கூடிய அச்சத்தைத் தனது படைபல நிர்வாகத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் முயற்சிகளை விளக்கி ஈழத்தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சிறப்புப் பிரதிநிதியை நியமிக்க கோருவது தாயக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளதும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டளர்களதும் கடமையென்பதை இலக்கு இவ்வாரத்தில் நினைவுறுத்த விரும்புகிறது.

Exit mobile version