Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள் இறைமையை முன்னிறுத்தல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...

ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள் இறைமையை முன்னிறுத்தல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 229

ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள்
இறைமையை முன்னிறுத்தல் அவசியம்

ஈழத்தமிழர்களின் ஏழு அரசியல் கட்சிகளும் 22 சிவில் மதத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஈழமக்களின் சமகாலப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடும் முயற்சி ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் 22ம் திகதி யாழ்ப்பாணத்தில் தொடங்கவுள்ளது. அதனை அடுத்துத் தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்ங்களில் கணிசமான கால இடைவெளியில் தொடர் போராட்டங்களாக சனநாயகவழிகளில் இப்போராட்டம் விரியவுள்ளது. முனைவர் க.சர்வேஸ்வரன், குருசுவாமி சுரேந்திரன், பாலசந்திரன் கஜதீபன், சேனாதிராசா கலையமுதன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய இளையோரை உள்ளடக்கிய போராட்ட ஏற்பாட்டுக் குழுவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தின் வரலாற்று இடங்கள் மேலும் வழிபாட்டுத்தளங்கள் மேலும் அவற்றின் இருப்பை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளும் பண்பாட்டு இனஅழிப்பும், மக்களுடைய வாழ்வாதார நிலங்களை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றும் இனத்துடைப்பும் இன்றைய ஈழமக்களின் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இக்கட்டமைப்பு இனங்கண்டு அதற்காகப் போராட முயற்சிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
அவ்வாறே ஈழத்தமிழ் மக்கள் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள இறைமைக்காகப் பேசினாலே அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கத் தக்க வகையில் சிறிலங்கா உருவாக்கியுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவும் இவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
1979 இல் ரணிலின் கிட்டிய உறவினரும் அரசியல் குருவுமான ஜே. ஆர் ஜயவர்த்தனா பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில விசாரணையேதுமின்றி எரிக்கவும் படையினருக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தின் ஆட்சியை படைபலத்தின் மூலம் முன்னெடுக்க முயன்று ரணிலினதும் ஜே. ஆரினதும் உறவினருமான பிரிகேடியர் கொப்பேகடுவவை யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விழிப்புணர்வுள்ள ஈழத்தமிழர்களைக் குறிப்பாக இளையவர்களை இனஅழிப்புச் செய்வதற்கு ஆறுமாதக் காலக்கெடு
கொடுத்து அனுப்பி வைத்தமை வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிகரமான முறையில் இந்த இனஅழிப்புக்காலப் பிரகடனக் கட்டளையின் பிரதிகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அனுப்பியதால் உலகுக்கு இந்த இனஅழிப்புத் திட்டம் வெளியான நிலையில் காலக்கெடுவை ஜே. ஆர் கைவிட்டாலும் இளம் அரசியல் விழிப்புணர்வாளர் இன்பத்தையும் அவரது மைத்துனரையும் அவர்களது வீட்டுள் புகுந்து கடத்திச் சென்று மண்டைதீவுக்குச் செல்லும் பாதையில் சந்தியில் வெட்டிப் போட்டு இனங்காணக்கூடிய அச்சத்தை ஈழத்தமிழர் வாழ்வுக்கு ஏற்படுத்தினர். இந்தச் செயற்பாடு அரசியல் விழிப்புணர்வுடன் செயற்பட்ட இறைகுமாரன் வரை தொடர்ந்து அதன் பின்னர் இன்றுவரை சிறிலங்காவின் படையினர் ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடமைகள் நாளாந்த வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தைக் கொடுத்து அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் சிறிலங்காவின் அரச கொள்கையாகவும் அரச கோட்பாடாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தனது அரசியல் குருவான ஜே. ஆர் ஜயவர்த்தனாவின் சிங்கள பௌத்த மேலாண்மை அரசியல் கனவுகளையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இன்றைய உலக ஒழுங்கினுள் நரித்தந்திரமான முறையில் நடைமுறைப்படுத்துவதையே இன்றைய சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தனது அரச செயற்பாடாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில்தான் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது முன்னையதை விட அதிக அளவில் ஈழத்தமிழர்கள் காரணமின்றி கைதாக்கப்படவும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படவும் நேர்ந்தால் அவர்கள் நீதி பெறுவதற்கான சட்டத்தின் ஆட்சிப்பாதுகாப்பை அவர்களுக்கு இழக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இறைமை குறித்து பேசினால் எழுதினால் சனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் மரணதண்டனைக்குரிய குற்றமாக அதனை மாற்ற வல்லதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயங்கரவாதச் சட்டம் மகிந்த கோட்டபாய சிந்தனையான ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் கொள்கையை நடைமுறைப்படுத்த வல்லதாக மிக நுணுக்கமான முறையில் வரையப்பட்டுள்ளது. தற்போது பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தச் சட்டம் தற்காலிகமாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டாலும், அனைத்துலக சட்டங்களுக்குத் தண்ணி காட்டக்கூடிய வார்த்தை ஜாலங்கள் சேர்க்கப்பட்ட பின் மீளவும் மே மாதத்தில் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவது உறுதி. இந்நிலையில் இந்தப் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குவதற்கு தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழ் மக்கள் தேசமாக எழ வேண்டிய காலத்தின் தேவையை தற்போதைய ஈழத்தமிழர் போராட்டக்குழு உணர்ந்து செயற்படுவது போற்றத்தக்கது.
ஈழத்தமிழர்கள் இன்று தாங்கள் நாளாந்தம் வாழ்வதற்கான பொறிமுறைகளையும் தங்களின் தாயக தேசிய தன்னாட்சித் தன்மைகளை மீளுருவாக்கம் செய்வதற்கான பொறிமுறைகளையும் உள்ளடக்கியதாகத் தங்களின் சனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நடைமுறை எதார்த்தத்தில் உள்ளனர். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு அரசியல் தளங்களில் அவர்கள் பயணிக்க வேண்டிய நெருக்கடியினை அவர்களுக்குத் தோற்றுவிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் படைபல அடக்குமுறைக்கு கீழ் வாழ்தல் என்பது இயல்புநிலையாக உள்ளதால் சிறிலங்கா அரசாங்கத்திடம் இவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்க வேண்டிய சட்ட வாழ்வியலில் இவர்கள் உள்ளனர். இந்த தப்பிப்பிழைக்கும் பொறிமுறை சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைகளுள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மக்கள் முயல்கையில் தாங்கள் இதில் தலையிடுவதற்கான சட்ட உரிமையில்லையென உலக நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்காவுக்கே நெறிப்படுத்தல்களையும் வழிப்படுத்தல்களையும் செய்ய வேண்டிய கடப்பாட்டை உருவாக்கும். இதனால் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எழுப்பிய “தன்னாட்சி பெறாத மக்களின் நாட்டெல்லையாக” ஈழமக்கள் தாயகத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டுமென்ற முக்கிய அரசியல் செயற்பாட்டுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட போராட்ட ஏற்பாட்டுக் குழு ஈழத்தமிழரின் இறைமையை முன்னிறுத்தும் வகையிலான வாசகங்களையும் தங்களின் கோரிக்கைகளில் கட்டமைத்தே போராட்டங்களை சனநாயகவழிகளில் முன்னெடுப்பது முக்கியமான தேவையாக உள்ளது என்பது இலக்கின் வலியுறுத்தலாக உள்ளது. இந்த மண் எங்களின் சொந்த மண் இங்கு எமக்கு இன்ன தேவை என்பது எந்த வகையிலும் பிரிவினைக் கோரிக்கையோ பயங்கரவாதத்தைத் தூண்டும் முயற்சியோ அல்ல என்பதை அனைவரும் மனதிருத்திச் செயற்பட வேண்டும் என்பது இலக்கின் விருப்பாக உள்ளது.

Exit mobile version