‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா. ‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 224

‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா.
‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம்.

2023ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாள் மார்ச் 8ம் நாள் ஐக்கியநாடுகள் சபையால் “இலக்கமுறையெல்லோருக்கும் – புத்தாக்கங்களும், தொழில்நுட்பமும் பால்நிலைச் சமத்துவத்துக்கே” (DigitAll : Innovation and technology for gender equality) என்னும் மையக்கருவுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வேகமாக இலக்கமுறை வாழ்வியலாக (Digital life) மனித வாழ்வே மாறி எண்ணிம (துடிம) தொழில்நுட்பம் (Digital Technology) கொண்டு எதனையும் செயற்படுத்தல் நாளாந்த வாழ்வியலாகி விட்ட நிலையில் இந்த இலக்கமுறைத் தொழில்நுட்ப அறிவியலும் பயன்பாடுகளும் எல்லாராலும் நாளாந்த வாழ்வில் பயன்படுத்தக் கூடிய வகையில் மக்களுக்கு பால்நிலைச் சமத்துவத்துடன் அளிக்கப்படல் என்பது சமகாலத்தின் தலைமைத் தேவையாக உள்ளது. இந்த ஆண்டு அனைத்துலகப் பெண்கள் நாளின் மையக்கரு இதனையே வலியுறுத்துகிறது.
இந்த இலக்கமுறை தொழில்நுட்ப வாழ்வியல் பங்கேற்பு, அறிவூட்டலாகவும் பயிற்சிகள் வழியாக வும் பெண்களுக்கு அளிக்கப்படுவது முக்கியமாக ஐ. நா. வால் விதந்துரைக்கப்படுகையில் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் இவ்விடயத்தில் புலம்பதிந்து உலகநாடுகளின் குடிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து உதவ வேண்டிய பொறுப்பான ஆண்டாக 2023-24 மாறுகிறது. இந்நேரத்தில் 1978 முதல் 2009 வரை உலகில் பெண்ணியம் அதற்குரிய முறையில் சட்டப்பாதுகாப்புப் பெற்ற நடைமுறை அரசாக தமிழீழ அரசு இலங்கை தீவில் விளங்கியது. ஈழத்தமிழ்ப் பெண்கள் தங்களின் பால்நிலைச்சமத்துவத்துக்கு சமுகத் தடையாக விளங்கிய சாதி ஆணாதிக்கம் வீட்டு வன்முறைகள் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாக மாற்றப்பட்ட நிலையில், பெண்களின் பொருளாதாரநிலைப் பால்நிலைச்சமத்துவத்துக்குத் தடையாக விளங்கிய ஆணின் குடும்பத்தினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சீதனம் கேட்டலும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வேலைவாய்ப்புக்களிலும் பால்நிலைச் சமத்துவம் பேணப்பட்டு, பெண்கள் எதிலும் தங்கள் விருப்பத் தெரிவை எவ்வித அழுத்தமுமின்றி முன்னெடுத்து வாழும் வாழ்வை 31 ஆண்டுகள் பால்நிலைச் சமத்துவத்துடன் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகப் பெண்கள் நாள் 31 ஆண்டுகளும் ஈழத்தமிழ்ப் பெண்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாகத் தமிழர் தாயகப் பள்ளிகளிலும் வேலைத்தளங்களிலும் பொதுவிடங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற மக்கள் இறைமையின் வெளிப்படான வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுடைய தாயகத்திற்கான பாதுகாப்பான அமைதியான ஆட்சியை நிலைநாட்டிட நடைமுறை அரசின் சீருடை தாங்கிய முப்படையிலும் மாலதி அங்கயற்கண்ணி போன்ற பேராற்றல் மிக்க படைத் தலைவிகளின் வழி பல்லாயிரக் கணக்கான மாவீராங்கனைகள் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கு முக்கிய பங்களிப்புக்களைச் செய்தமை வரலாறு. இதனை நன்றியுடன் நோக்கும் ஈழத்தமிழர்கள் ‘ஈழத்தமிழ்ப் பெண்களே ஈழத்தமிழ் மக்கள் இறைமையின் வலிமை’ என உலகுக்கு 2023 அனைத்துலகப் பெண்கள் நாளில் கூறி மகிழ்கின்றனர்.
2009 இல் ஒரு தீவுக்குள் இரு அரசுகள், என உலக படைதிறன் ஆய்வுகள் உட்பட உலக ஊடகங்கள் வெளிப்படுத்திய ஈழத்தமிழரின் நடைமுறையரசின் மேல் சிறிலங்கா நடத்திய இனஅழிப்பின் போது ஈழத்தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படைகளின் இராணுவ இலக்குகளாக்கப்பட்டு, மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதஉரிமைகள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இனவழிப்புக்குள்ளாக்கப்பட்டனர். ஆயினும் கடந்த 14 ஆண்டுகாலமாக அனைத்துலக பெண்கள் நாட்களின் பொழுது ஐக்கியநாடுகள் சபையால் ஈழத்தமிழ்ப்பெண்களை அத்தகைய நிலைக்கு உள்ளாக்கிய சிறிலங்கா அரசுக்கோ அதன் படைகளுக்கோ எதிராக அனைத்துலக சட்டங்கள் வழி தண்டனை நீதியையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகார நீதியையோ வழங்க முடியவில்லை. மாறாக கடந்த 14 ஆண்டுகளாக மீளவும் சிறிலங்கா அரசு ஈழத்தமிழ்ப் பெண்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வாதாரங்களுக்கும் குடும்பங்களுக்கும் இனங்காணக் கூடிய அச்சத்தை விளைவித்து அவர்களின் அரசியல் பணிவை ஆயுதபலம் கொண்டு பெறும் நாளாந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதனை புலம்பதிந்து வாழும் தமிழர்கள் உலகுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.
மேலும் சிறிலங்காப் பெண்களுக்கான 2023ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாள் கொண்டாட்டமாக “அவளே தேசத்தின் பெருமை” என்ற கருப்பொருளில் பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எஜ்ஜில் கொண்டாடி இலங்கைப் பெண்களின் கருணையையும் நேர்த்தியையும் உலக அளவிலும் உள்நாட்டிலும் வெளிப்படுத்திய மூன்று பெண்களுக்கு விருதளித்து மதிப்பளிக்கவும், 25 பெண் தொழில் முனைவோருக்கு அங்கீகாரமளித்துச் சான்றிதழ்களும் பரிசுகளும் சிறிலங்கா அரச அதிபரால் வழங்குவதற்கு யூ. என், எவ், பி.ஏ; நிதி அனுசரணை அளித்துள்ளது. இதனைப் பார்க்கையில் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களாக உலக நாடுகளில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் ‘ஈழத்தமிழ்ப் பெண்கள் ஈழமக்கள் இறைமையின் வலிமையாக உள்ளனர்’ என்பதை உலகுக்குத் தெளிவாக விளக்கும் செயற்றிட்டமொன்றை இந்த அனைத்துலக பெண்கள் நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு அனைத்துலகப் பெண்கள் நாள் வரை ஈழத்தமிழ்ப் பெண்களின் பேராற்றல்களையும் அவர்களின் தாயகத்தின் வரலாற்றுக்காலத்திற்கு முன்னதாக முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையை காத்திட அவர்கள் கொண்டுள்ள உறுதியையும் செய்து வரும் முயற்சிகளையும் வரலாற்றுப் பதிவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. அத்துடன் ஈழத்தமிழ் பெண்களும் தமிழர் தாயகத்தையும் அதில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் எல்லா முயற்சிகளிலும் அவர்களின் விருப்புகளையும் தீர்மானம் எடுக்கும் உரிமைகளையும் பயன்படுத்த ஐ.நா. அனுமதிக்கவும், பலநிலைகளில் அதீத மனிதாய தேவைகளில் உள்ள அவர்களுக்கு அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் இறைமையை மீறி நேரடியாக ஐ.நா. உதவவும், ஐக்கிய நாடுகள் சபைக்கு சனநாயக ரீதியில் அழுத்தங்களை புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் கொடுக்க வேண்டுமென்பது இலக்கின் தொடர் வேண்டுகோளாக உள்ளது.

Tamil News