Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வென்னும் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் நோக்கு மாறவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் |...

ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வென்னும் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் நோக்கு மாறவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 219

ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வென்னும்
சிறிலங்காவினதும் இந்தியாவினதும் நோக்கு மாறவேண்டும்

சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 14.11.1987ம் திகதியன்று, நிதி என்னும் அரசியலமைப்பின் 17வது அத்தியாயத்தின் 17அ பிரிவாக, 13வது திருத்தத்தால், நிதி நிர்வாகப் பரவலாக்கலுக்காக மாகாணசபைகள் தாபிக்கப்பட்டன. இந்த 13வது திருத்தம் சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்ளதால் அதனை நடைமுறைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரமுள்ள அரசத்தலைவரான தனது கடமையென இன்றைய சிறிலங்காவின் அரசத்தலைவர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்து இதனை நடைமுறைப்படுத்தும்படி கொடுத்த இந்திய அழுத்தத்திற்குப் பதில் அளித்துள்ளார். இதன்வழி இந்தியா அனைத்துலக நாணய நிதியத்தின் கடனைச் சிறிலங்கா விரைவில் பெற உதவும் என்பது ரணிலின் ராஜதந்திர எண்ணமாகவுள்ளது. இந்த ரணிலின் நரித்தந்திர அரசியலைப் புரிந்து கொள்ளாது, கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுசனபெரமுனையின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் ஆகியோர் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசத்தலைவருக்கு மக்களாணையில்லை இதனை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் பிரிவினைவாதிகள் பலம்பெறுவர் என எதிர்க்கருத்துக்களை முன்வைத்ததும் தனக்குச் சிங்கள பௌத்த பேரினவாத ஆதரவு இழப்பு ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கிறார்கள் என உணர்ந்த அரசத்தலைவர் “இந்த மாகாணசபைகளுக்கு இலண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட இல்லை. 13வது திருத்தம் சிறிலங்காவின் அரசியல் அமைப்பில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களால் அரசத்தலைவராக ஆணைபெற்ற சட்டரீதியான நிறைவேற்று அதிகாரமுள்ள நான் அதனை நிறைவேற்றுவதை எனது கடமையாகக் கருதுகின்றேன். இதனை எதிர்ப்பவர்கள் எதிர்வரும் பெப்ருவரி 8ம் திகதி பாராளுமன்றம் கூடும் பொழுது 22வது திருத்தத்தை தனியாள் கோரிக்கையாக மீளவும் கொண்டுவந்து வெற்றியீட்டி அரசியலமைப்பில் இருந்து 13வது திருத்தத்தை நீக்க முயற்சியுங்கள்” என விளக்கம் அளித்து ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வாக இலங்கையும் இந்தியாவும் இணைந்து கொண்டு வந்த 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இன்றைய நிதி நெருக்கடியில் இருந்து தான் நாட்டை விடுவிக்க விரும்புவதைத் தெட்டத் தெளிவாக்கினார்.
சிங்கள பௌத்த பேரினவாதம் எந்தச் சிறிய விடயத்தையும் கூட பாராளுமன்றத்தால் தடுக்கும் வகையிலேயே சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தைச் சிறிலங்கா தனதாகக் கொண்டுள்ளது என்பதும் ரணிலின் உரையால் உறுதி செய்யப்பட்டது. மாகாணசபைகளுக்குச் சிறிய அதிகாரம் வழங்குதல் என்பதும் கூட பௌத்த சிங்கள பேரினவாதத்தை மீறி நடக்க இயலாததொன்று என்பது அனைத்துக்கட்சி மாநாட்டில் மீளவும் தெட்டத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரணிலின் கட்டம் கட்டமாகச் செய்தல் என்பதற்கு அவருக்கு அதனை எவ்வாறு செய்யலாம் என சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றியுணர்வுடனும் நீதியரசர் விக்னேஸ்வரன் கொழும்பு நட்புணர்வுடனும் செயற்பாட்டுப் பாதைவரைபடம் அமைத்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் இன்று ஈழத்தமிழர்களுக்கு எந்த சிறு அதிகாரமும் இல்லாத நிலையில் தப்பிப்பிழைப்பதற்கான பொறிமுறை இந்த 13வது திருத்த நடைமுறையே என இந்தியாவுடன் இணைந்து பல தமிழ் அரசியல்வாதிகளும் விளக்கமும் அளிப்பார்கள். சம்பந்தர் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெறும் கனவில் “ஈழத்தமிழர்களுக்கு நீண்டகாலமாக வாழ்பவர்கள் என்ற வகையில் தன்னாட்சி உரிமையுண்டு என முணுமுணுத்துவிட்டு நாங்களும் தன்னாட்சிக் காவலர்களே எனத் தேர்தல் களத்தில் குதிக்க ஆயத்தமாகியுள்ளார். இதற்கு அவர் என்ன செய்தார் என்று சிந்தித்தே மக்கள் வாக்களிக்க வேண்டும். இதுதான் ஈழத்தமிழர்கள் ஓரணியில் அரசியல் தலைமைத்துவம் பெறாததின் நிலை. இதற்கிடை அனைத்துலக நாணயநிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது போலக் காட்டுவதற்காக ரணில் ‘காணி விடுவிப்புக்கு நடவடிக்கை’ எனக் கூறிய உடனேயே மகாநாயக்க தேரர்கள் பௌத்த விகாரைகள் படையினராலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறதெனவும் வடக்குகிழக்கில் உள்ள ஆதரவற்றவர்களை மையப்படுத்தி நடைபெறும் பௌத்தர்களாக்கும் முயற்சிகளுக்கு படையினரே பாதுகாப்புத் தருகிறார்கள் எனவும் ஆதலால் படையினர் விலக்கப்படக்கூடாது அவர்கள் நிலைகொண்டுள்ள காணிகள் விடுவிக்கப்படக்கூடாது” என அழுத்தம் திருத்தமாக ஆணைக்கடிதம் அனுப்பியுள்ளனர். இது வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பது பௌத்த மயமாக்கலுக்கும் சிங்களமயமாக்கலுக்குமான சிறிலங்காவின் அரசியல் செயற்றிட்டம் என்பதை மீளவும் உலகிற்குத் தெட்டத் தெளிவாக்கியுள்ளது
மேலும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்காவிடம் வேண்டுவதே இந்தியா முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பைச் சிறிலங்கா செய்தமைக்கு மாற்றாக இதுவரை கூறிவந்த இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்தல் என்பதற்கான பொருள் என்பதைக் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மாண்பமை ஜெயசங்கர் அவர்கள் மிகத் தெளிவாகத் தன்னைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்கூறி அதனை ஆரம்பமாக ஏற்று முன்னேறுமாறு விதந்துரையும் செய்துள்ளார். மாகாணசபைகள் என்பது நிறைவேற்று அதிகாரம் உள்ள சிறிலங்காவின் அரசத்தலைவருடையதும் அவரால் நியமிக்கப்படும் ஆளுநரினதும் தலைமையில் இலங்கையின் எட்டு மாகாணங்களாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் எட்டாம் அட்டவணை (உறுப்புரிமை 154 அ) இல் விதந்துரைக்கப்பட்ட மேற்கு மாகாணம், வடமேற்கு மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், தெற்கு மாகாணம், வடமத்திய மாகாணம், வடமாகாணம் ஆகியவற்றின் மாகாணசபைகளின் உறுப்பினர்களாக மக்களால் தெரிவுசெய்ப்படும் உறுப்பினர்களால் உருவாக்கப்படும் ஐந்துக்கு மேற்படாத மாகாணசபை அமைச்சர்களை கொண்ட சபை. இதனால் உருவாக்கப்படும் சட்டங்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பையோ பாராளுமன்றச் சட்டங்களையோ பாதிக்காதனவாக இருப்பது மட்டுமல்லாது ஆளுநருக்கோ அரசத்தலைவருக்கோ சபைநடவடிக்கைகள் திருப்தி அளிக்காவிட்டால் எந்த நேரத்திலும் சபை கலைக்கப்படலாம். இந்த மாகாணசபை ஈழத்தமிழர்களுக்கு எனச் சிறப்பாக எதனையும் இன்று கொண்டிருக்கவில்லை. எந்த அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் அவர்களுக்கு வழங்கும் ஒன்றுமல்ல. சிறிலங்காவின் நிதி நிர்வாகப் பரவலாக்கலுக்கான பொருளாதாரக் கட்டமைப்பு மட்டும்தான். முதலீடுகளை நிர்வகிக்க அதிகாரங்களும் பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களுமே வழங்கப்படும். இதனை ஏற்று ஆரம்பப்புள்ளியாக வைத்து ஈழத்தமிழர்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளை பெற வேண்டும் என எப்படி மாண்பமை இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார் என்பது விளக்கமற்ற ஒன்றாக உள்ளது. சீனாவின் வடக்கு கிழக்கு மேலான நில முதலீடுகளைக் கட்டுப்படுத்தவும் நிதி மேலாண்மையைக் கட்டுப்படுத்தவும் வடக்கு மாகாணசபையோ கிழக்கு மாகாணசபையோ இந்தியாவால் நெறிப்படுத்தப்படலாம். அந்த வகையில் 13வது திருத்தம் முழுஅளவில் நடைமுறைப்படுத்தப்படுவது 35 ஆண்டுகளாக செயற்படுத்தப்படாது இருக்கும் இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு மீட்டுயிர்வாக்கம் செய்யும் என்று நேர்மையாகக் கூறினால் இந்தியா இதனைக் கோருவதன் நோக்கை ஈழத்தமிழர்கள் விளங்கிக் கொள்வர்.
இந்திராகாந்தி அவர்களால் ஈழத்தமிழர்களுடைய இருப்புக்காக அவர்களின் அதீத மனிதாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வல்வெட்டித்துறையின் மேல் சிறிலங்காவின் இறைமையை மீறி இந்திய உலங்குவானூர்திகளால் உணவுப் பொட்டலங்கள் போட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகநாடுகளின் தலையீடு முக்கியமெனக் காட்டிய வரலாற்றையும், ஈழத்தமிழர்களுக்கு ஆயுதஎதிர்ப்பு சக்தி தேவையென தமிழ்ப்போராளிகளுக்கு இந்திரா காந்தி அவர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இமயமலைச்சாரல் வரை இந்தியா போர்ப்பயிற்சிகள் அளித்த வரலாறுகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஆர்ஜென்டினாவைக் கொண்டு 1983 ஆடிக்கலவரத்துக்கான அனைத்துலக நீதியைப் பெறுவிக்க இந்தியா முயன்று அனைத்துலகப் பிரச்சினையாக ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்திய வரலாற்றையும், சிறிலங்காவின் இறைமை எல்லைக்கு வெளியே திம்புவில் தமிழ்ப்போராளிகளும் சிறிலங்கா அரசும் சமபங்காளர்களாகத் திம்பு பேச்சுக்கள் நடைபெற வழிகாட்டி ஈழத்தமிழர்களின் இறைமையின் தனித்துவத்தை இந்தியா உலகுக்கு வெளிப்படுத்திய வரலாற்றையும், மாண்பமை இந்திய வெளிவிவகார அமைச்சர் நினைவு மீட்டல் செய்வாராக இருந்தால் இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களும் 13வது திருத்தத்தையே இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்குரிய அடித்தளமாகக் கொண்டிருந்தனர் என்ற அவரின் கூற்றின் அறியாமை விளங்கும் ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வே இலங்கை இந்தியாவின் நோக்காக இருப்பதே ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணஇயலாமையின் மூலகாரணமாக உள்ளது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதே இலக்கின் செய்தியாக உள்ளது.

Exit mobile version