பயங்கரவாதம், பிரிவினை, 13வது திருத்தம் என்பன ஈழத்தமிழர் இறைமையை இழக்கவைக்கக் கையாளப்படும் உத்திகள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 218

பயங்கரவாதம், பிரிவினை, 13வது திருத்தம் என்பன ஈழத்தமிழர் இறைமையை இழக்கவைக்கக் கையாளப்படும் உத்திகள்

ஈழத்தமிழர்களுடைய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் குறித்த உலகளாவிய அக்கறையும் ஆர்வமும் சிறிலங்காவின் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பை அடுத்து உலக மக்களிடையே இயல்பாகவே அதிகரித்துள்ளமை சமகால வரலாறு. ஆனால் சிறிலங்காவுக்குக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் 1948 இல் வழங்கிய ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்குள் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாத சோல்பரி அரசியல் அமைப்பால் இணைத்து வழங்கிய சுதந்திரமே, கடந்த 75 ஆண்டுகளாக சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஈழத்தமிழ் மக்களுக்கான அனைத்துலகச் சட்டப்பாதுகாப்புக்களையும் அனைத்துலகநாடுகளின் அனைத் துலக அமைப்புக்களின் நேரடி உதவிகளையும் அவர்கள் பெற முடியாதவகையில், உள்நாட்டுப் பிரச்சினையாக அவர்களின் தேசியப் பிரச்சினையை உலகு பார்க்க வைக்கிறது. இதனாலேயே ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஐக்கியநாடுகள் சபையினால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய அனைத்துலக காலனித்துவகாலப் பிரச்சினையாகவே தொடர்கிறதென ஈழத்தமிழர்கள் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த 75வது ஆண்டில் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சட்டஅறிஞருமான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் சிறிலங்காவில் ஜனநாயக அரசு செயற்படவில்லை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் சர்வாதிகாரமே செயற்படுகிறது எனவும் இதனை உலகம் கண்காணிக்க வேண்டுமெனவும், தான் எழுதிய சட்டநூல்கள் ஆக்கங்கள் அத்தனையையும் குப்பைத் தொட்டிக்குள் போடுமாறும் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை ஈழத்தமிழர்கள் அனைத்துலக தலையீட்டைக் கோருவதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது. இதன் அடிப்படையிலாவது உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் சிறிலங்காவால் உள்ளகபொறிமுறையில் எதனையும் செய்ய இயலாதென்ற உண்மையை ஏற்று வெளியகபொறிமுறைகள் வழி ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என உலகமக்கள் இனமாக உள்ள புலம்பதிந்து வாழும் தமிழர்கள் உலகநாடுகளையும் அமைப்புக்களையும் கோர வேண்டும்.
அத்தோடு இந்தப் பிரிவினை, பயங்கரவாதம், என்னும் தவறான அரசியல் சொல்லாடல்களைச், சிறிலங்கா, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்றுவரை இலங்கையில் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுள்ள மக்களாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுக்கான சனநாயக ரீதியிலான அரசியல் போராட்ட உரிமைகளை மறுத்து அரசபயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்களின் இறைமையை இழக்கவைக்கும் உத்திகளாகவே கையாண்டு வருகின்றது என்பதை உலகுக்குத் தெளிவாக்க வேண்டும்.
மேலும் இந்தியா இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு சிறிலங்கா அரசியல் அமைப்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1987இல் செய்யப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாகச் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வைப்பதே ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக எந்த ஆட்சியாளர்கள் டில்லியில் இருந்தாலும் முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் தான் ஈழத்தமிழர்களின் இன்றைய சிறிலங்காப் பாராளுமன்றத் தலைமைகளைச் சந்தித்த பொழுது தெளிவாகக் கூறி, அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை ஏற்காவிட்டால் வேறு எதனையும் பெற இயலாது எனவும் அடித்துக் கூறி 13வது திருத்தத்தை ஏற்று அதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து மற்றைய அதிகாரப்பரவலாக்கலுக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையில் பிராந்திய மேலாண்மை என்ற அதிகாரப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அவர்களின் தன்னாட்சி உரிமையை மறுத்து தனது முடிவுகளை ஈழத்தமிழர்கள் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடு கொண்டதாகவே இந்தியா உள்ளது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.
1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கை கையெழுத்து இடப்பட்ட பொழுது இருந்த ஈழத்தமிழரின் அரசியல் எதார்த்தம் வேறு. முள்ளிவாய்க்கால் சிறிலங்கா இனஅழிப்பின் பின்னதான இன்றைய அரசியல் எதார்த்தம் என்பது வேறு. இன்று ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது, அவர்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்குமான உறுதிப்படுத்தலாக உள்ளது. 1987இல் சிறிலங்காவின் நிர்வாகப்பரவலாக்கலை மாகாணசபைகள் வழி நடைமுறைப்படுத்தச் செய்யப்பட்ட 13வது திருத்தம் இன்றைய சமகால ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளில் எதனைத் தீர்க்கும்? 13வது திருத்தம் ஈழத்தமிழர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் என்பது ஈழத்தமிழர்களின் இறைமையை இழக்க வைக்கும் இந்தியாவின் உத்தியாகவே அமைகிறது. மேலும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறிலங்காவின் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனிதஉரிமைகள் வன்முறைகள் குறித்த அனைத்துலக விசாரணையில் இருந்து குற்றமிழைத்த சிங்களத் தலைமைகளையும் படையினரையும் பாதுகாக்கும் இந்திய முயற்சியாகவும் இதனை ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் கருதுகின்றனர். 13வது திருத்தம் என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டதுமே விமல் வீரவன்ச உட்பட்ட சிங்கள அரசியல்வாதிகள் பலரும் இது பிரிவினைக்கு வித்து என இனவெறிக் கருத்துக்களையும் சிங்கள பௌத்தமதவெறிக் கோசங்களையும் தொடங்கியுள்ளமை ஈழத்தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத்தீவில் வாழ்ந்து வரும் இருப்பையே சிங்கள அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கும் செயலாகி, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதை உறுதி செய்கிறது.
இந்நிலையில் தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமை குறித்த சான்றாதாரங்களை உலக மக்கள் முன் ஒரே குரலாக ஒரு அணியில் உறுதியுடன் எடுத்துரைத்தால் மட்டுமே பிரிவினை, பயங்கரவாதம், 13வது திருத்தம் என பலநிலைகளில் ஈழத்தமிழரின் இறைமையை இழக்க வைக்க எடுக்கப்படும் முயற்சிகளில் இருந்து ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது. இதனை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் செய்யாது விட்டதே இன்றுவரை இறைமையிழப்பு தொடரக்காரணமாகிறது.

Tamil News